பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் ஒருவழியாக பதவியேற்று விட்டார்.
இருபது ஆண்டு கால அரசியல் போராட்டத்துக்குப் பிறகு, பாகிஸ்தானின் தலைமைப் பதவி அவரது கைகளுக்குக் கிட்டியிருக்கிறது.
இருந்தாலும், கிரிக்கெட் களத்தில் பந்துகளை விளாசியதைப் போலவோ, விக்கெட்டுகளை வீழ்த்தியது ஆட்சிக் களம் அவருக்கு எளிமையாக இருக்கப் போவதில்லை.
பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக, இம்ரான் எதிர்கொண்டுள்ள சவால்கள் எண்ணற்றவை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
அந்த நாட்டின் உண்மையான அதிகார மையம் என்று கூறப்படும் ராணுவத்தின் ஆதரவுடன்தான் இம்ரான் ஆட்சியைப் பிடித்தார் என்பதை மறுப்பவர்கள் வெகு சிலரே இருக்க முடியும்.
அவரைத்தான் அடுத்த பிரதமராக்க வேண்டும் என்ற முடிவுடன் ராணுவம் காய்களை நகர்த்தியது, பல சம்பவங்களில் வெளிப்படையாகத் தெரிந்தது.
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கும், அவரது மகளுக்கும் சிறைத் தண்டனை கிடைத்தது, மறைந்த முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோவின் கணவரும், முன்னாள் அதிபருமான ஆசிஃப் அலி ஜர்தாரி மீதான பொருளாதாரக் குற்ற வழக்குகள் பதிவானது, ராணுவத்தின் சார்பு நடவடிகக்கைகளை விமர்சித்த ஊடகங்களை அடக்கியது என சொல்லி வைத்தது போல் இம்ரானுக்கு சாதகமான சம்பவங்கள்அடுத்தடுத்து அரங்கேறின.
இந்தச் சூழலில்தான், எதிர்பார்த்தது போலவே தேர்தலில் தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்து, சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் மிக எளிதாக ஆட்சியமைத்து விட்டார் இம்ரான்.
இருந்தாலும், இனிமேல்தான் அவர் உண்மையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
தேர்தலில் எவ்வளவுதான் ராணுவம் உதவி செய்திருந்தாலும், இம்ரானின் 20 ஆண்டு கால அரசியலில் ஊழலுக்கு எதிராக அவர் நடத்திய போராட்டம் அவருக்கு மக்களிடையே நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
மேலும், பாகிஸ்தானின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் இதுவரை ஆண்ட அரசியல் கட்சிகள்தான் காரணம் என்ற எண்ணமும் கணிசமான பாகிஸ்தானியர்களின் மனங்களில் படிந்து விட்டது.
அவர்களுக்கு மிகச் சிறந்த மாற்றாக அவர்கள் இம்ரானைக் கருதியதால்தான், அவருக்கு வெற்றிக் கனியை அளித்தார்கள் என்று கூறுபவர்களும் உண்டு.
அந்த வகையில், இம்ரான் மீது பாகிஸ்தான் மக்கள் வைத்துள்ள அதீத நம்பிக்கையும், எதிர்பார்ப்புமே அவருக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும்.
பொருளாதார ரீதியில், பாகிஸ்தானின் நிலை மிகவும் அபாயகரமானதாக உள்ளது. பல கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் அந்த நாட்டை, பொருளாதார அழிவிலிருந்து காப்பாற்றுவது இம்ரானின் முக்கிய கடமைகளில் ஒன்றாக இருக்கும்.
மேலும், போராட்ட குணம் கொண்டதாக மாறியிருக்கும் நீதித் துறையையும் அவர் எதிர்கொண்டாக வேண்டும்.
பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை பாகிஸ்தான் நன்றாகவே உணர்ந்து வருகிறது. ஏற்கெனவே அங்கு குடிநீர் பிரச்னை ஆரம்பமாகிவிட்டது. இதுபோன்ற விவகாரங்களையும் இம்ரான் கான் சமாளித்தாக வேண்டும்.
அதுமட்டுமன்றி, உள்நாட்டு பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் பல ஆண்டுகள் போராடிப் பெற்ற வெற்றியைத் தக்க வைக்கும் தலையாய கடைமை இம்ரானுக்கு உள்ளது.
எல்லாவற்றையும் விட முக்கியமாக, அண்டை நாடுகளான இந்தியா, ஆப்கானிஸ்தானுடனும், அமெரிக்காவுடனும் இம்ரான் அரசு எவ்வாறு உறவைப் பேணப் போகிறது என்பதில்தான் இந்தப் பிராந்தியத்தின் எதிர்காலமே அடங்கியிருக்கிறது.
ராணுவத்தின் உதவியுடன் ஆட்சி அமைக்கும் போதிலும், இந்தியா-ஆப்கானிஸ்தான்-அமெரிக்கா நாடுகளுடன் உறவை பலப்படுத்தப் போவதாக இம்ரான் வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார்.
அதற்கு அச்சாரமாக, ஆப்கன் அரசுடன் இணக்கமான சூழலை அவர் ஏற்கெனவே ஏற்படுத்தியிருந்தார். இம்ரான் வெற்றி பெற்றதும் அந்த நாட்டு அதிபர் அஷ்ரஃப் கனி முந்திக் கொண்டு வாழ்த்து தெரிவித்ததே இதற்கு சாட்சி.
இருந்தாலும், இந்த மூன்று நாடுகளுடனும் உறவை வலுப்படுத்துவற்கு ராணுவத்தின் ஒத்துழைப்பைப் பெறுவதுதான் இம்ரானுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும்.
அந்தச் சவாலையும் எதிர்கொண்டு, ராணுவத்தின் ஆதரவை அவரால் பெற முடிந்தால், இதுவரை எந்த அரசியல் தலைமையாலும் செய்ய முடியாததை செய்து காட்டிய சாதனையாளராக இம்ரான் பரிணமிப்பார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தலைக்கு மேல் தொங்கிய கத்தி கழுத்துக்கு வந்துவிட்டது: தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர்!

தொகுதி மறுவரையறை! முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


