பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

அமெரிக்காவுக்கு எதிராக வட கொரியாவை சீனா தூண்டுகிறது

தங்களுக்கு எதிராக வட கொரியாவை சீனா தூண்டிவிடுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

வாஷிங்டன்: தங்களுக்கு எதிராக வட கொரியாவை சீனா தூண்டிவிடுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்கா - சீனா இடையே எழுந்துள்ள வர்த்தகப் பதற்றத்தை மனதில் கொண்டு சீனா இவ்வாறு செயல்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அமெரிக்காவுடன் தற்போது நீடித்து வரும் வர்த்தகப் பதற்றத்தை மனதில் கொண்டு, அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும்படி வட கொரியாவுக்கு சீனா கடும் நிர்பந்தம் கொடுத்து வருவதாக அதிபர் டிரம்ப் உறுதியாக நம்புகிறார்.
அதுமட்டுமின்றி, பணம், எரிபொருள், உரம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வட கொரியாவுக்கு சீனா வாரி வழங்கி வருகிறது. எனினும், இதுபோன்ற உத்திகள் பலனளிக்கப்போவதில்லை.
இத்தனைக்கும் இடையிலும், வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உனுடனான உறவு நல்ல முறையிலும், சுமூகமானதாகவுமே உள்ளதாக அதிபர் டிரம்ப் நம்புகிறார்.
அதனால்தான், வட கொரியாவுக்குப் பிடிக்காத அமெரிக்க - தென் கொரியா கூட்டு ராணுவப் பயிற்சியை நடத்தி, வீண் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று முடிவு செய்யப்பட்டது.
எனினும், அதிபர் விரும்பினால் தென் கொரியாவுடனும், ஜப்பானுடன் இணைந்து எப்போது வேண்டுமானாலும் கூட்டு ராணுவப் பயிற்சியை அமெரிக்காவால் மேற்கொள்ள முடியும். அவ்வாறு பயிற்சி நடைபெற்றால், அந்தப் பயிற்சி இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமானதாக இருக்கும்.
சீனாவுடனான வர்த்தகப்  பதற்றம் மற்றும் பிற கருத்து வேறுபாடுகளுக்கு அந்த நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்குடன் இணைந்து நிச்சயம் தீர்வு காண்போம். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு தொடர்ந்து வலுவாகவே உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, இந்த வாரம் நடைபெறுவதாக இருந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பம்பாயேவின் வட கொரிய சுற்றுப் பயணம் ரத்து செய்யப்பட்டதற்கும், அதிபர் டிரம்ப் சீனாவைக் காரணம் காட்டிப் பேசியது நினைவுகூரத்தக்கது.
தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகளை வட கொரியா கடந்த ஆண்டின் இறுதிவரை தொடர்ந்து நடத்தி வந்தது.
இதற்குப் பதிலடியாக, வட கொரியா மீது ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலும், அமெரிக்காவும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதனால், வட கொரியாவுக்கும், அமெரிக்க-தென் கொரிய கூட்டணிக்கும் இடையே கடும் பதற்றம் நிலவி வந்தது.
இந்தச் சூழலில், தென் கொரியாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் வட கொரியா பங்கேற்றதைத் தொடர்ந்து, இரு கொரிய நாடுகளுக்கும் இடையே பதற்றம் தணிந்து இணக்கமான சூழல் ஏற்பட்டது.
அதன் தொடர்ச்சியாக,  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் ஆகியோரிடையிலான சந்திப்பு சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ஆம் தேதி நடைபெற்றது.
அப்போது, அமெரிக்கா - வட கொரியா இடையே புதிய நட்புறவை ஏற்படுத்துவது, கொரிய தீபகற்பத்தில் நிரந்தர அமைதி, ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பிரதேசமாக்குவது உள்ளிட்ட 4 அம்ச தீர்மானத்தில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.
எனினும், இந்த ஒப்பந்தத்துக்கு செயல்வடிவம் கொடுப்பதில் இரு நாடுகளுக்கும் இடையே இழுபறி நீடித்து வருகிறது.


பொறுப்பற்ற, அபத்தமான குற்றச்சாட்டு!


வட கொரியா விவகாரத்தில் சீனா மீது டிரம்ப் சுமத்தியுள்ளது பொறுப்பற்ற, அபத்தமான குற்றச்சாட்டு என சீனா கூறியுள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சன்யிங் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
வட கொரியாவை சீனா நிர்பந்திப்பதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளது, உண்மைகளைத் திரித்துக் கூறுவதிலும், பொறுப்பற்ற, அபத்தமான குற்றச்சாட்டுகளை சுமத்துவதிலும் உலகிலேயே அமெரிக்காதான் மிகச் சிறந்த நாடு என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  இந்த விவகாரம் குறித்து டிரம்ப் கூறியுள்ள கருத்தை யாரும் அவ்வளவு எளிதில் விளங்கிக் கொள்ள முடியாது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.