மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பாகிஸ்தான் VS ராணுவம்?

பாகிஸ்தானில் இன்று நடைபெறும் பொதுத் தேர்தல், வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கிடையிலான போட்டி என்பதைவிட, அந்த நாட்டின் ஜனநாயகத்துக்கும்,

News image
Updated On :24 ஜூலை 2018, 7:23 pm

பாகிஸ்தானில் இன்று நடைபெறும் பொதுத் தேர்தல், வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கிடையிலான போட்டி என்பதைவிட, அந்த நாட்டின் ஜனநாயகத்துக்கும், ராணுவ ஆதிக்கத்துக்கும் இடையிலான போட்டி என்கிறார்கள் பார்வையாளர்கள்.
சர்வதேச அளவில் இந்தத் தேர்தல் ஒரு நெருடலை ஏற்படுத்தியிருப்பதில் வியப்பில்லை.
ஆனால், நாடு உருவான நாள் முதலே ராணுவத்தின் மேலாதிக்கத்தைக் கண்டு புளித்துப் போயிருக்கும் பாகிஸ்தானியர்களே இந்தத் தேர்தல் குறித்து சர்ச்சையை எழுப்பியிருப்பதுதான் குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே, பாகிஸ்தான் மக்கள் கட்சி, முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சி ஆகியவற்றுக்கு ராணுவம் மறைமுக ஆதரவு அளித்தது உலகறிந்த ரகசியம் என்றாலும், இந்த முறை முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்ஸாஃப் கட்சியின் தலைவருமான இம்ரான் கானை முன்னிறுத்தி காய் நகர்த்தும் ராணுவத்தின் நடவடிக்கைகள் வெளிப்படையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறன.
இதுவரை ஆட்சியிலிருந்த நவாஸ் ஷெரீஃபின் கட்சி மட்டுமன்றி, பல்வேறு கட்சித் தலைவர்களும் இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.
தேர்தலுக்கு முன்னர் நடைபெற்ற பேரணிகளின்போது கூட எதிர்க்கட்சிகளுக்கு எதிரான கோஷங்கள் எழுப்புவதற்கு பதில், ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு எதிரான கோஷங்களை தொண்டர்கள் எழுப்பியதே இதற்கு ஒரு சான்று.
முத்தாய்ப்பாக, ராவல்பிண்டி பார் கவுன்சில் கடந்த சனிக்கிழமை நடத்திய கூட்டத்தில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஷெளகத் அஜீஸ் சித்திக்கி இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
அந்தக் கூட்டத்தில், நீதித் துறையின் நடவடிக்கைகளில் ராணுவ தலைமைத் தளபதியும், ஐஎஸ்ஐ-யும் தலையிடுவதாக அவர் நேரடியாகக் குற்றம் சாட்டியிருந்தார். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டபோது, அவரது கட்சியினரும் இதே குற்றச்சாட்டைக் கூறியது குறிப்பிடத்தக்கது.
நீதித் துறை ஒருபுறமிருக்க, ஜனநாயகத்தின் மற்றொரு தூணாகக் கூறப்படும் ஊடகங்களையும் ராணுவம் விட்டுவைக்கவில்லை என்கிறார்கள் இந்த விவகாரத்தை தொடர்ந்து கவனித்து வருபவர்கள்.
பாகிஸ்தான் அரசியலில் ராணுவம் மற்றும் அதன் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ-யின் தலையீடு குறித்து கேள்வியெழுப்பிய அந்த நாட்டின் மிகப் பிரசித்தி பெற்ற ஜியோ டிவி இரண்டு வாரங்களுக்கு முடக்கப்பட்டது.
மேலும், தி நியூஸ்' நாளிதழும் ராணுவத்தை விமர்சிக்கும் இரு எழுத்தாளர்களின் கட்டுரைகளை வெளியிடாமல் இருப்பதற்கு நிர்பந்திக்கப்பட்டது.
பாபர் சத்தார், முஷாரஃப் ஸாய்தி ஆகிய அந்த இரு எழுத்தாளர்களும் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானின் தூண்டுதலின் பேரில் பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படுவதாக ராணுவம் குற்றம் சாட்டியது.
இத்தனை எதிர்ப்புகள் மற்றும் கண்டனங்களுக்கிடையிலும், பாகிஸ்தான் அரசியலில் தனது செல்வாக்கை விட்டுக்கொடுக்க விரும்பாத ராணுவம், இம்ரான் கானை பிரதமராக்க விரும்புவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கெனவே, தங்களது ஆதரவைப் பெற்று ஆட்சியமைத்த பிறகும் தங்களுக்கு எதிராகத் திரும்பிய பேநசீர் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி ஆகியவற்றுக்கு மாற்றாக, இம்ரான் கான்தான் தங்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்வார் என்று ராணுவம் நம்புவதாகக் கூறப்படுகிறது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் பாகிஸ்தான் ராணுவம், தேர்தலிலோ, நீதித் துறையிலோ தாங்கள் தலையீடு இல்லை என்று அடித்துக் கூறுகிறது.
மேலும், நீதித் துறையில் ராணுவத்தின் தலையீடு இருப்பதாக உயர் நீதிமன்ற நீதிபதி சித்திக்கி கூறிய புகார் குறித்து விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றத்தை ராணுவம் கோரியுள்ளது, இந்த விவகாரத்தில் ஒளிவு மறைவற்ற ஆய்வுக்கு ராணுவம் தயாராக இருப்பதைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
இம்ரான் கானும், தனக்கு ராணுவம் உதவியளிப்பதாகக் கூறப்படுவதை பொய்யாக்கும் வகையில், தனது இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது சில கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
காஷ்மீர் விவகாரத்தில் முந்தைய அரசுகள் சரியான வகையில் நடந்து கொண்டுள்ளதாகவும், இந்தியாவுடன் பாகிஸ்தான் நல்லுறவைப் பேண வேண்டியது மிகவும் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், தனக்கு ஆதரவாக தேர்தலில் முறைகேடுகள் நடைபெறாது என்று உறுதியளித்த அவர், ஆட்சிக்கு வந்த பிறகு முந்தைய தேர்தல்களில் நடைபெற்ற முறைகேடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவரப் போவதாகவும் சூளுரைத்தார்.
இந்தச் சூழலில், இரு தரப்பினரும் கூறுவதில் எது சரி? எது தவறு? என்பதை பாகிஸ்தான் வாக்காளர்கள்தான் முடிவு வேண்டும்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.