சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு! ஆக.18-ல் சீன முன்னாள் பிரதமரின் இறுதிச்சடங்கு அரவிந்த் கேஜரிவாலுக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துபெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!சுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வெப்ப அலை: 16,000 பேர் பலிஆவணி மாத பூஜை: சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு
/

ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் முறிவு: டிரம்பின் முடிவுக்கு ஒபாமா கடும் எதிர்ப்பு

ஈரானுடன் அமெரிக்கா மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முடிவுக்கு முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

ஈரானுடன் அமெரிக்கா மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முடிவுக்கு முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஐ.நா.வும் கவலை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் அமெரிக்காவின் இந்த முடிவுக்கு இஸ்ரேல் வரவேற்பு தெரிவித்துள்ளது.
தனது அதிரடி முடிவுகளால் சர்வதேச அரசியலை அவ்வப்போது அதிர்ச்சியில் ஆழ்த்தி வரும் டிரம்ப், இப்போது ஈரானுடன் மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்து மேலும் ஒரு அதிர்ச்சியை அளித்துள்ளார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தலைமையிலான அந்நாட்டு அரசு ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் இணைந்து ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி, அணுசக்தியை ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று ஈரான் உறுதியளித்தது. அதற்கு பதிலாக, ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ளப்பட்டன. ஆனால், இப்போது அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும், ஈரான் மீது முன்பைவிட அதிகமாக பொருளாதாரத் தடைகளை விதிக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன் மூலம், ஈரான் மீண்டும் சர்வதேச அளவில் பொருளாதாரரீதியாக தனிமைப்படுத்தப்பட இருக்கிறது. அதே நேரத்தில் ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் ஆபத்தும் உள்ளது.
ஒபாமா எதிர்ப்பு: ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்கா முறித்துக் கொண்டது மிகப்பெரிய தவறு என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது:
ஒப்பந்தத்தை மீறி ஈரான் செயல்படாத நிலையில் அதனை ரத்து செய்தது மிகப்பெரிய தவறு. இது சர்வதேச அளவில் அமெரிக்கா மீதான நம்பகத்தன்மையை பாதிக்கும். மத்திய ஆசியாவில் ஏற்கெனவே பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபரின் இந்தச் செயல் பதற்றத்தை மேலும் அதிகரிப்பதாக உள்ளது என்றார்.

ஐ.நா. கவலை

Story image


டிரம்ப்பின் முடிவு குறித்து ஐ.நா. தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், 'ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் சர்வதேச அளவில் அமைதியை நிலைநாட்டும் முக்கிய நடவடிக்கையாக இருந்தது. இதன் மூலம் அணுஆயுதப் பரவல் தடுக்கப்பட்டது. இப்போது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டிருப்பதால் சர்வதேச அளவில் அணு ஆயுத அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இது மிகவும் கவலையளிக்கும் விஷயம்' என்றார்.

இஸ்ரேல் வரவேற்பு
அதே நேரத்தில் அமெரிக்காவின் முடிவுக்கு இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்புத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், 'அமெரிக்க அதிபர் டிரம்ப் தைரியமான ஒரு முடிவை எடுத்துள்ளார். ஈரானில் இப்போது பயங்கரவாத ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. அதனை முறியடிக்க இஸ்ரேல் அரசு, டிரம்புக்கு உதவிகரமாக இருக்கும். இந்த ஒப்பந்தத்தை நாங்கள் தொடக்கத்தில் இருந்தே எதிர்த்து வந்தோம். ஏனெனில், ஈரான் எப்போதும் பயங்கரவாதப் பாதையில் இருந்து தங்களை மாற்றிக் கொள்ளாது என்பது எங்களுக்குத் தெரியும்' என்றார் அவர்.

இந்தியாவுக்கு பாதிப்பு
இந்த ஒப்பந்த முறிவால் இந்தியாவில் பெட்ரோலியப் பொருள்களின் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், இந்தியாவுக்கு கச்சா எண்ணெயை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் ஈரான் மூன்றாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா விதிக்கும் பொருளாதாரத் தடைகளால் ஈரானில் இருந்து இந்தியாவும் எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்படும். இதனால், வேறு நாட்டில் இருந்து கூடுதல் விலை கொடுத்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டியது இருக்கும். இதனால் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரக்கூடும்.
மேலும், ஈரானில் உள்ள சாப்ஹர் துறைமுகத்தை மேம்படுத்த அந்நாட்டுடன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்தத் துறைமுகப் பணிகள் முடிந்தால் பாகிஸ்தானை தவிர்த்துவிட்டு இந்தியாவால் மத்திய ஆசிய நாடுகளை கடல் போக்குவரத்தில் அணுக முடியும். மேலும் ஈரானுடன் இந்தியா நேரடியாக அதிக அளவில் ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபட முடியும். இதில் இந்தியா கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்துள்ளது. ஈரான் மீது மீண்டும் சர்வதேச பொருளாதாரத் தடை விதிக்கப்படுவதால் சாப்ஹர் துறைமுக ஒப்பந்தமும் முடங்கும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.