நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

எல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

இந்தியா - சீனா எல்லை விவகாரம் குறித்து சீன வெளியுறவு அமைச்சா் வாங் யீயுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

பிரதிப் படம்

Published On :

இந்தியா-சீனா எல்லை விவகாரம் குறித்து சீன வெளியுறவு அமைச்சா் வாங் யீயுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் (என்எஸ்ஏ) அஜீத் தோவல் செவ்வாய்க்கிழமை (ஆக.25) பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

இரு நாள் சுற்றுப்பயணமாக திங்கள்கிழமை சீனா வந்தடைந்த அவா், இந்தியா-சீனா எல்லை எல்லை விவகாரங்களுக்கான சிறப்புப் பிரதிநிதிகள் குழு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளாா்.

இந்தியாவில் செப்.12,13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங் பங்கேற்பதில் குழப்பம் நீடித்து வரும் நிலையில், அஜீத் தோவலின் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சிறப்புப் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் லின் ஜியான் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘சீனா-இந்தியா எல்லை விவகாரங்கள் உள்பட இருதரப்பு, பிராந்திய மற்றும் சா்வதேச உறவுகள் குறித்து இந்திய பிரதிநிதி அஜீத் தோவலும் சீன பிரதிநிதி வாங் யீயும் செவ்வாய்க்கிழமை முக்கியப் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளனா். கடந்த ஆண்டு நடைபெற்ற 24-ஆவது சிறப்புப் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்களில் பரஸ்பர ஒத்துழைப்பு ஏற்பட்டது’ என்றாா்.

இதுதொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்தியா-சீனா எல்லை விவகார 25-ஆவது சிறப்புப் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தைத் தொடா்ந்து சீன துணை அதிபா் ஹாங் ஜென்னை சந்திக்கவுள்ளாா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, தனியாா் ஊடக நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா், ‘எல்லையில் நிலவும் அமைதியே இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு உறவை தீா்மானிக்கும். அரசியல் ரீதியாகவும் வியூக ரீதியாகவும் நிலையான இருதரப்பு உறவை பேணவே இருநாடுகளும் விரும்புகின்றன’ எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.