/

எம்ஹெச்17 விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷிய ஏவுகணையே!

கிழக்கு உக்ரைனில் மலேசிய பயணிகள் விமானத்தை கடந்த 2014-ஆம் ஆண்டு சுட்டு வீழ்த்தியது ரஷியப் படையிடம் இருந்த ஏவுகணையே என்று அந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் குழு திட்டவட்டமாகத்

News image

சுட்டுவீழ்த்தப்பட்ட எம்ஹெச்17 விமானம் சிதறி விழுந்த கிழக்கு உக்ரைன் பகுதி (கோப்புப் படம்).

Updated On :25 மே 2018, 1:05 am IST

கிழக்கு உக்ரைனில் மலேசிய பயணிகள் விமானத்தை கடந்த 2014-ஆம் ஆண்டு சுட்டு வீழ்த்தியது ரஷியப் படையிடம் இருந்த ஏவுகணையே என்று அந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் குழு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த விசாரணைக் குழுத் தலைவர் வில்பர்ட் பாலிஸ்ஸன் தெரிவித்ததாவது:
மலேசியாவின் எம்ஹெச்17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக விசாரித்து வரும் கூட்டு விசாரணைக் குழு, அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷியாவின் "பியூகே-டெலார்' வகையைச் சேர்ந்த ஏவுகணை என முடிவுக்கு வந்துள்ளது.
தரையிலிருந்து வான் இலக்குகளைத் தாக்கி அழிக்கவல்ல அந்த ஏவுகணைகள், ரஷியாவின் கர்ஸ்க் நகரில் நிலைகொண்டுள்ள அந்த நாட்டு ராணுவத்தின் விமான எதிர்ப்புப் படையின் 53-ஆவது பிரிவிடம் இருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றார் அவர்.
ரஷிய ராணுவப் பிரிவிடம் இருந்த ஏவுகணையால்தான் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதாக சர்வதேச விசாரணை அதிகாரிகள் தெரிவிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை, ரஷியாவில் தயாரிக்கப்பட்ட பியூகே ஏவுகணையை உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் வாங்கி, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியிலிருந்து விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக விசாரணைக் குழு கூறி வந்தது.
எனினும், தற்போது மிகக் கடினமான ஆய்வுகளுக்குப் பிறகு, விடியோக்கள் மற்றும் படங்களை ஆதாரமாகக் கொண்டு அந்த ஏவுகணை ரஷியாவின் கர்ஸ்க் நகரிலிருந்து வந்ததாக அந்தக் குழு கூறுகிறது.
ரஷியா மறுப்பு: நெதர்லாந்து விசாரணை அதிகாரிகளின் இந்தக் குற்றச்சாட்டை ரஷியா மறுத்துளளது.
இதுகுறித்து ரஷிய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் கூறுகையில், "விசாரணைக் குழுவினர் என்ன சொன்னாலும் அதனை அப்படியே ஏற்க முடியாது. அவர்களது குற்றச்சாட்டுகளை மெய்ப்பிக்கும் வகையில் இதுவரை அவர்களால் உறுதியான ஆதாரங்களைக் காட்ட முடியவில்லை' என்றார் அவர்.
மலேசியாவிலிருந்து நெதர்லாந்துக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17-ஆம் தேதி சென்று கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், ரஷிய ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில், அந்த விமானத்திலிருந்த 283 பேரும் உயிரிழந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.