பதவிக் காலம் முடியும் எம்.பி.க்கள், மாகாண மற்றும் உள்ளூர் நிர்வாக அமைப்புகளின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தல் செவ்வாய்க்கிழமை (நவ. 6) நடைபெறுகிறது.
அதிபரின் 4 ஆண்டுகால பதவிக் காலத்தின் மத்தியில் நடைபெறுவதால் இடைக் காலத் தேர்தல் என்றழைக்கப்படும் இதில், தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பதவிக்கு எந்த ஆபத்தும் வரப்போவதில்லை.
இந்தத் தேர்தலுக்குப் பிறகும் டிரம்ப்தான் அதிபராகத் தொடரப் போகிறார்.
எனினும், இந்தத் தேர்தல் டிரம்ப்பின் அதிரடிக் கொள்கைகளுக்கு ஒரு அக்னிப் பரீட்சையாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
அமெரிக்காவுக்கே முதன்மை என்ற கோஷத்தை முன்னிலைப்படுத்தி ஆட்சியைப் பிடித்த அவர், அதற்குப் பிறகு எடுத்து வரும் நடவடிக்கைகள் அனைத்துமே அமெரிக்க நலன்களுக்கு இதுவரை எந்த அரசும் செய்யாத அளவுக்கு மிகவும் திறன் வாய்ந்தவை என்பதைக் காட்டும் வகையில் ஒவ்வொரு காய்களாக நகர்த்தி வருகிறார்.
சர்வதேச அரங்கில், முந்தைய ஒபாமா அரசு ஈரானுடன் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை தூக்கி எறிந்தது, அதுவரை தீண்டத் தகாத நாடாக இருந்த வட கொரியாவின் அதிபர் கிம் ஜோங்-உனுடன் கைகுலுக்கியது என அவர் எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கைகளும், முந்தைய அரசுகளின் கொள்கைகளுக்கு நேர் எதிராக இருந்து வருகிறது.
உள்நாட்டிலும், குடியேற்றக் கொள்கைகளை மாற்றுவது, ஜனநாயகக் கட்சியினர் போற்றிப் பாதுகாத்து வந்த கல்வி, உள்துறை, தொழிலாளர் நலம், வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி போன்ற துறைகளின் முக்கியத்துவத்தை குறைப்பது, எல்லா அமெரிக்கர்களுக்கும் குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை வழங்கும் ஒபாமாகேர் திட்டத்தை ஒழிப்பது போன்றவைதான் டிரம்ப்பின் கொள்கையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், தற்போது நடைபெறும் இடைக் காலத் தேர்தலில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியினர் அதிக அளவில் வெற்றி பெற்றால், அந்தக் கொள்கைகளை அதிபர் டிரம்ப்பால் மிக எளிதில் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
தற்போதுள்ள நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுக் கட்சினரின் கை மேலோங்கியுள்ளது.
இந்த நிலையில், தற்போதைய தேர்தலில் அந்த பலம் அதிகரிப்பது டிரம்ப்புக்கு மிகச் சாதகமாக அமையும்.
ஆனால் அதே நேரம், சில கருத்துக் கணிப்புகள் கூறுவதைப் போல ஜனநாயகக் கட்சினர் அதிக இடங்களைப் பிடித்து, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெற்றால் அது டிரம்ப் அரசுக்கு தலைவலியாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
சொல்லப்போனால், டிரம்ப்பின் அதிரடி கொள்கைகளுக்கு முட்டுக்கட்டை போடுவதுடன், பழைய ஒபாமா அரசின் கொள்கைகளை தூசி தட்டி எடுக்கவும் ஜனநாயகக் கட்சியினர் முயல்வார்கள் என்கிறார்கள் அவர்கள்.
இன்னும் ஒருபடி மேலே போய், அதிபர் டிரம்ப்பை தகுதி நீக்கம் செய்து, அவரது பதவியைப் பறிக்கவும் ஜனநாயகக் கட்சியினர் முயற்சிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
எனினும், தேர்தலுக்கு முன்னர் எடுக்கப்பட்ட பல கருத்துக் கணிப்புகள், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சியினருக்கும், குடியரசுக் கட்சியினருக்கும் ஏறத்தாழ சம பலம் கிடைக்கும் என்று கூறுகின்றன.
ஆனால், ஏற்கெனவே எந்த முடிவுகளை எடுப்பதிலும் கடும் மோதலைச் சந்தித்து வரும் நாடாளுமன்றத்தில், தேர்தலுக்குப் பிறகு இரு கட்சியினரும் சம பலம் பெற்றால் அது மேலும் மோசமான சூழலைத்தான் உருவாக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள்.
எப்படி இருந்தாலும், தேர்தல் கணிப்புகளால் நாடாளுமன்றத்தில் யாருக்கு என்ன பலம் என்பதை முடிவு செய்ய முடியாது. அது வாக்காளர்களின் கைகளில்தான் உள்ளது.
எனவே, இந்த அக்னிப் பரீட்சையில் டிரம்ப்பின் கொள்கைகள் தப்பிப் பிழைக்குமா, அல்லது சிக்கலில் மாட்டிக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆகப் பதிவு

கவனம் ஈர்க்கும் பூ பாடல்!

20,400 மெட்ரிக் டன் எல்பிஜிக்களுடன் இந்தியா வந்தடைந்த ஜக் விக்ரம் கப்பல்!

பாட்ஷா பட இயக்குநரின் சாருகேசி படத்தில் ரம்யா பாண்டியன்!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


