5 இந்திய வீரர்கள் உயிரிழப்பு: பாகிஸ்தான் ராணுவம் பிதற்றல்

இருநாட்டுக்கு இடையிலான துப்பாக்கிச்சூட்டில் 5 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
5 இந்திய வீரர்கள் உயிரிழப்பு: பாகிஸ்தான் ராணுவம் பிதற்றல்

இருநாட்டுக்கு இடையிலான துப்பாக்கிச்சூட்டில் 5 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு சட்டப் பிரிவு நீக்கத்துக்குப் பின்னர் எல்லைப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் அதிகளவிலான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் எல்லைப் பகுதியில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைப் பகுதிகளில் அத்துமீறி தாக்கும் சம்பவம் தீவிரமடைந்துள்ளதாகவும், மேலும் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் பயங்கரவாதிகள் ஊடுருவி வருவதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், நாட்டின் 73-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட தருணத்தில், இந்திய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள உரி மற்றும் ரஜௌரி ஆகிய இடங்களில் பாக். ராணுவம் அத்துமீறி நுழைந்து வியாழக்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தியது. 

இந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டதில் பாக். ராணுவத்தினர் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஆனால், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் மூலம் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 5 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனை அடிப்படை ஆதாரமற்ற போலீயான தகவல் என இந்திய ராணுவம் முற்றிலும் மறுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 2003-ல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை மதித்து நடக்குமாறும் பாகிஸ்தானை மத்திய அரசு எச்சரித்துள்ளது. 

முன்னதாக, ஆகஸ்ட் 4-ஆம் தேதி இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் கமாண்டோ வீரர்களை இந்திய ராணுவத்தினர் அதிரடியாக செயல்பட்டு சுட்டு வீழ்த்தினர். இதில் பாக். கமாண்டோவைச் சேர்ந்த 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து அதிபயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 

வெள்ளைக் கொடியுடன் வந்து தங்கள் நாட்டின் கமாண்டோ படை வீரர்களின் உடல்களை மீட்டுச் செல்லுமாறு பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. இருப்பினும் இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவம் எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com