நிபந்தனைகளுடன் கூடிய பேச்சுவார்த்தைக்குத் தயார்: பாக்., வெளியுறவுத் துறை அமைச்சர்

இந்தியாவுடன் நிபந்தனைகளுடன் கூடிய பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்தியாவுடன் நிபந்தனைகளுடன் கூடிய பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார். 

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் கடுமையான எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், இறுதியில் பாகிஸ்தானுக்கு மற்ற நாடுகளின் ஆதரவு கிடைக்கவில்லை. 

ஜம்மு-காஷ்மீர் பிரச்னை, இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவதையே உலக நாடுகளும் தெரிவித்து வருகின்றன. இதுகுறித்து, பாகிஸ்தான் பல்வேறு தலைவர்களிடம் முறையிட்டபோதும், அவர்கள் இதை இருதரப்புக்குள் முடித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

அதேசமயம், பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தினால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்பதையும் இந்தியா தொடர்ந்து தெரிவித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமையும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், "பயங்கரவாதம் மற்றும் வன்முறைகள் அற்ற சூழலில் பாகிஸ்தானுடன் நிலுவையில் உள்ள பிரச்னைகள் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த இந்தியா விரும்புகிறது" என்று தெரிவித்திருந்தார்.  

இந்த நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி இந்தியாவுடன் நிபந்தனைகளுடன் கூடிய பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியான தகவலின்படி, 

"இந்தியாவுடனான பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவே பாகிஸ்தான் எப்போதும் விரும்புகிறது. இந்த விவகாரத்தில் வேறு யாரேனும் மத்தியஸ்தம் செய்தால், அதை பாகிஸ்தான் வரவேற்கும்.  பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது. ஆனால், இந்தியாவும் பாகிஸ்தானுக்கு நிகரான விருப்பத்தைக் காட்டினால் மட்டுமே இது சாத்தியமாகும். அதேசமயம், இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு ஒரு சில நிபந்தனைகளை இந்தியா பூர்த்தி செய்ய வேண்டும். அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு கைது செய்யப்பட்டுள்ள ஹூரியத் தலைமையை விடுவிக்க வேண்டும். அங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று குரேஷி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அண்மையில் நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில்,

"இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் பாகிஸ்தான் மேற்கொண்டு விட்டது. இனிமேல், செய்வதற்கு ஏதுமில்லை. இருப்பினும், இந்தியா தொடர்ந்து பாகிஸ்தானை குறை கூறி வருகிறது. இந்தியாவில் இருப்பவர்களை சமாதானப்படுத்தவே இந்தியா அவ்வாறு கூறுவதாக எண்ணத் தோன்றுகிறது. எனவே, இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை" என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: "இந்தியாவுடன் இனி பேச்சு இல்லை: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்"

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com