அமெரிக்க அரசுத் துறைகள் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இரு மசோதாக்கள் அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் செனட் சபையில் வியாழக்கிழமை (ஜன. 24) தாக்கல் செய்யப்படவுள்ளனர்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
அமெரிக்காவில் 4 வாரங்களுக்கு மேல் நீடித்து வரும் அரசுத் துறைகள் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, அந்த நாட்டு நாடாளுமன்ற மேலவையான செனட் சபையில் இரு மசோதாக்களை தாக்கல் செய்ய செனட் சபை ஆளும் கட்சித் தலைவர் மிட்ச் மெக்கனலும், எதிர்க்கட்சித் தலைவர் சக் ஷுமெரும் ஒப்புக் கொண்டனர்.
அந்த இரு மசோதாக்களும், செனட் சபையில் வியாழக்கிழமை வாக்கெடுப்புக்கு விடப்படவிருக்கின்றன.
முதலில், அரசுத் துறைகளுக்கு வரும் செப்டம்பர் மாதம் வரை நிதி ஒதுக்கீடு செய்வதற்கான பட்ஜெட் மசோதாவை ஆளும் குடியரசுக் கட்சியினர் தாக்கல் செய்வர்.
அந்த மசோதாவில், சர்ச்சைக்குரிய மெக்ஸிகோ எல்லைச் சுவர் எழுப்புவதற்காக 570 கோடி டாலர் (சுமார் ரூ.40,655 கோடி) நிதி ஒதுக்கீடு கோரப்பட்டிருக்கும்.
மேலும், மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்ப அனுமதித்தால், உரிய ஆவணங்களின்றி அமெரிக்காவில் தங்கியிருக்கும் குறிப்பிட்ட அகதிகள் நாடு கடத்தப்படுவதை நிறுத்திவைப்பதாக அண்மையில் டிரம்ப் அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பு குறித்தும் குடியரசுக் கட்சியினர் தாக்கல் செய்யும் மசோதாவில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
அந்த மசோதா தோல்வியடைந்தால், அடுத்ததாக ஜனநாயகக் கட்சியினர் மற்றொரு பட்ஜெட் மசோதாவை தாக்கல் செய்வர்.
அந்த மசோதாவில், முடக்கப்பட்டுள்ள அரசுத் துறைகளுக்கு வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
அரசுத் துறைகள் முடக்கத்தை தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டு, மெக்ஸிகோ எல்லைச் சுவர் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும் நோக்கிலேயே அந்த மசோதாவில் குறுகிய காலத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவுக்குள் அகதிகள் வருவதைத் தடுக்கும் வகையில், எல்லை நெடுகிலும் தடுப்புச் சுவர் எழுப்புவதற்காக பட்ஜெட்டில் 570 கோடி டாலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
எனினும், அதற்கு ஜனநாயகக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அவர்கள் வலியுறுத்துவதைப் போல், எல்லைச் சுவருக்கு நிதி ஒதுக்கீடு இல்லாத பட்ஜெட்டை ஏற்பதற்கு அதிபர் டிரம்ப்பும் தயாராக இல்லை.
இதன் காரணமாக பட்ஜெட் நிறைவேற்றப்படாததால், பல்வேறு முக்கிய அரசுத் துறைகளும் கடந்த மாதம் 22-ஆம் தேதியிலிருந்து முடக்கப்பட்டுள்ளன. அமெரிக்க வரலாற்றிலேயே மிக அதிக நாள்களுக்கு நீடித்து வரும் இந்த அரசுத் துறைகள் முடக்கத்தின் விளைவாக, 8 லட்சம் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இக்கட்டான சூழலில், அரசுத் துறைகள் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மசோதாக்களை ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் செனட் சபையில் தாக்கல் செய்யவுள்ளனர்.
வெற்றி பெறுமா?
அரசுத் துறைகள் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, குடியரசுக் கட்சியினரும், ஜனநாயகக் கட்சியினரும் கொண்டு வரவிருக்கும் மசோதாக்கள் நிறைவேற்றப்படுவது மிகவும் கடினம் என்று கூறப்படுகிறது.
குடியரசுக் கட்சியினர் கொண்டு வரும் மசோதாவில் மெக்ஸிகோ எல்லைச் சுவருக்கு நிதி ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது.

மேலும், அந்த மசோதாவில், சிறுவர்களாக இருக்கும்போது பெற்றோர்களால் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு அழைத்து வரப்பட்ட அகதிகள், இயற்கைப் பேரிடர் காரணமாக வந்த அகதிகள் ஆகியோருக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், மற்ற குடியேற்றவாசிகளுக்கு எதிரான மிகக் கடுமையான அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.
இது, டிரம்ப்பின் முந்தைய நிலைப்பாட்டை விட மிக மோசமானது என்று ஜனநாயகக் கட்சியினர் விமர்சித்துள்ளனர்.
எனவே, குடியரசுக் கட்சியினர் கொண்டு வரும் மசோதாவை ஜனநாயகக் கட்சியினர் நிச்சயம் நிராகரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், எல்லைச் சுவருக்கு நிதி ஒதுக்கீடு இல்லாமல் ஜனநாயகக் கட்சியினர் கொண்டு வரும் மசோதாவையும் குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் ஏற்கப் போவதில்லை என்று கூறப்படுகிறது.
100 உறுப்பினர்களைக் கொண்ட செனட் சபையில், பட்ஜெட் மசோதா நிறைவேற்றப்படுவதற்கு 60 வாக்குகள் தேவை என்ற நிலையில், வியாழக்கிழமை வாக்கெடுப்புக்கு விடப்படும் எந்த மசோதாவுமே நிறைவேற்றப்படுவது கேள்விக்குறியாகியுள்ளது.
எனினும், எல்லைச் சுவர் விவகாரத்தில் டிரம்ப்புக்கு எதிரான நிலைப்பாட்டை ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் எவ்வளவு உறுதியாக கடைபிடிக்கிறார்கள் என்பதையும், டிரம்ப்புக்கு ஆதரவான நிலையை குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் எவ்வளவு உறுதியாக கடைபிடிக்கிறார்கள் என்பதையும் சோதிக்கும் வகையில் அந்த வாக்கெடுப்புகள் இருக்கும் என்று பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








