எங்களது ராணுவமும், துருக்கி ராணுவமும் ஒருபோதும் சண்டையிடாது என்று நம்புகிறோம். இரு தரப்பினருக்கும் இடையே போர் கூடாது என்பதே எங்களது கொள்கை.
சீனா சென்றிருந்த சிரியா வெளியுறவுத் துறை அமைச்சர் வாலித் அல்-மெளலேம் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறிய வார்த்தைகள் இவை.
உண்மையில், ஏற்கெனவே பயங்கரவாதிகள், அமெரிக்க ஆதரவு கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேல் என பல முனைத் தாக்குதலை எதிர்கொண்டுள்ள சிரியா அதிபர் அல்-அஸாத், பிராந்திய வல்லரசான துருக்கியுடன் மோதுவது எந்த விதத்திலும் புத்திசாலித்தனமாக இருக்க முடியாது.
மேலும், தற்போதைய நிலையில் துருக்கியுடன் மோதி சிரியா எதையும் பெரிதாக சாதித்துவிட முடியாது.
இருந்தாலும், சிரியா வெளியுறவுத் துறை அமைச்சர் இந்த விளக்கத்தை சீனா சென்று அளிக்க வேண்டியதற்கான அவசியமும் இல்லாமல் இல்லை.
அண்மைக் காலமாக சிரியா ராணுவம் மேற்கொண்டு வரும் தாக்குதல் நடவடிக்கைகள்தான் அதற்குக் காரணம்.
சிரியாவில் கிளர்ச்சிப் படையினரின் ஆதிக்கம் நிறைந்த ஒரே மாகாணமான இத்லிபில் அதிபர் அல்-அஸாத் தலைமையிலான ராணுவம் கடந்த வாரம் தாக்குதல் நடத்தியது.
குறிப்பாக, அந்த மாகாணத்தில் அமைந்துள்ள துருக்கி கண்காணிப்பு மையங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்கள்தான் இரு தரப்பினருக்கும் இடையிலான பதற்றத்தை அதிகரித்துள்ளது.
சொல்லப்போனால், இத்லிப் மாகாணத்திலுள்ள துருக்கி நிலைகள் மீது சிரியா படைகள் தாக்குதல் நடத்துவது இது முதல் முறையல்ல.
கடந்த ஏப்ரல் மாதத்திலும் இதே போன்ற தாக்குதல்களை துருக்கி நிலைகள் மீது சிரியா நடத்தியுள்ளது.
இத்தனைக்கும், துருக்கி, ரஷியா, ஈரான் ஆகிய நாடுகளுடன் கடந்த 2017-ஆம் ஆண்டு சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி, போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்ட பகுதி அது.
எனவே, ஒப்பந்தத்தை மீறி சிரியா நடத்தி வரும் இந்தத் தாக்குதல்கள் துருக்கியுடனான பதற்றத்தை அதிகரித்திருப்பதில் வியப்பு ஏதுமில்லை.
கடந்த 2011-ஆம் ஆண்டில் சிரியா உள்நாட்டுப் போர் தொடங்கியதிலிருந்தே, தங்கள் நாட்டு எல்லையொட்டிய பகுதியில் செயல்படும் துருக்கிய கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக துருக்கி நாடு செயல்பட்டு வருகிறது.
அல்-அஸாத் படைகளுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகளுக்கு பல்வேறு வகைகளிலும் அந்த நாடு உதவி வருகிறது.
எனினும், துருக்கியின் நேட்டோ படை கூட்டாளியான அமெரிக்காவும், பிற ஐரோப்பி நாடுகளும், இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளை ஒழித்த பிறகு, தாங்கள் ஆதரவளித்து வந்த கிளர்ச்சியாளர்களைக் கைவிட்டுவிட்டு சிரியாவிலிருந்து விலகிக் கொண்டன.
அந்தக் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை ரஷிய உதவியுடன் சிரியா ராணுவமும் கொஞ்சம் கொஞ்சமாகக் கைப்பற்றியது.
இந்த நிலையில், தங்களது எதிரிகளான கிளர்ச்சியாளர்களுக்கு முழு ஆதரவு அளிக்கும் ஒரே நாடாக துருக்கியை சிரியா பார்க்கிறது.
எனினும், துருக்கி, சிரியா ஆகிய இரு நாடுகளுடனுமே மிக நெருங்கிய நட்புறவை பேணி வரும் ரஷியாவின் மத்தியஸ்தம் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே போர்ப் பதற்றம் அதிகரிக்காமல் இருந்து வந்தது.
இந்தச் சூழலில், இத்லிப் மாகாணத்திலுள்ள துருக்கி நிலைகள் மீது சிரியா நடத்தியுள்ள தாக்குதல் பலரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது.
சிரியாவை முழுமையாக மீட்கும் நோக்கில், வலிமை வாய்ந்த துருக்கியுடன் மோத உண்மையிலேயே அல்-அஸாத் முடிவு செய்துவிட்டாரா?
இந்தக் கேள்விக்கு, துருக்கி ஆதரவு ஊடகங்கள் ஆம் என்று பதிலளிக்கின்றன.
இத்லிப் மாகாணத்திலிருந்து துருக்கி படையினரை வெளியேறச் செய்வதன் மூலம் அந்தப் பகுதியின் போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவது; அதன் பிறகு அந்தப் பகுதியில் மிகக் கடுமையான தாக்குதல்களை நடத்தி அதனைக் கைப்பற்றுவதே சிரியா அரசின் திட்டம் என்கின்றன அந்த ஊடகங்கள்.
எனினும், தங்களது நிலைகளிலிருந்து துருக்கி ராணுவம் வெளியேறினால், அவர்களது ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களால் அல்-அஸாத் படைகளை தாக்குப் பிடிக்க முடியாது என்பது துருக்கிக்கு நன்றாகவே தெரியும்; எனவே, அந்தப் பகுதியை விட்டு துருக்கி நீங்காது என்று மற்றொரு தரப்பினர் உறுதியுடன் கூறுகின்றனர்.
இப்படி ஒரு சூழலில், பதற்றத்தை அதிகரிக்கும் வகையிலான தாக்குதல்களை சிரியா ராணுவம் நடத்துவதற்கு காரணம் என்னவாகத்தான் இருக்கும்?
இதற்கு, சிரியா வெளியுறவுத் துறை அமைச்சர் வாலித் அல்-மெளலேமே விளக்கமளிக்கிறார்.
துருக்கியுடன் போரிடுவது எங்கள் நோக்கமல்ல; நாங்கள் நடத்தும் தாக்குதல்கள் எல்லாம், எங்களது நாடான சிரியாவின் ஓர் அங்கமாகத் திகழும் இத்லிப் மாகாணத்தில், பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டுமே நடத்தப்படுகின்றன என்கிறார் அவர்.
இத்லிப் மாகாணத்தின் உண்மை நிலவரத்தைப் பார்த்தால்தான், வாலித் சொல்வது சரியா, தவறா என்பது விளங்கும். அந்த மாகாணத்தின் பெரும்பகுதி, அல்-கொய்தாவின் முன்னாள் கூட்டாளியான ஹாயத் தெஹ்ரீர் அல்-ஷாமின் கட்டுப்பாட்டில் உள்ளது.
எஞ்சிய பகுதி துருக்கி ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் உள்ளிட்ட பிற குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அந்தப் பகுதியிலிருந்து தெஹ்ரீர் அல்-ஷாம் வெளியேற்றப்பட வேண்டும், அதற்கு துருக்கி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சிரியாவும், ரஷியாவும் வலியுறுத்தி வருகின்றன.
எனவே, இந்த விவகாரத்தில் துருக்கிக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் வகையிலேயே இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
8 ஆண்டுகளாக நடைபெற்று வரும் சிரியா உள்நாட்டுப் போரில் லட்சக்கணக்கானவர்கள் பலியாகினர். எண்ணற்றவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தவித்து வருகின்றனர்.
இந்த கொடூரமான போரின் ஓர் அங்கமான இத்லிப் மாகாணப் பிரச்னைக்கு, அதிக ரத்தக் களறி இல்லாமல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே சர்வதேச பார்வையாளர்களின் ஏக்கமான எதிர்பார்ப்பாக உள்ளது.

சிரியாவில் துருக்கி வீரர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தலைக்கு மேல் தொங்கிய கத்தி கழுத்துக்கு வந்துவிட்டது: தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர்!

தொகுதி மறுவரையறை! முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


