தாய்லாந்து இளவரசியை தேர்தலில் நிறுத்த முயன்ற விவகாரம்:  அரசியல் கட்சியின் அங்கீகாரம் கலைப்பு 

தாய்லாந்து இளவரசியை தேர்தலில் நிறுத்த முயன்ற விவகாரம்:  அரசியல் கட்சியின் அங்கீகாரம் கலைப்பு 

தாய்லாந்து இளவரசி உபோல்ரத்தனாவை தேர்தலில் நிறுத்த முயன்ற விவகாரத்தின் காரணமாக தாய் ரக்சா சார்ட் கட்சியின் அங்கீகாரத்தை கலைத்து அந்நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Published on

பேங்காக்: தாய்லாந்து இளவரசி உபோல்ரத்தனாவை தேர்தலில் நிறுத்த முயன்ற விவகாரத்தின் காரணமாக தாய் ரக்சா சார்ட் கட்சியின் அங்கீகாரத்தை கலைத்து அந்நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாய்லாந்தில் முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ராவின் ஆட்சியை ராணுவப் புரட்சியின் மூலம் கடந்த 2014-ஆம் ஆண்டு கவிழ்த்த அப்போதைய ராணுவ தலைமை தளபதி பிரயுத் சான்-ஓ-சா, தற்போது அந்த நாட்டின் பிரதமராக இருந்து வருகிறார்.

அடுத்த மாதம் 24-ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஃபலங் பிராசரத் கட்சி சார்பிலான பிரதமர் பதவி வேட்பாளராக அவர் போட்டியிடவிருக்கிறார். அந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இதனிடையே, அந்த நாட்டில் செல்வாக்கு மிக்க ஷினவத்ரா கும்பத்தினரின் தலைமையில் செயல்படும் தாய் ரக்சா சார்ட் கட்சியின் சார்பில் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதற்காக  இளவரசி உபோல்ரத்தனா வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், இளவரசி உபோல்ரத்தனா தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசர் மஹா வஜிரலங்கார்ன் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அவரை தேர்தலில் நிறுத்தும்  திட்டத்தை தாய் ரக்சா சார்ட் கட்சி கைவிட்டது. அதையடுத்து பிரதமர் பதவிக்கான வேட்பாளர் பட்டியலில் இளவரசி உபோல் ரத்தனாவின் பெயரை தகுதிநீக்கம் செய்து இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் அண்மையில் வெளியிட்டது. அதையடுத்து கடந்த ஒரு வாரமாக  தேர்தலில் இளவரசி போட்டியிடுகிறார் என்று அந்நாட்டில் நிலவிய அரசியல் பரபரப்பு முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் தாய்லாந்து இளவரசி உபோல்ரத்தனாவை தேர்தலில் நிறுத்த முயன்ற விவகாரத்தின் காரணமாக தாய் ரக்சா சார்ட் கட்சியின் அங்கீகாரத்தை கலைத்து அந்நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றத்தின் நீதிபதி விகியாட் மேனகானிஸ்த், முன்னாள் பிரதமர்கள் யிங்லக் ஷினவத்ரா, தாக்ஷின் ஷினவத்ரா ஆகியோருக்கு ஆதரவான தாய் ரக்சா சார்ட் கட்சியின் அங்கீகாரத்தை கலைத்து உத்தரவிட்டார்.

அத்துடன் ஷினவத்ராவின் குடும்ப உறுப்பினர்கள் இருவர் உள்பட இக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளை 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதித்தும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com