

தில்லியில் ஜன. 26-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்திய குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராகப் பங்கேற்கும்படி பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்றுக்கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு பிரதமராக பதவியேற்ற பிறகு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய பிறகு ஜான்சன் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
இதுகுறித்து போரிஸ் ஜான்சன் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருப்பது: அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். நானும், பிரதமர் நரேந்திர மோடியும் உறுதியளித்துள்ள இருதரப்பு உறவை அடைவதற்கு இந்தப் பயணம் வழிவகுக்கும் என எதிர்பார்க்கிறேன். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் முக்கியப் பங்களிக்கும் நாடாக இந்தியா உள்ளது. வேலைவாய்ப்பு, வளர்ச்சியை அதிகரிக்கவும், எங்களது பாதுகாப்புக்கான அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கும் பணியாற்றுவதால் பிரிட்டனுக்கு இந்தியா இன்றியமையாத கூட்டாளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டதுடன், அடுத்த ஆண்டு பிரிட்டனில் நடைபெறவுள்ள ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்கும்படி பிரதமர் மோடிக்கு போரிஸ் ஜான்சன் கடிதமும் எழுதியுள்ளார்.
பிரதமர் நிலையிலான பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக பிரிட்டன் வெளியுறவு செயலர் டொமினிக் ராப் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு குடியரசு தின விழாவில் பங்கேற்கும் 2-ஆவது பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆவார். இதற்கு முன்னர் 1993-இல் அப்போதைய பிரதமர் ஜான் மேஜர் குடியரசு தின விழாவில் பங்கேற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.