ஆடு, பப்பாளிக்கு கரோனா தொற்று உறுதி: தான்சானியாவில் சோதனைக் கருவிக்கே சோதனை

தான்சானியாவில் ஆடு மற்றும் பப்பாளிக்கு எல்லாம் கரோனா இருப்பதாக முடிவு வந்ததைத் தொடர்ந்து கரோனா நோயைக் கண்டறியும் பரிசோதனைக் கருவியின் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்துள்ளார் அதிபர் ஜான் மகுபலி.
ஆடு, பப்பாளிக்கு கரோனா தொற்று உறுதி: தான்சானியாவில் சோதனைக் கருவிக்கே சோதனை

தான்சானியாவில் ஆய்வகத்தில் ஆடு, பப்பாளிக்கு எல்லாம் கரோனா இருப்பதாக முடிவு வந்ததைத் தொடர்ந்து கரோனா நோயைக் கண்டறியும் பரிசோதனைக் கருவியின் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்துள்ளார் அதிபர் ஜான் மகுபலி.

தான்சானியாவில் கரோனா தொற்று வெடித்திருப்பது ரகசியமாக வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலைக் கடுமையாக விமரிசித்திருக்கும் மகுபலி, முன்னதாக கரோனா தொற்று பரவாமல் இருக்க தான்சானிய மக்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

முன்னதாக, தான்சானியா அதிபர், கரோனா பரிசோதனைக் கருவிகளின் உண்மைத் தன்மையை ஆராயுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார். இதையடுத்து, அதிகாரிகளும் பப்பாளி, ஆடு போன்றவற்றின் மாதிரிகளை, மனிதர்களின் பெயர் மற்றும் வயதை இணைத்து பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

அவை தான்சானியாவில் உள்ள மருத்துவப் பரிசோதனைக் கூடங்களில் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதை பரிசோதனை செய்த எவருக்கும், அது யாருடையது என்ற விவரம் தெரியாது. இந்த நிலையில்தான் பப்பாளி மற்றும் ஆடுகளின் மாதிரிகளை பரிசோதித்து அந்த 'மனிதர்களுக்கு' கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக முடிவுகள் வெளியாகின. ஆனால் இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், இந்த ஆடு, பப்பாளிக்கும் கரோனா வுக்கும் சம்பந்தமேயில்லை.

இந்த நிலையில்தான், தான்சானியாவில் கரோனா பரிசோதனைக் கருவிகள் 'தொழில்நுட்ப கோளாறு' கொண்டவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன. அனைத்தும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.

இது குறித்து மகுபலி கூறுகையில், ஏதோ ஒன்று நடக்கிறது. நான் ஏற்கெனவே கூறியது போல, வெளியில் இருந்து கிடைக்கும் ஒவ்வொரு உதவியும் நமது நாட்டின் நலனுக்காகவே இருக்கும் என்று ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்ததோடு, இந்த பரிசோதனைக் கருவிகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். மேலும், குறிப்பிட்ட ஆய்வகத்தின் தலைவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

தான்சானியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 480 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 17 பேர் மரணம் அடைந்துள்ளனர். 

இந்த நிலையில், மடகாஸ்கரின் அதிபரைத் தொடர்புகொண்டு பேசியதாகக் கூறியிருக்கும் மகுபலி,  அப்போது அவர், கரோனாவை ஒழிக்கும் இயற்கை மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அதற்கு சர்வதேச உரிமம் இதுவரை பெறவில்லை என்றும், விரைவில் விமானம் மூலம் தான்சானியாவுக்கு அனுப்பி வைத்து, அதன் மூலம் தான்சானியா மக்களும் பயனடைவார்கள் என்று கூறியதாகவும் தெரிவித்தார்.

இன்றைய நிலவரப்படி, அமெரிக்கா மற்றும் ஆசியா, ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் ஆப்ரிக்காவில் கரோனாவின் தாக்கம் குறைவாகவே இருக்கிறது அல்லது குறைவான அளவில் பரிசோதனைகள் நடப்பதால் பாதிப்பு முழுவதுமாக கண்டறியப்படவில்லை என்று இருவேறு கோணங்களில் கூறப்படுகிறது.

இதில் எது ஒன்று உண்மை என்றாலும் பரிசோதனைக் கருவிகள் சொல்வதை அப்படியே நம்பக் கூடாது என்பதை தான்சானியா அதிபர் மகுபலி நிரூபித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com