கொள்வாரின்றிக் கடற்பரப்பில் காத்திருக்கும் கச்சா எண்ணெய்க் கப்பல்கள்

கரோனா தொற்று காரணமாக உலக நாடுகள் பலவற்றில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் கொள்வாரில்லாமல், கடற்பரப்பில் கச்சா எண்ணெய்யுடன் ஏராளமான டேங்கர் கப்பல்கள் மிதந்து கொண்டிருக்கின்றன.
கொள்வாரின்றிக் கடற்பரப்பில் காத்திருக்கும் கச்சா எண்ணெய்க் கப்பல்கள்
Updated on
1 min read


கரோனா தொற்று காரணமாக உலக நாடுகள் பலவற்றில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் கொள்வாரில்லாமல், கடற்பரப்பில் கச்சா எண்ணெய்யுடன் ஏராளமான டேங்கர் கப்பல்கள் மிதந்து கொண்டிருக்கின்றன.

தொழிற்சாலைகள் இயக்கப்படாததும், வாகனங்களின் இயக்கம் பெருமளவில் நின்றுபோனதும், எண்ணெய்த் தேவையை மிகப்பெரிய அளவில் குறைத்துவிட்டது. இதன் எதிரொலியாக கடற்பரப்பிலேயே கச்சா எண்ணெய்யை சேமித்து வைக்கும் நிலைக்கு எண்ணெய் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.

டேங்கர் கப்பல்களில் இருக்கும் இந்த கச்சா எண்ணெய் விலை தற்போதைக்கு பூஜ்யம்தான். ஆனால், அதைச் சேமித்து வைக்க எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் செலவிடும் தொகை சுமார் 22 லட்சம் ரூபாய்.

உலகின் மிகப்பெரிய துறைமுகங்களுக்கு அருகே ராட்சத அளவிலான எண்ணெய் டேங்கர்களில் உலகின் ஒவ்வொரு நாள் தேவைக்குமான கச்சா எண்ணெய் நிரப்பப்பட்டு கடல் பரப்பில் மிதந்து கொண்டிருக்கின்றன. ஒரு மாதத்துக்கு முன்பு வரை சுமார் 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யை ஏற்றிக் கொண்டு இந்த டேங்கர்கள் உலகின் பல்வேறு மூலைகளுக்கும் சென்றுகொண்டிருந்தன. ஆனால் இன்று கொள்வாரில்லாததால் எந்த அசைவும் அற்று வெறுமனே கடல்பரப்பில் மிதந்து கொண்டிருக்கின்றன.

கடற்பரப்பில் மிதந்து கொண்டிருக்கும் டேங்கர்கள் நிலப்பரப்பில் கச்சா எண்ணெய்யைச் சேர்த்துவிடும்போது, அங்கிருந்து குழாய்கள் மூலம் அவை பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். ஆனால், அந்தக் குழாய்களும் தற்போது நிரம்பிதானிருக்கின்றன.

இவ்வாறு டேங்கர்களில் நிரப்பப்பட்டிருக்கும் கச்சா எண்ணெய்யால், சர்வதேச கச்சா எண்ணெய் தொழில் மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது கிட்டதட்ட 16 கோடி பேரல் கச்சா எண்ணெய் கடற்பரப்பில் மிதந்து கொண்டிருக்கும் ராட்சத டேங்கர்களில் நிரப்பப்பட்டுள்ளது.  தற்போதிருக்கும் வசதிகளைக் கொண்டு, அடுத்த ஒரு மாதத்துக்கு மட்டுமே இந்த கச்சா எண்ணெய்யைச் சேமித்து வைக்க முடியும். எனவே, கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உருவாகியுள்ளது.

ராட்சத டேங்கர்கள், ரயில் வேகன்களும் விரைவில் கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது கச்சா எண்ணெய்ச் சந்தையை மிகப்பெரிய அளவில் பாதிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். ஒரு பக்கம் சேமிப்புக் கிடங்குகள் முழுவதும் நிரம்பிவிட்டால், தொடர்ந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய் சேமிப்புக்கான வழியைக் ஏற்படுத்த முடியாமல் கச்சா எண்ணெய் தொழில்கள் கடும் சிக்கலை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

இதுவரை எதிர்கொள்ளாத வகையில் ஒரு மோசமான நிலையை கச்சா எண்ணெய் தொழில் சந்தித்துள்ளது. முதல் முறையாக கச்சா எண்ணெய் விலை கடந்த வாரம் எதிர்மறையில் சென்றதும் குறிப்பிடத்தக்கது. அதாவது, கச்சா எண்ணெயை சேமித்து வைக்க எண்ணெய் நிறுவனங்கள் அதிகம் செலவு செய்ய நேரிடும்போது, ஒரு பேரல் எண்ணெய்யை பெற்றுச் செல்வோருக்காக 40 டாலரை எண்ணெய் நிறுவனமே செலவு செய்யும் அளவுக்கு மோசமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com