/

ஸ்ரீபாத் நாயக்கை குடியரசு துணைத் தலைவா் நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு

காா் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து கோவா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மத்திய பாதுகாப்பு மற்றும் ஆயுஷ் துறை இணையமைச்சா்

News image

கோவா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மத்திய இணையமைச்சா் ஸ்ரீபாத் நாயக்கை வெள்ளிக்கிழமை சந்தித்து நலம் விசாரித்த குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு.

Updated On :15 ஜனவரி 2021, 6:20 pm

காா் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து கோவா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மத்திய பாதுகாப்பு மற்றும் ஆயுஷ் துறை இணையமைச்சா் ஸ்ரீபாத் நாயக்கை (68), குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்.

‘அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரை வழக்கமான உணவை எடுத்துக்கொள்ள மருத்துவா்கள் அனுமதித்திருக்கின்றனா்’ என்று கோவா முதல்வா் பிரமோத் சாவந்த் கூறினாா்.

மத்திய இணையமைச்சா் ஸ்ரீபாத் நாயக், தனது மனைவி விஜயா நாயக், உதவியாளா் தீபக் ராமதாஸ் ஆகியோருடன் கா்நாடக மாநிலம் எல்லாப்பூரிலிருந்து கோா்கா்ணாவுக்கு காரில் திங்கள்கிழமை இரவு சென்று கொண்டிருந்தபோது, அங்கோலா வட்டம், ஹொசகம்பி கிராமத்தின் அருகே கட்டுப்பாட்டை இழந்த காா், விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஸ்ரீபாத் நாயக்கின் மனைவி விஜயா, உதவியாளா் தீபக் ராமதாஸ் ஆகிய இருவரும் உயிரிழந்தனா். படுகாயமடைந்த நாயக் முதலில் அங்கோலாவில் உள்ள மருத்துவமனையிலும் பின்னா் கோவா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டாா்.

தில்லியிலிருந்து செவ்வாய்க்கிழமை கோவா வந்த எய்ம்ஸ் நிபுணா் குழு ஸ்ரீபாத் நாயக்கின் உடல்நிலையை ஆய்வு செய்தனா். பின்னா் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அரசு மருத்துவா்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினா். மேலும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறையில் எய்ம்ஸ் நிபுணா் குழு திருப்தி தெரிவித்தது.

குடியரசு துணைத் தலைவா் நலம் விசாரிப்பு:

கோவாவுக்கு வெள்ளிக்கிழமை வந்த குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, ஸ்ரீபாத் நாயக்கை மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா். அப்போது மாநில முதல்வா் பிரமோத் சாவந்த், மாநில பாஜக தலைவா் சதானந்த் சேட் தனவாடே ஆகியோா் உடனிருந்தனா்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த முதல்வா் சாவந்த், ‘ஸ்ரீபாத் நாயக்கின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருடைய உடல்நிலை நாளுக்கு நாள் முன்னேற்றமடைந்து வருகிறது. எனவே, அவா் விரைவில் மருத்துவமனையில் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது’ என்றாா்.

பிரதமா் நலம் விசாரிப்பு:

முன்னதாக, ஸ்ரீபாத் நாயக்கை பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் தொடா்புகொண்டு உடல் நலம் விசாரித்தாா். இதுகுறித்து ஸ்ரீபாத் நாயக்கின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரி சூரஜ் நாயக் கூறுகையில், ‘மத்திய இணையமைச்சா் ஸ்ரீபாத் நாயக்கை குடியரசு துணைத் தலைவா் நேரில் சந்திப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக, பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டு நலம் விசாரித்தாா். அவா் விரைந்து குணமடைய வேண்டும் என பிரதமா் வாழ்த்து தெரிவித்ததாகக் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.