2020-ல் 4 பேரில் ஒருவருக்கு பாதுகாப்பான குடிநீர் இல்லை: அதிர்ச்சி தகவல் வெளியீடு

2020 -ஆம் ஆண்டில் நான்கு பேரில் ஒருவருக்கு பாதுகாப்பான குடிநீர் இல்லை என்றும், உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு பாதுகாப்பான சுகாதாரம் இல்லை
2020-ல் 4 பேரில் ஒருவருக்கு பாதுகாப்பான குடிநீர் இல்லை: அதிர்ச்சி தகவல் வெளியீடு
Published on
Updated on
1 min read

ஜெனீவா: 2020 -ஆம் ஆண்டில் நான்கு பேரில் ஒருவருக்கு பாதுகாப்பான குடிநீர் இல்லை என்றும், உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு பாதுகாப்பான சுகாதாரம் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) வியாழக்கிழமை வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கரோனா பெருந்தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவரும் அடிக்கடி கை கழுவுதலின் மூலம்  நல்ல சுகாதாரத்தை பெற முடியும் என்பதன் அவசியத்தை உலக சுகாதார நிறுவனம் உணர்த்திய நிலையில், தொற்றுநோய் தொடங்கியபோது, ​​உலகளவில் 10 பேர்களில் 3 பேர் வீடுகளில் சோப்பு மற்றும் தண்ணீரால் கைகளை கழுவவில்லை என்பது தெரியவந்துள்ளது. 

கரோனா பெருந்தொற்று மற்றும் பிற தொற்று நோய்கள் பரவாமல் தடுப்பதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்று கை கழுவுதல் ஆகும், ஆனால் உலகம் முழுவதும் உள்ள கோடிக் கணக்கான மக்களுக்கு நம்பகமான, பாதுகாப்பான நீர் கிடைக்கவில்லை என்று உலக சுகாதார இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார்.

யுனிசெப் நிர்வாக இயக்குநர் ஹென்றிட்டா ஃபோர் கூறுகையில், தொற்றுநோய்க்கு முன்பே, கோடிக் கணக்கான குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் சுத்தமான நீர், பாதுகாப்பான சுகாதாரம் மற்றும் கைகளை கழுவதற்கான இடம்கூட இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கூட்டு அறிக்கையின்படி, 2016 மற்றும் 2020- க்கு இடையில்,  உலக மக்கள் தொகையில் வீட்டில் பாதுகாப்பான குடிநீரை பயன்படுத்துவோரின் வீதம் 70 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக உயர்ந்துள்ளது; பாதுகாப்பான துப்புரவு சேவை 47 சதவீதத்திலிருந்து 54 சதவீதமாகவும், சோப்பு மற்றும் தண்ணீருடன் கை கழுவுதற்கான வசதிகள் 67 சதவீதத்திலிருந்து 71 சதவீதமாக அதிகரித்துள்ளன.

சுகாதார நடவடிக்கைகளில் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும் தற்போதைய சூழ்நிலையில் இது போதாது, உலகில் சஹாரா ஆப்பிரிக்க நாடுகளில் மிகவும் குறைவான முன்னேற்றத்தை எட்டியுள்ளது.

அவசர சுகாதார முதலீட்டின் தேவையை சுட்டிக்காட்டியும்,  உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு வீடுகளில் பாதுகாப்பாக நிர்வகிக்கப்படும் குடிநீர், சுகாதாரம் மற்றும் சுகாதார சேவைகளின் முன்னேற்றம் நான்கு மடங்காக அதிகரிக்காவிட்டால் 2030 -இல் சுகாதார பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என்று அந்த அறிக்கை எச்சரித்துள்ளது. 

"இந்த தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, மேலும் நெகிழ்வுடன் கூடிய சுகாதார அமைப்புகளை உருவாக்குதல், நீர், சுகாதாரம் மற்றும் சுகாதார கட்டமைப்புகள் போன்றவற்றில் முதலீடு செய்வது உலகளாவிய முன்னுரிமையாக இருக்க வேண்டும்" என்று உலக சுகாதார நிறுவனத் தலைவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com