
கரோனாவைக் கட்டுப்படுத்தும் விதமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல் மக்களின் மன நிலையும் உடல் நிலையும் பெரிய அளவுக்கு பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், நல்ல உணவுகளை உண்டு ஆரோக்கியமாக இருக்க பிரிட்டன் அரசு மக்களை ஊக்குவித்துவருகிறது. பல மாதங்களாக, அங்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுவந்தது.
இதனிடையே, நாடு தழுவிய அளவில் சுகாதாரம், உடல்நிலை குறித்து ஓபினியம் என்று நிறுவனம் பிரிட்டனில் கணக்கெடுப்பு எடுத்தது. ஜூலை 2 முதல் ஜூலை 8 வரையிலான காலக்கட்டத்தில் 5,000 பேரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.
அதில், 41 சதவிகிதத்தினர் தங்களின் எடை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, உடல் எடையை குறைப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் செயலிகளை பயன்படுத்தும்படி பிரிட்டன் தேசிய சுகாதார அமைப்பு மக்களை கேட்டு கொண்டுள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து பொது சுகாதார துறையின் தலைமை ஊட்டச்சத்து நிபுணர் அலிசன் டெட்ஸ்டோன் கூறுகையில், "15 மாதங்களாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கால் அவர்கள் மேற்கொண்ட பழக்க வழக்கங்களை மாற்றி கொள்ள வேண்டும். பலரின் உடல் எடை அதிகரித்திருப்பதை கண்டு ஆச்சரியம் ஏற்படவில்லை" என்றார்.
சிற்றுண்டிகளை உண்டதும் வேண்டிய நேரத்தில் சாப்பிட்டதும் உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்தது என கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சராசரியாக ஒருவருக்கு 4 கிலோ எடை அதிகரித்துள்ளது இந்த கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
மக்களுக்கு உதவும் வகையில் தொலைக்காட்சியில் விளம்பரங்கள் ஒளிபரப்பப்படும் என்றும் சுகாதார ஆலோசனைகள் வழங்கப்படும் என்றும் தேசிய சுகாதார அமைப்பு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் ஜோ சர்ச்சில், "அனைவருக்கும் பெருந்தொற்று பெரிய சவால்களை விடுத்துள்ளது. அவரவருக்கு ஏற்ற சுகாதாரமான வாழ்க்கை முறையை பின்பற்ற மக்களுக்கு உதவி செய்வோம்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.