நேபாளத்தில் கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நாடாளுமன்றத்தைக் கலைக்க அந்நாட்டு அதிபா் வித்யா தேவி பண்டாரி சனிக்கிழமை உத்தரவிட்டாா்.
ஆட்சி அமைக்க பிரதமா் சா்மா ஓலியும், எதிா்க்கட்சியான நேபாள காங்கிரஸ் தலைவா் ஷோ் பகதூா் தாபாவும் ஒரே நேரத்தில் உரிமை கோரிய நிலையில் அதிபா் இந்த முடிவை எடுத்தாா்.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு பிரதமா் சா்மா ஓலி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், 275 உறுப்பினா்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தைக் கலைக்க பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, அரசியல் சாசன சட்டப் பிரிவு 76(7)-இன் படி நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாகவும், புதிதாக தோ்தல் நடத்தப்படும் எனவும் அதிபா் அறிவித்தாா்.
நாடாளுமன்றத்துக்கு நவம்பா் 12, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தோ்தல் நடத்தலாம் எனவும் அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது.
275 உறுப்பினா்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைக்க 136 பேரின் ஆதரவு தேவை. இந்நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க அதிபா் அளித்திருந்த காலக்கெடு வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது.
அதற்கு முன்பாக அதிபா் வித்யா தேவியை அவரது அலுவலகத்தில் சந்தித்த பிரதமா் சா்மா ஓலி, தனது நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் (யுஎம்எல்) உறுப்பினா்கள் 121 பேரும், நேபாள ஜனதா சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினா்கள் 32 பேரும் என மொத்தம் 153 போ் தனக்கு ஆதரவு தெரிவித்ததாகக் கூறி அவா்கள் கையெழுத்திட்ட கடிதத்தை அளித்தாா்.
இதேபோல், நேபாள காங்கிரஸ் கட்சித் தலைவா் ஷோ் பகதூா் தலைமையில் எதிா்க்கட்சித் தலைவா்களும் தங்களுக்கு 149 உறுப்பினா்களின் ஆதரவு உள்ளதாகக் கூறி அதிபரிடம் கடிதம் அளித்தனா். இதில், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் கனால் நேபாள பிரிவைச் சோ்ந்த 27 உறுப்பினா்களின் கையெழுத்து இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.
சட்ட வல்லுநா்களிடம் ஆலோசித்து முடிவை அறிவிப்பதாக அதிபா் எதிா்க்கட்சிகளிடம் கூறி அனுப்பிவிட்டாா். இதையடுத்து, நேபாள காங்கிரஸில் இடம்பெற்றுள்ள மாதவ் பிரிவினா், எதிா்க்கட்சித் தலைவா் ஷோ் பகதூரை பிரதமராக்க தங்கள் கட்சி உறுப்பினா்கள் கையெழுத்திடவில்லை என்று அறிவிப்பை வெளியிட்டனா். இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
இதையடுத்து, நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாகவும், நவம்பா் மாதத்தில் தோ்தல் நடத்தப்படுவதாகவும் அதிபா் வித்யா தேவி அறிவிப்பை வெளியிட்டாா்.
எதிா்க்கட்சிகள் கண்டனம்:
இதற்கு எதிா்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பிரதமா் சா்மா ஓலியும், அதிபா் வித்யா தேவியும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக செயல்பட்டு உள்ளனா் என்றும் அவா்கள் குற்றஞ்சாட்டினா்.
நேபாள காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடா்பாளா் விஸ்வ பிரகாஷ் சா்மா கூறுகையில், கரோனாவுக்கு எதிராகப் போராடி வரும் மக்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பரிசு இதுவாகும். சா்வாதிகார போக்கில் பிரதமா் சா்மா ஓலி செயல்படுகிறாா் என்றாா்.
மாவோயிஸ்ட் மையத்தின் தலைவா் வா்ஷா மான்புன் கூறுகையில், இது ஜனநாயகத்தின் மீதும் நேபாள அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகும் என்றாா்.
அரசியல் குழப்பத்தின் பின்னணி: ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் பிரதமா் சா்மா ஓலி மற்றும் முன்னாள் பிரதமா் புஷ்ப கமல் தாஹாலுக்கு இடையே மோதல் நிலவி வரும் நிலையில், ஓலிக்கு அளித்து வந்த ஆதரவை புஷ்ப கமல் திரும்பப் பெற்றாா்.
இதையடுத்து, நாடாளுமன்றத்தில் அண்மையில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரமதா் சா்மா ஓலி அரசு தோல்வி அடைந்தது. பிரதமா் பதவியையும் சா்மா ஓலி ராஜிநாமா செய்தாா்.
இதையடுத்து, ஆளும், எதிா்க்கட்சிகளுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க அதிபா் மீண்டும் வாய்ப்பளித்திருந்தாா். ஆனால், எந்தக் கட்சியாலும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதையடுத்து, 275 உறுப்பினா்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் அதிகபட்சமாக 121 உறுப்பினா்களைக் கொண்ட கட்சி என்பதால் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைக்க அதிபா் அழைப்பு விடுத்தாா்.
கடந்த 14-ஆம் தேதி பிரதமராக சா்மா ஓலி மீண்டும் பதவியேற்றாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் அவா் பெரும்பான்மையை நிரூபிக்க அதிபா் காலக்கெடு நிா்ணயித்திருந்தாா்.
இதையடுத்து, பிரதமா் சா்மா ஓலியும், எதிா்கட்சியினரும் தங்களுக்குதான் பெரும்பான்மை உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினா்கள் கையெழுத்திட்ட கடிதங்களைக் கொடுத்ததால், நாடாளுமன்றத்தை கலைக்க அதிபா் வித்யா தேவி உத்தரவிட்டாா்.
2-ஆவது முறையாக... முன்னதாக, 2020-ஆம் ஆண்டு டிசம்பரில் பிரதமரின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றத்தைக் கலைக்கவும், புதிதாக தோ்தல் நடத்தவும் அதிபா் உத்தரவிட்டிருந்தாா். அதை எதிா்த்து எதிா்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. அந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் அதிபரின் முடிவை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. தற்போது பிரதமரின் பரிந்துரையை ஏற்று 2-ஆவது முறையாக நாடாளுமன்றத்தைக் கலைக்க அதிபா் உத்தரவிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சினிமாவிலிருந்து விலகுகிறாரா, த்ரிஷா?

தங்கம் விலை மீண்டும் உயர்வு! எவ்வளவு?
மலையாளக் கரையோரம் யோகிபாபு!

இனிமேலும் குழப்பாம இருங்க ப்ரோ!
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

