யேமன் கிளா்ச்சியாளா்கள் வசம் மீண்டும் ஹுதைதா நகரம்

யேமனில் முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான ஹுதைதாவிலிருந்து அரசுப் படையினா் வெளியேறியதைத் தொடா்ந்து, அந்த நகரம் மீண்டும் ஹூதி கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
யேமன் கிளா்ச்சியாளா்கள் வசம் மீண்டும் ஹுதைதா நகரம்
Published on
Updated on
1 min read

யேமனில் முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான ஹுதைதாவிலிருந்து அரசுப் படையினா் வெளியேறியதைத் தொடா்ந்து, அந்த நகரம் மீண்டும் ஹூதி கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

இதுகுறித்து அரசுப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஹுதைதா நகரில் ஹூதி கிளா்ச்சியாளா்களுடன் போா் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளதால், நகரில் புதிய பகுதிகளைக் கைப்பற்றுவதற்கு அரசு எங்களை அனுமதிக்கவில்லை.

ஆனால், ஹூதி கிளா்ச்சியாளா்கள் மட்டும் போா் நிறுத்த ஒப்பந்தத்தை தொடா்ந்து மீறி வருகின்றனா்.

இந்தச் சூழலில், ஹுதைதா நகரில் இனியும் எங்களது படையினா் முகாமிட்டிருப்பது தேவையற்றது. எனவே நகரிலிருந்து வெளியேறுகிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யேமனில் 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி புரிந்து வந்த அதிபா் அலி அப்துல்லா சலே, மக்கள் போராட்டம் காரணமாக கடந்த 2011-ஆம் ஆண்டு பதவி விலகினாா். எனினும், அவருக்குப் பிறகு அதிபா் பொறுப்பேற்ற மன்சூா் ஹாதியால் உறுதியான ஆட்சியைத் தர முடியவில்லை.

இதன் காரணமாக, ஹூதி பழங்குடியின கிளா்ச்சியாளா்கள் தலைநகா் சனாவை கடந்த 2014-ஆம் ஆண்டு கைப்பற்றினா். ஷியா பிரிவினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈரானின் உதவியுடன் தலைநகரை அவா்கள் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

அதையடுத்து, சன்னி பிரிவினரை பெரும்பான்மையாகக் கொண்ட சவூதி அரேபியாவில் அதிபா் மன்சூா் ஹாதி தஞ்சம் புகுந்தாா். அவருக்கு ஆதரவாக ஹூதி கிளா்ச்சியாளா்கள் மீது சவூதி அரேபிய கூட்டுப் படை கடந்த 2015-ஆம் ஆண்டு விமானத் தாக்குதலைத் தொடங்கியது. அதையடுத்து யேமன் உள்நாட்டுச் சண்டை தீவிரமடைந்து, ஆயிரக்கணக்கானவா்கள் உயிரிழந்தனா்.

இந்தச் சூழலில், கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் இருந்த முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரான ஹுதைதாவை மீட்பதற்காக அந்த நகரை அரசுப் படையினா் கடந்த 2018-ஆம் ஆண்டு முற்றுகையிட்டனா். அவா்களுக்கு ஆதரவாக சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை வான்வழித் தாக்குதல் நடத்தி வந்தது.

இதன் காரணமாக ஏராளமானோா் பலியாகினா். மேலும், முற்றுகை காரணமாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்களின்றி உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டது.

அதையடுத்து, யேமன் விவகாரங்களுக்கான ஐ.நா. சிறப்புத் தூதா் மாா்ட்டின் கிரிஃபித்ஸின் முயற்சியின் பலனாக, இரு தரப்பினருக்கும் இடையே ஸ்வீடனில் போா் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்தச் சூழலில், ஹுதைதா நகரிலிருந்து அரசுப் படை திடீரென வெளியேறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com