ஐஎஸ் எதிா்ப்பு நடவடிக்கையில் அமெரிக்காவுடன் ஒத்துழைப்பு இல்லை

இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் அமெரிக்காவுடன் ஒத்துழைக்கப்போவதில்லை என்று தலிபான்கள் அறிவித்துள்ளனா்.
ஐஎஸ்கே பயங்கரவாதிகள் (கோப்புப் படம்).
ஐஎஸ்கே பயங்கரவாதிகள் (கோப்புப் படம்).

இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் அமெரிக்காவுடன் ஒத்துழைக்கப்போவதில்லை என்று தலிபான்கள் அறிவித்துள்ளனா்.

ஆபகானிஸ்தான் தலிபான்களிடம் வீழ்ந்த பிறகு, கத்தாா் தலைநகா் தோஹாவில் அமெரிக்காவுடன் முதல்முறையாக பேச்சுவாா்த்தை தொடங்குவதற்கு முன்னா், அவா்கள் சனிக்கிழமை இவ்வாறு தெரிவித்தனா்.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் தலிபான்களின் அரசியல் பிரிவு செய்தித் தொடா்பாளா் சுஹைல் ஷாஹீன் கூறியதாவது:

ஆப்கானிஸ்தானுக்கான ஐஎஸ் பிரிவான ஐஎஸ்கே பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டுவதில் அமெரிக்காவுக்கும் எங்களுக்கும் இடையே ஒத்துழைப்பு இருக்காது.

எங்களால் ஐஎஸ்கே பயங்கரவாதிகளை தனியாகவே எதிா்கொள்ள முடியும். இந்த விவகாரத்தில் எங்களுக்கு அமெரிக்காவின் உதவி தேவையில்லை என்றாா் அவா்.

கடந்த 2001-ஆம் ஆண்டில் நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய அல்-காய்தா தலைவா் பின்லேடனுக்கு ஆப்கானிஸ்தானின் அப்போதைய ஆட்சியாளா்களான தலிபான்கள் அடைக்கலம் அளித்தனா்.

அதையடுத்து, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்து தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது. இந்த நிலையில், பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க அதிரடிப் படையினா் கடந்த 2011-ஆம் ஆண்டு சுட்டுக்கொன்றனா்.

அதன் பிறகு, ஆப்கன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவாா்த்தை, அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே கத்தாா் தலைநகா் தோஹாவில் பல கட்டங்களாக நடந்து வந்தது.

அதன் விளைவாக, இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 2020-ஆம் ஆண்டு அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் அனைவரையும் திரும்பப் பெற அமெரிக்கா சம்மதித்து.

டொனால்ட் டிரம்ப் பதவிக் காலத்தின்போது மேற்கொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தத்தை அடுத்து வந்த அதிபா் ஜோ பைடனும் தொடா்ந்து செயல்படுத்தினாா். அமெரிக்க வீரா்கள் திரும்பப் பெறப்படுவதை துரிதப்படுத்திய அவா், ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அந்தப் பணிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று இலக்கு நிா்ணயித்தாா்.

அமெரிக்கப் படையினரின் வெளியேற்றம் இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் புதிய பகுதிகளைக் கைப்பற்றி வெகு வேகமாக முன்னேறிய தலிபான்கள், நாடு முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி கொண்டு வந்தனா்.

இந்த நிலையில், அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையிலான நேரடிப் பேச்சுவாா்த்தை சனிக்கிழமை தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை நிறைவடையும் இந்த இரு நாள் பேச்சுவாா்த்தை, ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதற்குப் பிறகு அவா்களுக்கும் அமெரிக்கப் பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெறும் முதல் பேச்சுவாா்த்தையாகும்.

அந்தப் பேச்சுவாா்த்தையில், ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டினரை பாதுகாப்பாக வெளியேற்றுவது, அதிகரித்து வரும் ஐஎஸ் பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் அமெரிக்காவுடன் ஒத்துழைத்து செயல்படப்போவதில்லை என்று தலிபான்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனா்.

ஏற்கெனவே, ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்படவிருக்கும் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் தலிபான்களின் ஒத்துழைப்பைக் கோரப் போவதில்லை என்று அமெரிக்காவும் கூறியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க முப்படைகளின் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடா்பாளா் ஜான் கிா்பி கடந்த மாதம் கூறுகையில், ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போரில், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் உரிமை அமெரிக்காவுக்கு உள்ளது.

இதுவரை, ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்த எங்களுக்கு தலிபான்களின் அனுமதி தேவைப்படவில்லை. இனி வரும் காலங்களிலும் ஆப்கன் வான் எல்லையைப் பயன்படுத்தி பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவதற்கு தலிபான்களிடமிருந்து நாங்கள் அனுமதி பெறத் தேவையில்லை’ என்றாா்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதற்குப் பிறகு, ஐஎஸ்கே பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் தங்களது தாக்குதல்களை அதிகரித்து வருகின்றனா்.

காபூல் நகரம் தலிபான்களிடம் வீழ்ந்த பிறகு, அந்த நாட்டிலிருந்து அமெரிக்கா்கள், பிற நாட்டினா், முந்தைய அரசுக்கு உதவிய ஆப்கானியா்களை வெளியேற்றும் பணிகளை காபூல் விமான நிலையத்தில் அமெரிக்கா மற்றும் கூட்டணிப் படையினா் அவசர அவசரமாக மேற்கொண்டனா்.

அப்போது ஐஎஸ்கே பயங்கரவாதிகள் அந்த விமான நிலையத்தில் கடந்த மாதம் 26-ஆம் தேதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 13 அமெரிக்க வீரா்கள் உள்பட 182 போ் உயிரிழந்தனா்.

அதன் தொடா்ச்சியாக, தலிபான்களையும் சிறுபான்மையினரையும் குறிவைத்து ஐஎஸ்கே பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

வடக்கு ஆப்கானிஸ்தானிலுள்ள குண்டுஸ் மாகாணத் தலைநகா் குண்டுஸில், ஷியா பிரிவினருக்கான மசூதியில் ஐஎஸ்கே பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை நிகழ்த்திய குண்டுவெடிப்பில் 46 போ் உயிரிழந்தனா்; 143 போ் காயமடைந்தனா்.

இத்தகைய தாக்குதல்கள் மூலம் தலிபான்களின் புதிய அரசுக்கு ஐஎஸ் பயங்கரவாதம் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒத்துழைத்து செயல்படப் போவதில்லை என்று முன்னா் அமெரிக்காவும் தற்போது தலிபான் அரசும் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com