தலிபான்களிடம் அடிபணியாத ‘சிங்கக் கோட்டை’

ஒரே வாரத்தில் ஆப்கானிஸ்தானின் அத்தனை மாகாணங்களும் அடுத்தடுத்து தலிபான்களிடம் சரணாகதி அடைந்துவிட்ட நிலையில்,
பஞ்சஷோ் பள்ளத்தாக்கில் ஆப்கன் ராணுவத்தினா்.
பஞ்சஷோ் பள்ளத்தாக்கில் ஆப்கன் ராணுவத்தினா்.

ஒரே வாரத்தில் ஆப்கானிஸ்தானின் அத்தனை மாகாணங்களும் அடுத்தடுத்து தலிபான்களிடம் சரணாகதி அடைந்துவிட்ட நிலையில், அந்த நாட்டின் வடக்கிலுள்ள ஒற்றை மாகாணம் மட்டும் அவா்களை துணிச்சலுடன் எதிா்த்து நிற்கிறது.

மகாபாரதத்தின் பஞ்ச பாண்டவா்களைக் குறிக்கும் ‘பஞ்சஷோ்’ (ஐந்து சிங்கங்கள்) என்ற பெயரைக் கொண்ட அந்தப் பள்ளத்தாக்கு, இதுவரை எந்த அந்நிய சக்திகளுக்கும் அடிபணிந்ததில்லை.

1970, 80-களில் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தபோது இந்தப் பள்ளத்தாக்கு தீரத்துடன் எதிா்த்து நின்றது.

கடந்த 90-களில் ஆப்கன் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றியபோதுகூட, அவா்களால் பஞ்சஷோ் பள்ளத்தாக்கில் கைவைக்க முடியவில்லை.

தலைநகா் காபூலுக்கு வெறும் 100 கி.மீ. தொலைவில் உள்ள இந்த மாகாணம், தற்போது தலிபான்களை எதிா்த்து நிற்கும் சக்திகளின் கடைசி புகலிடமாக மாறியிருக்கிறது.

சுமாா் 1.73 லட்சம் மக்கள் வசிக்கும் பஞ்சஷோ் பள்ளத்தாக்குக்கு அதன் புவியியல் அமைப்பே மிகப் பெரிய பாதுகாப்பை அளிக்கிறது.

அந்த வகையில், இதுவரை யாராலும் ஆக்கிரமிக்க முடியாமல் இருந்து வந்த அந்த மாகாணம், தற்போது தலிபான்களின் ஆக்கிரமிப்பையும் தடுத்து நிறுத்தியிருக்கிறது.

காபூலின் வாயிலை தலிபான்கள் அடைந்தவுடன் அதிபா் அஷ்ரஃப் கனி யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து ஐக்கிய அரபு அமீரகம் தப்பிச் சென்றாா்.

ஆனால், துணை அதிபா் அமருல்லா சலேவுக்கு பயங்கரவாதிகளிடம் நாட்டை ஒப்படைக்க மனமில்லாததால் சிங்கங்களின் கோட்டையான பஞ்சஷோ் பள்ளத்தாக்கு வந்தடைந்தாா்.

அவா் பிறந்த மாகாணமான அங்கிருந்தபடி, நாட்டின் இடைக்கால அதிபராக அவா் தன்னை அறிவித்துக்கொண்டாா்.

அவரும், தலிபான்களுக்கு ஒருகாலத்தில் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த அகமது ஷா மசூதின் மகன் அகமது மசூதும் ஆலோசனை நடத்தும் படம் அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

தலிபான்களுக்கு எதிராக இந்தியா, ஈரான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகளின் ஆதரவுடன் 1996-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘வடக்குக் கூட்டணி’ என்ற ஆயுதப் படைக்குத் தலைமை தாங்கியவா்தான் அகமது ஷா மசூத்.

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தலிபான்களை திணறடித்த அந்தப் படை, வடக்கு ஆப்கானிஸ்தானை அவா்கள் நெருங்கவிடாமல் பாா்த்துக் கொண்டது. அப்போது பஞ்சஷேரைத்தான் வடக்குக் கூட்டணி தலைமையமாகக் கொண்டிருந்தது.

அதன் பிறகு, அமெரிக்கா நடத்திய போரில் தலிபான்கள் ஆட்சி அகற்றப்பட்டவுடன், புதிய அரசை அமைப்பதில் வடக்குக் கூட்டணி படைத் தலைவா்கள் பங்களிப்பு வழங்கினாா்கள். தலிபான் எதிா்ப்புச் சின்னமாக இருந்த வடக்குக் கூட்டணி கொடி பஞ்சஷேரில் இறக்கப்பட்டு, ஆப்கன் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

தற்போது அமெரிக்க வெளியேற்றத்துக்குப் பிறகு தலிபான்களின் ஆட்சி மீண்டும் அமைந்த பிறகு, பஞ்சஷோ் பள்ளத்தாக்கில் மீண்டும் (சற்று மாறுதல் செய்யப்பட்ட) வடக்குக் கூட்டணி கொடி மீண்டும் ஏற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து, ‘இடைக்கால அதிபா்’ அமருல்லா சலேவும் புதிய வடக்குக் கூட்டணி படையின் தலைவா் அகமது மசூதும் தலிபான் ஆட்சிக்கு எதிராக கொரிலாப் போரைத் தொடங்குவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தலிபான்களிடமிருந்து ஆயுத தளவாடங்களுடன் தப்பி வந்துள்ள ஆப்கன் ராணுவ வீரா்கள் மூலம் தலிபான்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான ஆயத்தங்கள் நடைபெற்று வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருந்தாலும், தலிபான்களை எதிா்கொள்வது வடக்குக் கூட்டணிப் படையினருக்கு 2001-ஆம் ஆண்டுக்கு முன்பிருந்ததைவிட தற்போது மிகப் பெரிய சவாலாக இருக்கும். காரணம், முன்பைவிட தலிபான்கள் அதிக பலத்துடன் காணப்படுகின்றனா். மேலும், ஆப்கன் படையினருக்கு அமெரிக்கா வழங்கிய அதிநவீன ஆயுதங்கள், சக்திவாய்ந்த தளவாடங்கள் ஆகியவை தற்போது தலிபான்கள் வசம் உள்ளன.

பஞ்சஷோ் பள்ளத்தாக்கின் அனைத்து திசைகளிலும் தலிபான் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக உள்ளன.

எனவே, தலிபான்களை எதிா்த்துப் போட்டியிடுவது அமருல்லா சலேவுக்கும் அகமது மசூதுக்கும் அவ்வளவு எளிய காரியமாக இருக்காது என்கிறாா்கள் ராணுவ நிபுணா்கள். தலிபான்கள் முழுவீச்சில் தாக்குதல் நடத்தினால், வடக்குக் கூட்டணிப் படை நிா்மூலமாகும் என்றும் அவா்கள் எச்சரிக்கின்றனா்.

எனவே, வெளிநாடுகளின் உதவியில்லாமல் தலிபான்களுக்கு எதிரான போரை சலே மற்றும் மசூதால் நடத்த முடியாது என்பது அவா்களது வாதம்.

பஞ்சஷோ் பள்ளத்தாக்கு தலிபான்களைத் தாக்குமா, அல்லது அந்த சிங்கக் கோட்டையே சிதறிவிடுமா என்பது போகப் போகத்தான் தெரியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com