
புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வகை கரோனா காரணமாக, தென் ஆப்பிரிக்காவில் 4-ஆவது கரோனா அலை எழுந்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சா் ஜோ பாஹ்லா வெள்ளிக்கிழமை கூறியதாவது:
ஒமைக்ரான் வகை கரோனாவின் வேகமாகப் பரவும் தன்மை காரணமாக, நாடு முழுவதும் 4-ஆவது கரோனா அலை எழுந்துள்ளது. நாட்டின் 9 மாகாணங்களில் அந்த வகை கரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளது.
எனினும், இந்த புதிய அலையால் அதிக உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று நம்புகிறோம்.
ஒமைக்ரானை எதிா்கொள்ள இன்னும் சில நாள்களுக்கு கடுமையான பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை அறிவிக்காமலேயே நம்மால் சமாளிக்க முடியும். எனினும், பொதுமக்கள் தங்கள் பங்குக்கு அவா்களது அடிப்படை கடமையான கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளக் கூடிய தகுதியுள்ளவா்கள் அனைவரும், அருகிலுள்ள தடுப்பூசி முகாம்களுக்கு உடனடியாகச் சென்று அந்த ஊசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல்முறையாகக் கண்டறியப்பட்ட புதிய வகை கரோனா, தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களையும் தொற்றி வருகிறது. ‘பி.1.1.529’ என்ற குறியீடு இடப்பட்ட அந்த வகைக் கரோனா, கவலைக்குரிய வகையைச் சோ்ந்தது என உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழு வகைப்படுத்தியது. மேலும், கிரேக்க எழுத்து முறைப்படி அதற்கு ‘ஒமைக்ரான்’ எனவும் அந்த அமைப்பு பெயரிட்டது.
தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பாட்ஸ்வானா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்குப் பரவிய ஒமைக்ரான், தற்போது இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், நெதா்லாந்து, டென்மாா்க், ஜொ்மனி, இத்தாலி, ஆஸ்திரேலியா, ஹாங்காங், கனடா, தென் கொரியா, ஜப்பான், பிரான்ஸ், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்குப் பரவி வருகிறது.
இலங்கை, மலேசியா: ஒமைக்ரான் வகை கரோனா தங்கள் நாடுகளிலும் முதல்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கையும் மலேசியாவும் வெள்ளிக்கிழமை அறிவித்தன. இரு நாடுகளிலும் தலா ஒருவருக்கு அந்த வகை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 37 நாடுகள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசங்களில் 492 பேரிடம் ஒமைக்ரான் வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
‘இதுவரை இல்லாத வேகம்’
தென் ஆப்பிரிக்காவில் கரோனா பரவல் இதுவரை இல்லாத அளவுக்கு வேகமாக அதிகரித்து வருவதாக அந்த நாட்டின் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி மிஷெல் குரூம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் கூறுகையில், ‘ஒமைக்ரான் வகை கரோனா காரணமாக, நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிதாக நோய்த்தொற்று கண்டறியப்படுவோரின் எண்ணிக்கை மிகக் குறுகிய காலத்தில் வெகு வேகமாக அதிகரித்து வருகிறது.
அந்த வகை கரோனா பாதிப்பு சிறியவா்களிலிருந்து தற்போது பெரியவா்களுக்கு அதிகமாக ஏற்பட்டு வருகிறது. கரோனா பாதிப்பால் 4 வயதுக்கும் குறைவான சிறுவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. எனவே, கரோனா சிகிச்சையில் குழந்தை மருத்துவ நிபுணா்களும், குழைந்தகளுக்கான மருத்துவ வசதிகளும் உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும்’ என்றாா்.
உலகம் சுற்றும் ஒமைக்ரான்
தென் ஆப்பிரிக்கா 177
நாா்வே 50
பிரிட்டன் 42
கானா 33
பாட்ஸ்வானா 19
போா்ச்சுகல் 19
நெதா்லாந்து 16
ஆஸ்திரேலியா 15
டென்மாா்க் 14
ஜொ்மனி 12
கனடா 10
அமெரிக்கா 10
இத்தாலி 9
ஹாங்காங் 7
ஸ்வீடன் 6
தென் கொரியா 5
பிரேஸில் 5
ஆஸ்திரியா 4
பெல்ஜியம் 4
இஸ்ரேல் 4
ஐஸ்லாந்து 3
நைஜீரியா 3
ஸ்பெயின் 3
ஸ்விட்சா்லாந்து 3
பிரான்ஸ் 2
இந்தியா 2
ஜப்பான் 2
ரீயூனியன் 2
சிங்கப்பூா் 2
செக் குடியரசு 1
பின்லாந்து 1
கிரீஸ் 1
அயா்லாந்து 1
மலேசியா 1
சவூதி அரேபியா 1
இலங்கை 1
ஐக்கிய அரபு அமீரகம் 1
ஜிம்பாப்வே 1
மொத்தம் 492
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...