உலகம் முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்று; அறிய வேண்டிய தகவல்கள்

இயல்பு வாழ்க்கை திரும்புவதாக நாம் நம்பிக்கொண்டிருந்தால், அது மிகப்பெரிய தவறு என்கிறது இந்தச் செய்தி.
இயல்புநிலை திரும்புவதாக நினைப்பது தவறு: இதோ உண்மைநிலை
இயல்புநிலை திரும்புவதாக நினைப்பது தவறு: இதோ உண்மைநிலை


வாஷிங்டன்: கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை உலகைக் கடந்துவிட்டது, தற்போது பொதுமுடக்கங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை திரும்புவதாக நாம் நம்பிக்கொண்டிருந்தால், அது மிகப்பெரிய தவறு என்கிறது இந்தச் செய்தி.

இயல்பு வாழ்க்கை திரும்புவதாக நாம் கருதினாலும், விரைவில் நாட்டில் கரோனா மூன்றாம் அலை தாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் அவ்வப்போது எச்சரிக்கை மணியை அடித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். அதுதான் உண்மைபோலும்.

ஆம், பொதுமுடக்கம் மற்றும் இயல்பு நிலை திரும்பியதாக மக்களின் மனநிலை ஆகியவை காரணமாக உலகம் முழுவதும், கரோனா பாதிப்பும், பலி எண்ணிக்கையும் மீண்டும் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இயல்பு நிலை திரும்பும் என்ற நம்பிக்கை தவிடுபொடியாகியுள்ளது.

தொடர்ந்து 9 வாரங்களாக கரோனா பெருந்தொற்று காரணமாக பலியாவோர் எண்ணிக்கை சரிந்து வந்த நிலையில், அந்த நிலை கடந்த வாரம் மாறியிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த வாரம் மட்டும் 55,000 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இது அதற்கு முந்தைய வாரங்களோடு ஒப்பிடுகையில் 3 சதவீதம் அதிகமாகும்.

புதிதாக கரோனா பாதிப்பும் சுமார் 10 சதவீதம் அதிகரித்துள்ளது, கடந்த வாரத்தில் மட்டும் 30 லட்சம் பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. குறிப்பாக, பிரேசில், இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிரிட்டன் நாடுகளில்தான் இந்த அதிகரிப்பு பதிவாகியிருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்படி, கரோனா பரவலின் சரிவுநிலை திரும்புவதற்குக் காரணிகளாக, தடுப்பூசி செலுத்துவதில் மெத்தனம், முகக்கவசம் அணிவதிலிருந்து விலக்கு உள்ளிட்ட கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு, அதிகம் பரவும் திறன் கொண்ட டெல்டா வகை உருமாறிய கரோனா, போன்றவை இருக்கின்றன. டெல்டா வகை உருமாறிய கரோனா தற்போது 111 நாடுகளில் பரவி வருவதாகவும் வரும் மாதங்களில் இது உலகளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.

உலகம் முழுவதும் கரோன பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், அர்ஜென்டினாவில் கரோனா பலி எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டியிருக்கிறது. ரஷியாவில் இந்த வாரம், பலி எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. பெல்ஜியத்தில் டெல்டா வகை கரோனா வைரஸ் இளைஞர்களை பாதிப்பதும் கடந்த வாரத்தில் கிட்டத்தட்ட இரண்டு மடங்காகியுள்ளது.

கடந்த ஆறு மாதங்களில் இல்லாத வகையில் பிரிட்டனில் ஒரு நாள் புதிய கரோனா பாதிப்பு 40 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.  மியான்மரியில் உள்ள மயானங்கள் காலை முதல் இரவு வரை இடைவிடாமல் இயங்கி வருகின்றன.

கடந்த மாதம் ஒரு நாளைக்கு 8 ஆயிரம் புதிய கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்த இந்தோனேசியாவில் புதன்கிழமை 54,000 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு, கிட்டத்தட்ட ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஜகார்த்தா அருகே இடுகாடுகளில் குழிகளைத் தோண்டும் பணியில் ஊழியர்கள் தேவை அதிகரித்ததால், பொதுமக்களும் அப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவ்வாறு மக்கள் இப்பணியைச் செய்யாவிட்டால், உடல்களைப் புதைக்க பல நாள்கள் காத்திருக்கும் நிலை ஏற்படும் என்கிறார்கள் அங்குள்ள மக்கள்.

அமெரிக்காவிலோ, கடந்த இரண்டு வாரங்களில் கரோனா பாதிப்பு உறுதியாகும் எண்ணிக்கை இரண்டு மடங்காகியுள்ளது. 

ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராகிவிரும் டோக்கியோவில் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து, மருத்துவமனைகளில் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருவதால், அங்கு அவசரநிலையே அறிவிக்கப்பட்டுவிட்டது.

கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக சிட்னியில் பொதுமுடக்கத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சியோலில் கடுமையான கட்டுப்பாடுகள் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதுமுள்ள பல நாடுகளில் அதிகரித்திருக்கும் கரோனா பரவல் பற்றிய இந்தப் பட்டியல் மேலும் நீண்டுகொண்டேதான் இருக்கிறது. உலகம் முழுவதும் அச்சமூட்டும் வகையில் எண்ணிக்கை அமைந்திருந்தாலும், இந்த ஆண்டின் துவக்கத்தில் ஏற்பட்டதைப் போன்ற அபாய எண்ணிக்கையை இன்னும் எட்டவில்லை என்றும் கூறுகிறார்கள்.

கடந்த ஏப்ரல் மாத ஒரு நாள் பாதிப்போடு ஒப்பிடுகையில் பாதியளவாக, உலகம் முழுவதும் ஒரு நாள் பாதிப்பு 4,50,000 ஆகவே உள்ளது.  

பல நாடுகளும், கரோனா பொதுமுடக்கத்தில் தளர்வுகளை அறிவிக்க வேண்டிய கட்டாய நிலையில் இருந்தாலும், இது கரோனா வைரஸ் பரவலுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்து விடும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com