ஹாங்காங்குக்கு பரவிய புதிய வகை உருமாறிய கரோனா

புதிய வகை உருமாறிய கரோனா, வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் மாற்றங்களை கொண்டுள்ளது என்றும் முன்பிருந்த வகைகளை காட்டிலும் வித்தியாசமான ஒன்றாக உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கரோனா அந்நாட்டில் பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில், ஹாங்காங்குக்கு சென்ற இரண்டு பயணிகளுக்கு அவ்வகை கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த அப்பயணியிடம் கண்டறிப்பட்ட புதிய வகை கரோனாவுக்கு B.1.1.529 என பெயரிடப்பட்டுள்ளது. அந்த பயணி தங்கியிருந்த விடுதி அறைக்கு எதிரே உள்ள அறையில் தங்கியிருந்த மற்றொரு நபருக்கும் புதிய வகை கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதை ஹாங்காங் அரசு வியாழக்கிழமை உறுதி செய்துள்ளது.

அந்த புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் சுவாசித்த காற்றை மற்றொரு நபர் சுவாசித்ததால் கரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அரசு விளக்கம் அளித்துள்ளது. புதிய வகை உருமாறிய கரோனா, வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் மாற்றங்களை கொண்டுள்ளது என்றும் முன்பிருந்த வகைகளை காட்டிலும் வித்தியாசமான ஒன்றாக உள்ளது என்றும் இரண்டு தென்னாப்பிரிக்க பல்கலைக்கழகங்களில் உயிர் தகவலியல் பேராசிரியராக பணிபுரிந்துவரும் துலியோ டி ஒலிவேரா தெரிவித்துள்ளார்.

புதிய வகை கரோனா தீவிரமான கவலையை ஏற்படுத்தியுள்ளது என தென்னாப்பிரிக்க சுகாதாரத்துறை அமைச்சர் ஜோ பாஹ்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனத்தில் மருத்துவ நுண்ணுயிரியலாளர் & சுவாச நோய் பிரிவு தலைவர் அன்னே வான் கோட்பெர்க் கூறுகையில், "புதிய வகை கரோனாவால் இதுவரை கிட்டத்தட்ட 100 பேர் பாதிக்கப்பட்டிருப்பதை கிருமியியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்" என்றார்.

போட்ஸ்வானாவிலும் புதிய வகை கரோனாவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் அலுவலர்கள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். தென்னாப்பிரிக்காவின் அண்டை நாடான போட்ஸ்வானாவில் தடுப்பூசி செலுத்தி கொண்ட ஒருவருக்கு புதிய வகை கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறிப்பட்டுள்ளது என அந்நாட்டு கரோனா பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் கெரெங் மசுபு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதன் காரணமாக, தென்னாப்பிரிக்கா மற்றும் அதை சுற்றியுள்ள அண்டை நாடுகளிலிருந்து வரும் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என பிரிட்டன் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com