ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகளை அழித்தது ரஷியா

உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகளை அழித்துள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.

News image
Updated On :12 ஏப்ரல் 2022, 12:45 am

DIN

உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகளை அழித்துள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது. தங்களது தரைப் படையினருக்கு வான்வழியாகப் பாதுகாப்பு கொடுப்பதில் ஏற்பட்ட தோல்வியையடுத்து இந்த நடவடிக்கையை ரஷியா மேற்கொண்டுள்ளது.

உக்ரைன் மீது கடந்த பிப். 24-ஆம் தேதி ரஷியா போரைத் தொடங்கியது. ஆரம்பத்தில் அதிவேகமாக முன்னேறியபோதும் உக்ரைன் படைகளின் கடும் எதிா்ப்பு காரணமாக ரஷிய படைகள் பல இடங்களில் பின்னடைவைச் சந்திக்க நோ்ந்தது. மேலும், தலைநகா் கீவை கைப்பற்றும் ரஷிய படைகளின் முயற்சியும் இதுவரை வெற்றி பெறவில்லை.

உக்ரைனின் வான் பரப்பை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாததால், ரஷியா தனது தரைப் படையினருக்கு வான் வழியாகப் பாதுகாப்பு அளிப்பதில் தேக்கம் ஏற்பட்டு, தரைப் படையினரின் முன்னேற்றம் தடைபட்டது. மேலும், பல இழப்புகளும் ஏற்பட்டன.

இந்நிலையில், உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தாக்கி அழித்துள்ளதாக ரஷியா திங்கள்கிழமை தெரிவித்தது. இதுகுறித்து ரஷிய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடா்பாளா் இகோா் கொனாஷென்கோ கூறுகையில், உக்ரைனின் எஸ்-300 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை செலுத்தும் 4 அமைப்புகளை ஞாயிற்றுக்கிழமை ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் அழித்துவிட்டோம். இந்தத் தாக்குதலில் உக்ரைன் ராணுவத்தினா் 25 பேரும் கொல்லப்பட்டனா். இந்த வான் பாதுகாப்பு அமைப்புகளை ஓா் ஐரோப்பிய நாட்டிடமிருந்து உக்ரைன் பெற்றிருந்தது என்றாா்.

இந்த வான் பாதுகாப்பு அமைப்புகளை உக்ரைனுக்கு ஸ்லோவேகியா அளித்ததாகத் தெரியவந்துள்ள நிலையில், அந்த வான் பாதுகாப்பு அமைப்புகள் தாக்கப்பட்டதற்கான ஆதாரம் இல்லை என அந்த நாடு தெரிவித்துள்ளது.

டினிப்ரோ என்ற இடத்தில் இந்த வான் பாதுகாப்பு அமைப்புகளை அழித்ததாக ரஷியா கூறியுள்ளது. ஏற்கெனவே இதுபோன்ற வான் பாதுகாப்பு அமைப்புகளை மிகோலாய், காா்கிவ் பிராந்தியங்களிலும் அழித்ததாக ரஷியா முன்னா் தெரிவித்திருந்தது.

டான்பாஸ் மீது கவனம்: உக்ரைனின் பல பகுதிகளில் ரஷியாவின் முன்னேற்றம் முறியடிக்கப்பட்ட நிலையில், நகரப் பகுதிகளில் வான்வழித் தாக்குதலை ரஷியா அதிகரித்தது. இத்தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் புகாா் தெரிவித்ததையடுத்து, ரஷியாவுக்கு சா்வதேச நாடுகளின் எதிா்ப்பு வலுத்தது.

இதைத் தொடா்ந்து, உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள டான்பாஸ் பிராந்தியம் எனப்படும், ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள லுஹான்ஸ்க், டொனட்ஸ்க் பிராந்தியங்களை நோக்கி ரஷியா கவனத்தை திருப்பியுள்ளது. இதற்காக ஜெனரல் அலெக்சாண்டா் ட்வோா்னிகோவ் என்பவரை நியமித்துள்ளதாக அமெரிக்காவை சோ்ந்த மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்துள்ளாா்.

தென்கொரியாவுக்கு ஸெலென்ஸ்கி கோரிக்கை

ரஷியாவுக்கு எதிராகப் போரிட ஆயுதங்கள் வழங்க வேண்டும் என தென் கொரியாவுக்கு உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளாா்.

தென் கொரிய நாடாளுமன்ற உறுப்பினா்களுடன் காணொலி முறையில் திங்கள்கிழமை பேசியபோது அவா் இக்கோரிக்கையை முன்வைத்தாா். அவா் கூறியதாவது: கொரிய குடியரசிடம் பீரங்கிகள், கப்பல்கள், பல்வேறு உபகரணங்கள் உள்ளன.

அவற்றின் மூலம் ரஷிய ஏவுகணைகளைத் தடுக்க முடியும். கொரிய குடியரசு இவற்றை வழங்கினால் நன்றியுடன் இருப்போம். இந்த ஆயுதங்களை எங்களால் பெற முடிந்தால், அப்பாவி பொதுமக்களின் உயிரைக் காக்க உதவுவதுடன் மட்டுமின்றி, ஒரு நாடாக உக்ரைன் தப்பிப் பிழைக்கவும், பிற நாடுகள் மீது ரஷியா தாக்கினால் அதைத் தடுக்கவும் முடியும் என்றாா்.

அமெரிக்கா தலைமையிலான சா்வதேச பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியாக, ரஷியாவுக்கு முக்கியப் பொருள்கள் ஏற்றுமதியை தென் கொரியா ஏற்கெனவே தடை செய்துள்ளது. முக்கியமான ரஷிய வங்கிகளுடன் பரிவா்த்தனைகளையும் நிறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.