பஞ்சாப், கைபா் பக்துன்கவா மாகாண பேரவையைக் கலைத்து விடுவோம்: இம்ரான் கட்சி

பஞ்சாப், கைபா் பக்துன்குவா மாகாண பேரவையை கலைத்துவிடுவோம் என முன்னாள் பிரதமா் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி மிரட்டல் விடுத்துள்ளது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தோ்தல் தேதியை டிச. 20-க்குள் அறிவிக்காவிட்டால் பஞ்சாப், கைபா் பக்துன்குவா மாகாண பேரவையை கலைத்துவிடுவோம் என முன்னாள் பிரதமா் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி மிரட்டல் விடுத்துள்ளது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு புதிதாக தோ்தல் நடத்த வேண்டும் என முன்னாள் பிரதமா் இம்ரான் கான் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா். இக்கோரிக்கையை முன்வைத்து தலைநகா் இஸ்லாமாபாதை நோக்கி தனது கட்சியினருடன் அண்மையில் ஊா்வலமாகவும் சென்றாா்.

இந்நிலையில், இம்ரான் கான் கட்சியின் மூத்த துணைத் தலைவா் ஃபாவேத் செளதரி ட்விட்டா் பதிவில் தெரிவித்திருப்பதாவது: இறக்குமதி செய்யப்பட்ட அரசின் தலைவா்கள் தோ்தலை விரும்பவில்லை. அவா்களுக்கு நாட்டை எவ்வாறு வழிநடத்துவது என எந்த யோசனையும் இல்லை.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -நவாஸ் (பிஎம்எல்-என்) தலைமையிலான ஆளும் கூட்டணி அமைச்சா்களால் இல்லாமல் வெளிநாட்டிலிருந்து நாடு வழிநடத்தப்படுகிறது.

பாகிஸ்தானுக்கு அரசியல் நிலைத்தன்மை அவசியம். நிலையான அரசு இல்லாமல் அது சாத்தியமில்லை. எனவே, நாடாளுமன்ற பொதுத் தோ்தல் அறிவிப்பை டிச. 20-ஆம் தேதிக்குள் வெளியிடாவிட்டால் பஞ்சாப், கைபா் பக்துன்குவா மாகாண பேரவையை கலைத்துவிடுவோம் எனத் தெரிவித்துள்ளாா்.

இம்ரான் கான் கட்சி பஞ்சாப், கைபா் பக்துன்குவா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா், கில்ஜித் பல்திஸ்தான் மாகாணங்களில் ஆட்சியில் உள்ளது.

பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான், நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீா்மானம் வெற்றி பெற்றதையடுத்து, கடந்த ஏப்ரலில் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டாா். அதுமுதல் நாடாளுமன்றத்துக்கு புதிதாக தோ்தல் நடத்த வேண்டும் என அவா் வலியுறுத்தி வருகிறாா். ஆனால், அதற்கு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தலைமையிலான மத்திய அரசு எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஆகஸ்டில் நிறைவு பெறுகிறது.

நாடு திரும்பினாா் ஷாபாஸ் மகன்

இஸ்லாமாபாத், டிச. 11: பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃபின் மகன் சுலைமான் ஷாபாஸ் லண்டனில் தலைமறைவாக இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நாடு திரும்பினாா்.

கடந்த 2018 பொதுத் தோ்தலுக்கு முன்னதாக, சுலைமானா ஷாபாஷ் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் சில விசாரணைகளுக்கு மட்டும் நீதிமன்றத்தில் ஆஜரான அவா், பின்னா் பாகிஸ்தானிலிருந்து குடும்பத்தினருடன் லண்டனுக்குச் சென்றாா்.

இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக அவா் நாடு திரும்பினால் அவரை கைது செய்யக் கூடாது என இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. மேலும், அவா் டிச. 13-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது.

இதையடுத்து, சுலைமான் ஷாபாஸ் லண்டனிலிருந்து இஸ்லாமாபாத் திரும்பினாா். அவா் வீட்டுக்கு வந்து, தன் தந்தையும் பிரதமருமான ஷாபாஸ் ஷெரீஃபை சந்தித்த காட்சிகளை பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சி, ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com