'நக்கலாக சிரித்த பயங்கரவாதி கசாப்': மும்பை தாக்குதலில் உயிர் தப்பியவரின் அனுபவம்

அரசு மருத்துவமனையிலிருந்த 20 நிறைமாத கர்ப்பிணிகளின் உயிரைக் காப்பாற்றி மிக வீரப்பெண்ணாக அடையாளம் காணப்பட்டவர் அஞ்சலி.
'நக்கலாக சிரித்த பயங்கரவாதி கசாப்': மும்பை தாக்குதலில் உயிர் தப்பியவரின் அனுபவம்
'நக்கலாக சிரித்த பயங்கரவாதி கசாப்': மும்பை தாக்குதலில் உயிர் தப்பியவரின் அனுபவம்


2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி, மும்பையில் உள்ள காமா மற்றும் அல்பிலெஸ் அரசு மருத்துவமனையிலிருந்த 20 நிறைமாத கர்ப்பிணிகளின் உயிரைக் காப்பாற்றி மிக வீரப்பெண்ணாக அடையாளம் காணப்பட்டவர் அஞ்சலி.

26/11 தாக்குதலில் உயிர்பிழைத்தவரும், அரசு மருத்துவமனையின் செவிலியர் அதிகாரியுமான அஞ்சலி விஜய் குல்தே, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி இரவு மருத்துவமனையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிர் தப்பிய அதிர்ஷ்டசாலிகளில் நானும் ஒருவர். உலகம் முழுவதும் பயங்கரவாதத் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினர் மற்றும் தாக்குதலில் உயிர் தப்பியவர்களின் குரலைப் பதிவு செய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சில் ஏற்படுத்திய கூட்டத்தில் எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டேன் என்கிறார்.

தனது கவனிப்பில் இருந்த 20 நிறைமாத கர்ப்பிணிகளைக் காக்க போராடிய அஞ்சலி கூறுகையில், மருத்துவமனைக்கு அருகே இருக்கும் ரயில் நிலையத்தை பயங்கரவாதிகள் சுற்றிவளைத்துவிட்டதாகத் தகவல் கிடைத்தது. அவசரநிலையை எதிர்கொள்ளத் தயாராகுமாறு எங்களுக்கு அறிவுறுத்தல் வந்தது. 10.30 மணியளவில் துப்பாக்கிகள் வெடிக்கும் சப்தம் கேட்டது. பயங்கரவாதிகள் மருத்துவமனைக்குள் வந்து துப்பாக்கிச் சூடு நடத்திய போது, எனது உதவியாளருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக முதல் தளத்துக்குச் சென்று கீழ்தளத்திலிருந்து மேலே வருவதற்கான நுழைவு வாயிலில் இருந்த இரும்புக் கதவைப் பூட்டினேன். பிறகு முதல் தளத்திலிருந்த நோயாளிகளை சமையலறைக்கு மாற்றினோம். பிறகு அனைத்து அறைகளின் விளக்குகளையும் அணைத்துவிட்டேன். அப்போதுதான் பயங்கரவாதிகள் அங்கு வந்தாலும், நோயாளிகள் அங்கு இருப்பதை தெரிந்து கொள்ள முடியாது என்று நினைத்தேன்.

பூட்டி அறைகளுக்குள் முழுக்க இருட்டில் இரவு முழுக்க இருந்தோம். இருக்கும் இடத்தை விட்டு அசையாமல் இருக்குமாறு கர்ப்பிணிகளுக்குச் சொல்லியிருந்தேன். கிரானைட் வெடிக்கும் சப்தங்கள் கேட்டபடி இருந்தது.

பிறகு காலை காவல்துறை வந்தபோதுதான் அந்த கேட்டை நான் திறந்தேன். நாங்கள் அப்போது உயிரோடு இருக்கிறோம் என்பதே எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது என்கிறார் இப்போதும் கண்களில் அந்த அதிர்ச்சி மாறாமல்.

பூச்சிகளை நசுக்குவது போல மனிதர்களை அந்த பயங்கரவாதிகள் கொன்றுகுவித்தார்கள். அதே வேளையில் நான் 20 நிறைமாத கர்ப்பிணிகளைக் காப்பாற்றினேன் என்று நினைக்கும் போது அவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்கிறார் அஞ்சலி.

இந்த தாக்குதல் நடந்து ஒரு மாதத்துக்குப் பிறகு பயங்கரவாதியை அடையாளம் காட்ட அழைக்கப்பட்டேன். எனது குடும்பமே பயந்தது. நான் பயங்கரவாதி கசாப்பை அடையாளம் காட்டினேன். அப்போது அவர் நக்கலாக சிரித்தபடி மேடம், நீங்கள் என்னை சரியாக அடையாளம் காட்டிவிட்டீர்கள். என் பெயர் அஜ்மல் கசாப் என்று சிரித்தபடியே கூறினான். அப்போதும் அவனுக்கு எந்த குற்ற உணர்ச்சியோ, வருத்தமோ இருக்கவில்லை என்றும் அஞ்சலி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com