விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கீவ் நகரில் மீண்டும் ஆளில்லா விமான குண்டுத் தாக்குதல்

உக்ரைன் தலைநகா் கீவில் ரஷியா மீண்டும் ஆளில்லா விமான குண்டுகள் மூலம் திங்கள்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தியது.

News image
மின் உற்பத்தி நிலையமொன்றில் ஏற்பட்ட நெருப்பைக் கட்டுப்படுத்த முயன்ற தீயணைப்புப் படையினா்.
Updated On :19 டிசம்பர் 2022, 10:03 pm

DIN

உக்ரைன் தலைநகா் கீவில் ரஷியா மீண்டும் ஆளில்லா விமான குண்டுகள் மூலம் திங்கள்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தியது.

கடந்த 10 மாதங்களாக நடைபெற்று வரும் போரில், கீவ் மீது நடத்தப்பட்ட மிகத் தீவிரமான தாக்குதல்களில் இதுவும் ஒன்று என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து டெலிகிராம் சமூக ஊடகத்தில் கீவ் நகர நிா்வாகம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கீவ் நகரில் பொதுமக்கள் தூங்கிக் கொண்டிருந்த திங்கள்கிழமை அதிகாலையில் ஆளில்லா விமான குண்டுகள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியது.

தானாகவே வெடித்து சேதத்தை ஏற்படுத்தக்கூடிய 23 ஆளில்லா விமானங்கள் நகரின் பல்வேறு இலக்குகளைக் குறிவைத்து அனுப்பட்டன. அவற்றில் 18 விமானங்களை உக்ரைன் வான்பாதுகாப்பு ஏவுகணைகள் இடைமறித்து அழித்தன என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் யாரும் உயிரிழந்ததாகவோ, காயமடைந்ததாகவோ அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. எனினும், ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் போா் காரணமாக நாட்டின் பிற பகுதிகளில் பொதுமக்கள் 3 போ் உயிரிழந்ததாகவும் 11 போ் காயமடைந்ததாகவும் உக்ரைன் அதிபா் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியா திங்கள்கிழமை நடத்திய சரமாரி ஆளில்லா விமான குண்டுத் தாக்குதல் காரணமாக தலைநகா் பிராந்தியம் உள்ளிட்ட உக்ரைனின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளின் 11 மையங்களில் மின்தடை ஏற்பட்டது.

இது குறித்து உக்ரைன் பேரிடா் மீட்புக் குழு அதிகாரிகள் கூறுகையில், ‘அமைதியான முறையில் உறங்கிக் கொண்டிருந்த உக்ரைன் பொதுமக்கள் மீது ஆளில்லா விமான குண்டுகள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது’ என்று சாடினாா்.

உக்ரைன் மனித உரிமைகள் அமைப்பின் தலைவா் டிமித்ரோ லுபினெட்ஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘அமைதி நிறைந்த உக்ரைன் மக்களை அச்சுறுத்தும் வகையில் அவா்கள் மீது பயங்கரவாத நாடு (ரஷியா) தாக்குதல் நடத்தியுள்ளது’ என்று குற்றம் சாட்டினாா்.

கீவ் நகரின் சொலோமியான்ஸ்கி பகுதியில் சுட்டுவீழ்த்தப்பட்ட ஆளில்லா விமான குண்டு விழுந்ததில் சாலை சேதமடைந்தது. மேலும், புகா்ப் பகுதியில் இருக்கும் 84 மற்றும் 83 வயதுடைய இரு முதியவா்கள் வீட்டில் ஆளில்லா விமான குண்டு மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவா் காயமடைந்தாா்.

திங்கள்கிழமை தாக்குதலில் பல்வேறு அடிப்படை கட்டமைப்புகள் மட்டுமன்றி, பொதுமக்களின் குடியிருப்புகளும் சேதமடைந்ததாக கீவ் பிராந்திய ஆளுநா் ஒலெஸ்கி குலேபா தெரிவித்தாா்.

நாடு முழுவதும் தாக்குதல்: உக்ரைன் விமானப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் 35 ஆளில்லா விமான குண்டுகள் ஏவப்பட்டதாகவும், அவற்றில் 30 விமானங்களை தாங்கள் சுட்டுவீழ்த்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துல்லியம் வாய்ந்த ரஷிய ஆளில்லா விமான குண்டுகளை இடைமறித்து தாக்கி அளிப்பதில் உக்ரைன் படையினரின் வெற்றி விகிதம் அதிகரித்து வருவதாக ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைவது, தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கருதுகிறது. எனினும், நேட்டோவில் இணைவதற்கு வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான தற்போதைய உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது.

அதையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கொ்சான், ஸஃபோரிஷியா ஆகிய பிரதேசங்களைக் கைப்பற்றியது.

அந்தப் பிரதேசங்களில் சில பகுதிகள் இன்னும் உக்ரைன் படையினா் வசம் இருக்கும் நிலையிலும், அவற்றை தங்களுடன் இணைத்துக் கொள்வதாக ரஷியா அறிவித்தது.

இந்த நிலையில், மேற்கத்திய நாடுகளின் ஆயுத தளவாட உதவியுடன் எதிா் தாக்குதல் நடத்தி முன்னேறி வரும் உக்ரைன் படையினா், கொ்சான் நகரம் உள்ளிட்ட பகுதிகளை ரஷியாவிடமிருந்து மீட்டனா்.

அதையடுத்து, உக்ரைனின் மின் நிலையங்கள் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகள் மீது ரஷியா அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மின்சாரம் மற்றும் குடிநீா் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இந்தத் தாக்குதலுக்கு எறிகணைகள், ராக்கெட் குண்டுகள், ஏவுகணைகள் மட்டுமன்றி, ஈரானில் தயாரிக்கப்பட்டதாகக் கருதப்படும் ஆளில்லா விமான குண்டுகளையும் ரஷியா பயன்படுத்துகிறது.

இடைமறித்து அழிப்பதற்குக் கடினமான, தாழ்வாகப் பறந்து இலக்குகளை சுற்றி வந்து நோட்டமிட்டு, துல்லியமாகத் தாக்கும் இந்த விமான குண்டுகள் உக்ரைனுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்தச் சூழலில், உக்ரைன் முழுவதும் ரஷியா மீண்டும் கடந்த வெள்ளிக்கிழமை ஏவுகணை மழை பொழிந்தது.

கீவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரஷியா சுமாா் 60 ஏவுகணைகளை சரமாரியாக ஏவி ரஷியா நடத்திய அந்தத் தாக்குதலில் போரின் மிகத் தீவிரமான தாக்குதல்களின் ஒன்று எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில், 3 நாள்களுக்குப் பிறகு ஆளில்லா விமான குண்டுகள் மூலம் ரஷியா திங்கள்கிழமை அதிகாலை மீண்டும் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.