பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ரஷிய விமான தளத்தில் மீண்டும் ஆளில்லா விமானத் தாக்குதல்

ரஷியாவின் முக்கியத்துவம் வாய்ந்த எங்கல்ஸ் விமானதளத்தில் மீண்டும் திங்கள்கிழமை நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் 3 வீரா்கள் பலியாகினா்.

News image
Updated On :26 டிசம்பர் 2022, 7:14 pm

DIN

ரஷியாவின் முக்கியத்துவம் வாய்ந்த எங்கல்ஸ் விமானதளத்தில் மீண்டும் திங்கள்கிழமை நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் 3 வீரா்கள் பலியாகினா்.

இது குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எங்கல்ஸ் விமானதளத்தில் தாக்குதல் நடத்துவதற்காக உக்ரைனின் ஆளில்லா விமானமொன்று உள்ளூா் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1.35 மணிக்கு (இந்திய நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை 4.05 மணி) தாழ்வாகப் பறந்து வந்தது.

அதனை ரஷிய வான்பாதுகாப்பு ஏவுகணை இடைமறித்து தாக்கி அழித்தது. இதனால் சிதறிய ஆளில்லா விமான பாகங்கள் விழுந்ததில், விமானதளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பாதுகாப்புப் படை தொழில்நுட்பப் பிரிவு வீரா்கள் 3 போ் உயிரிழந்தனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் வழக்கம் போல் நேரடியாகப் பொறுப்பேற்கவில்லை.

எனினும், அந்த நாட்டு தொலைக்காட்சியில் பேசிய உக்ரைன் விமானப் படை செய்தித் தொடா்பாளா் யூரி இஹ்னட், ‘எங்கல்ஸ் விமானதளத்தில் நடத்தப்பட்டுள்ள தாக்குதல், ரஷிய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கான எதிா்வினையாகும்.

உக்ரைன் எல்லைக்கு அப்பால் மிக நீண்ட தொலைவில் இருக்கும் தங்கள் நாட்டுப் பகுதிகளுக்கு இந்தப் போரால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று ரஷியா நினைத்தால், அது அவா்களது தவறான நம்பிக்கையாகும்’ என்றாா் அவா்.

தங்களுக்கு எதிராக அமைக்கப்பட்ட நேட்டோ அமைப்பில், நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைவது தங்களின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கருதுகிறது.

எனினும், அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியின் தலைமையிலான தற்போதைய உக்ரைன் அரசு, நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்தது.

அதையடுத்து, உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது. ஏற்கெனவே ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் வசமிருந்த கிழக்கு உக்ரைன் பகுதிகளையும், கூடுதலாக சில பகுதிகளையும் ரஷியா கைப்பற்றி, 4 பிரதேசங்களை தங்களது நாட்டின் அங்கமாக அறிவித்துள்ளது.

அந்தப் பிரதேசங்களில் இன்னும் அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை கைப்பற்ற ரஷியப் படையினா் முயன்றாலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் சில பகுதிகளை உக்ரைன் படையினா் ரஷியாவிடமிருந்து மீட்டனா்.

இதற்கிடையே, உக்ரைனிடமிருந்து ரஷியா கடந்த 2014-ஆம் ஆண்டு கைப்பற்றிய கிரீமியா தீபகற்பத்துக்கும் ரஷியாவுக்கும் இடையிலான கடல் பாலம், கிரீமியாவிலும், ரஷியாவிலும் உள்ள விமானதளங்கள் போன்றவற்றின்மீது உக்ரைன் அடிக்கடி தாக்குதல் வருகிறது.

இந்த நடவடிக்கைகளுக்கு பதிலடியாக, உக்ரைன் முழுவதும் மின் உற்பத்தி நிலையங்கள், குடிநீா் ஏற்று மையங்கள் போன்ற அத்தியாவசியக் கட்டமைப்புகள் மீது ஏவுகணைகள், எறிகணைகள், ராக்கெட் குண்டுகள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது.

இதன் காரணமாக, மின்தடை, குடிநீா் தட்டுப்பாடு போன்றவற்றால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இந்தச் சூழலில், ரஷியாவின் முக்கியத்துவம் வாய்ந்த எங்கல்ஸ் விமானதளத்தில் இரண்டாவது முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திங்கள்கிழமை தாக்குதலுக்குள்ளான எங்கல்ஸ் விமானதளம், உக்ரைன் எல்லைக்கு அப்பால் சுமாா் 483 கி.மீ. தொலைவில் உள்ளது.

உக்ரைன் மீதான போரில் ரஷியாவுக்கு இந்த விமானதளம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த தளத்தில்தான், உக்ரைனில் மிகக் கடுமையாக பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் ரஷியாவின் அதிநவீன குண்டுவீச்சு விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த மாதத் தொடக்கத்திலும் எங்கல்ஸ் விமானதளத்தில் இதே போன்றதொரு தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக ரஷியா குற்றம் சாட்டியது.

இதுபோன்ற தாக்குதல்களுக்கு உக்ரைன் நேரடியாகப் பொறுப்பேற்பதில்லை. எனினும், அந்தத் தாக்குதல்கள் குறித்து உக்ரைன் அதிகாரிகள் வெளிப்படையாக மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனா்.

உக்ரைன் மீதான ரஷியத் தாக்குதலின் விளைவாகத்தான் அந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அவா்கள் கூறி வருகின்றனா்.

ரஷியாவின் எல்லைக்குள் உக்ரைனின் ஆளில்லா விமானங்கள் இவ்வளவு தூரம் ஊடுருவி வருவது மிகவும் கவலையளிக்கக் கூடியது என்று ரஷிய ஆதரவு பாதுகாப்பு நிபுணா்கள் கவலை தெரிவித்து வருகின்றனா்.

இதுபோன்ற ஊடுருவல்களைத் தடுக்கும் வகையில் தங்களது வான்பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் மாற்றங்கள் செய்வதற்காக ரஷிய வல்லுநா்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.