கோத்தபய பதவி விலகல் -நாளை அறிவிப்பு: புதிய அதிபராகிறார் சஜித்?

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச பதவி விலகல் குறித்து நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்


இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச பதவி விலகல் குறித்து நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது ராஜிநாமா கடிதத்தில் ஏற்கெனவே அவர்  கையெழுத்திட்டுள்ளதாகவும், அந்த கடிதம் குறித்து நாளை அறிவிக்கப்படும் எனவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மகிந்த ராஜபட்ச பிரதமர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து மே 12ஆம் தேதி இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார்.

பொருளாதாரப் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் உறுதியளித்திருந்தார். எனினும் அடிப்படை தேவைகளுக்காக மக்கள் போராடவேண்டிய சூழலே நிலவி வருகிறது.

இதனைத்தொடர்ந்து அதிபர் கோத்தபர ராஜபட்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இருவருக்கும் எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருவரது இல்லத்தையும் முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இருவரும் ராணுவ பாதுகாப்புடன் தலைமறைவாகினர். 

இலங்கையின் அசாதாரண சூழலின் மத்தியில் கடந்த 9ஆம் தேதி நடந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற ரணில் விக்கிரமசிங்க தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்வதற்கு ஒப்புதல் அளித்தார். 

அதனைத்தொடர்ந்து அதிபர் கோத்தபயவும் பதவி விலக வலியுறுத்தி போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிநாட்டிற்கு அவர் தனது குடும்பத்துடன் தப்பித்துச்செல்ல முயறார். எனினும் அவரது முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. தற்போது அவர் ராணுவ பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே அதிபர் பதவி ராஜிநாமா குறித்து நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. தனது ராஜிநாமா கடிதத்தில் ஏற்கெனவே கையெழுத்திட்டுள்ளதாகவும், அது குறித்து நாடாளுமன்றத்தில் நாளை தெரிவிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேலும், நாட்டின் அடுத்த அதிபரைத் தேர்வு செய்வது குறித்தும் முடிவு எடுக்கப்படவுள்ளது. இதில் முக்கிய எதிர்க்கட்சிகள் இணைந்து  சமாகி ஜன பாலவேகயா கட்சித் தலைவரான சஜித் பிரமதாசாவை அதிபர் வேட்பாளராகத் தேர்வு செய்யலாம் எனவும் தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com