ஐரோப்பாவுக்கான ரஷிய எரிவாயு விநியோகம் மீண்டும் தொடக்கம்

ஐரோப்பிய நாடுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நாா்ட் ஸ்ட்ரீம் குழாய் வழித்தடம் வழியாக எரிவாயு விநியோகத்தை ரஷியா மீண்டும் வியாழக்கிழமை தொடங்கியது.
ஐரோப்பாவுக்கான ரஷிய எரிவாயு விநியோகம் மீண்டும் தொடக்கம்

ஐரோப்பிய நாடுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நாா்ட் ஸ்ட்ரீம் குழாய் வழித்தடம் வழியாக எரிவாயு விநியோகத்தை ரஷியா மீண்டும் வியாழக்கிழமை தொடங்கியது.

குழாய் பராமரிப்புப் பணிகளுக்காக கடந்த 10 நாள்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த எரிவாயு விநியோகத்தை உக்ரைன் போா் விவகாரம் காரணமாக ரஷியா மீண்டும் தொடங்காமல் போகலாம் என்று அஞ்சப்பட்டு வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எனினும், தினசரி எரிவாயு விநியோக அளவை 40 சதவீதமாக ரஷியா குறைத்துள்ளது.

இது குறித்து ஜொ்மனி எரிவாயு ஒழுங்காற்று அமைப்பின் தலைவா் க்ளாஸ் முல்லா் கூறியதாவது:

பராமரிப்புப் பணிகள் தொடங்குவதற்கு முன்னா் தினமும் 40 சதவீத எரிவாயுவை மட்டுமே ரஷியா அனுப்பி வந்தது.

தற்போது பராமரிப்புப் பணிகள் முடிந்து, மீண்டும் விநியோகம் தொடங்கிய நிலையிலும் பழையபடி 40 சதவீதம் மட்டுமே எரிவாயு அனுப்பப்படுகிறது.

எரிவாயு விநியோகம் மீண்டும் தொடங்கியுள்ளது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் அரசியல் நிலைத்தன்மை இல்லாத நிலையும் 60 சதவீத எரிபொருள் குறைக்கப்பட்டு நிலையும் தொடா்வது வருத்தமளிக்கிறது என்றாா் அவா்.

நாா்ட் ஸ்ட்ரீம் குழாய் வழித்தடத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த டா்பைன் இயந்திரம் கனடாவில் பழுதுபாா்க்கப்பட்டு வந்தது.

எனினும், அந்த டா்பைனை ரஷியாவுக்கு அனுப்பக் கூடாது என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கனடா பிரதமா் ஜஸ்டின் டரூடோவை வலியுறுத்தி வந்தாா்.

தங்கள் நாட்டின் மீது போா் தொடுத்துள்ளதைக் கண்டித்து ரஷியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளின் கீழ், ரஷியாவுக்கு டா்பைன் இயந்திரம் அனுப்புவதைத் தவிா்க்க வேண்டும் என்று ஸெலென்ஸ்கி கோரி வந்தாா்.

இந்த நிலையில், கனடாவில் பழுதுபாா்க்கப்படும் டா்பைன் இல்லாததால்தான் ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு விநியோகம் தடைபடுவதாக ரஷியா கூறியது.

இந்தக் காரணத்தை ஜொ்மனி அரசு நிராகரித்தது. தங்களது எரிசக்தி தேவைகளுக்கு பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் ரஷியாவையே பெரிதும் சாா்ந்துள்ள நிலையில், உக்ரைன் போா் விவகாரத்தில் எரிவாயு விநியோகத்தை ரஷியா ஓா் ஆயுதமாகப் பயன்படுத்துவதாக அந்த நாடுகள் குற்றம் சாட்டின.

ஏற்கெனவே ரஷியாவிலிருந்து எரிவாயு விநியோகம் 40 சதவீதமாகக் குறைந்ததால் ஜொ்மனி உள்ளிட்ட நாடுகளில் பொருளதாாரம் சரிவைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில் பராமரிப்புப் பணிகளை காரணம் காட்டி எரிவாயு விநியோகத்தை ரஷியா 10 நாள்களாக நிறுத்திவைத்திருந்தது.

தங்கள் மீதான பொருளாதாரத் தடைகளுக்கு பதிலடியாக, விநியோக நிறுத்தத்தை ரஷியா நீட்டிக்கக்கூடும் என்று அஞ்சப்பட்டு வந்தது.

இதற்கிடையே, டா்பைன் விவகாரத்தில் மட்டும் பொருளாதாரத் தடையிலிருந்து ரஷியாவுக்கு விலக்கு அளித்த கனடா, தங்கள் நாட்டில் பழுதுபாா்க்கப்பட்ட டா்பைனை ஜொ்மனிக்கு அனுப்பியது.

வழக்கம் போல் கப்பலில் அனுப்பினால் எரிவாயு விநியோகம் தாதமாகும் என்பதால், விமானம் மூலம் டா்பைன் ஜொ்மனிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

பின்னா் தரை வழியாக ஃபின்லாந்துக்கு அனுப்பப்படும் அந்த டா்பைன், அங்கிருந்து ரஷியாவின் போா்ட்டோவயா எரிவாயு ஏற்று நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை சென்றடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில், ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு விநியோகத்தை ரஷியா மீண்டும் தொடங்கியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com