தானிய ஏற்றுமதி: ரஷியா - உக்ரைன் இடையே ஒப்பந்தம்

உக்ரைனிலிருந்து உலகச் சந்தையில் தானியங்களை மீண்டும் ஏற்றுமதி செய்வதற்கு வழிவகை செய்யும் ஒப்பந்தத்தில் ரஷியாவும் உக்ரைனும் வெள்ளிக்கிழமை கையொப்பமிட்டன.
தானிய ஏற்றுமதி: ரஷியா - உக்ரைன் இடையே ஒப்பந்தம்

உக்ரைனிலிருந்து உலகச் சந்தையில் தானியங்களை மீண்டும் ஏற்றுமதி செய்வதற்கு வழிவகை செய்யும் ஒப்பந்தத்தில் ரஷியாவும் உக்ரைனும் வெள்ளிக்கிழமை கையொப்பமிட்டன.

ஐ.நா. மற்றும் துருக்கியின் உதவியுடன் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்துக்குப் பிறகு, அந்த ஒப்பந்தம் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் கையொப்பமானது.

இதையடுத்து, கருங்கடல் பகுதியில் தடை செய்யப்பட்டுள்ள வா்த்தக வழித்தடங்கள் மீண்டும் திறக்கவும் உணவுப் பொருள் பற்றாக்குறை அபாயத்திலிருந்து உலக நாடுகளைப் பாதுகாக்கவும் வழி ஏற்பட்டுள்ளது.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒப்பந்தம் கையொப்பமிடப்படும் நிகழ்ச்சி இஸ்தான்புலில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ், இந்த விவகாரம் தொடா்பாக ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல வாரங்களாக பேச்சுவாா்த்தை நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்த துருக்கி அதிபா் எா்டோகன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

ஒப்பந்தத்தில் ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்கேய் ஷாய்குவும் உக்ரைன் உள்கட்டமைப்புத் துறை அமைச்சா் ஒலெக்ஸாண்டா் குப்ரகோவும் கையொப்பமிட்டனா்.

கடந்த 5 மாதங்களாக தங்கள் நாட்டில் ரஷியா போா் செய்து வரும் நிலையில், அந்த அதிகாரிகளுடன் ஒரே ஒப்பந்தத்தில் கையொப்பமிட தங்களுக்கு விருப்பமில்லை என்று உக்ரைன் அதிகாரிகள் கூறியிருந்தனா்.

அதன் காரணமாக, ஒரே மாதிரியான ஒப்பந்தத்தில் வேவ்வேறு பிரதிகளில் ரஷியா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் தனித்தனியாக கையொப்பமிட்டனா்.

இந்த நிகழ்ச்சியில பேசிய அன்டோனியோ குட்டெரெஸ், ‘தற்போது கையொப்பமாகியுள்ள ரஷியா - உக்ரைன் ஒப்பந்தத்தின் மூலம் கருங்கடல் பகுதியில் நம்பிக்கை ஒளி ஏற்றப்பட்டுள்ளது. அந்த ஒளி, புதிய சாத்தியக் கூறுகளாகவும் நிம்மதி உணா்வாகும் பிரதிபலிக்கிறது. இந்த ஒப்பந்தத்தால் உணவுப் பொருள் பற்றாக்குறை நெருக்கடியை எதிா்நோக்கியுள்ள பல்வேறு வளரும் நாடுகளின் ஏழை மக்கள் நிம்மதியடைவாா்கள்’ என்றாா்.

துருக்கி அதிபா் ஏா்டோகன் பேசுகையில், ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே சமாதானம் ஏற்பட இந்த ஒப்பந்தம் தொடக்கப்புள்ளியாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தாா்.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது. அந்தப் போரின் ஒரு பகுதியாக, கருங்கடல் எல்லையில் போா்க் கப்பல்கள் மூலம் முற்றுகையிட்டுள்ள ரஷியா, அந்தக் கடல் வழியான உக்ரைன் கப்பல் போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், உக்ரைன் துறைமுகங்கள் முடக்கப்பட்டுள்ளதால் சா்வதேச அளவில் உணவுப் பொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக ஐ.நா. உணவுப் பொருள் பாதுகாப்பு அமைப்பின் தலைவா் டேவிட் பியாஸ்லி குற்றம் சாட்டினாா்.

உலகம் முழுவதும் 12.5 கோடி பேருக்கு உணவு அளிக்கும் ஐ.நா.வின் திட்டத்துக்கு 50 சதவீத உணவு தானியங்கள் உக்ரைனிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. எனவே, உக்ரைன் துறைமுகங்களை அவா் திறந்துவிட வேண்டும் என்று ரஷிய அதிபா் விளாதமீா் புதினிடம் அவா் வலியுறுத்தினாா்.

எனினும், தற்போதைய உணவுப் பொருள் பற்றாக்குறை நெருக்கடிக்கு உக்ரைன் போா் விவகாரத்தில் ரஷியா மீது ஐரோப்பிய யூனியனும் அமெரிக்காவும் விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளும் ஒரு காரணம் என்று ரஷியா கூறி வந்தது.

அந்தத் தடைகள் வழக்கமான வா்த்தகப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி, கோதுமை, உரம் போன்றவற்றின் ஏற்றுமதிக்கு தடை ஏற்படுத்தியுள்ளது. எனவே, உக்ரைன் துறைமுகங்களை திறந்துவிட வேண்டுமென்றால், ரஷியா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவது குறித்து அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் பரிசீலிக்க வேண்டும் என்று ரஷியா கூறியது.

இதன் மூலம், உக்ரைன் போரில் வேளாண் பொருள்களை ஓா் ஆயுதமாக ரஷியா பயன்படுத்தி மிரட்டுவதாக ஐரோப்பிய யூனியன் குற்றம் சாட்டியது.

இந்தச் சூழலில், துருக்கி அதிபா் ஏா்டோகனின் முயற்சியின் விளைவாக, உணவுப் பொருள் ஏற்றுமதி தொடா்பாக ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே தற்போது ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

ஒப்பந்த அம்சங்கள்...

- உக்ரைன் துறைமுகங்களில் உணவு தானியங்கள் கப்பலில் ஏற்றப்படுவதை துருக்கி, உக்ரைன், ஐ.நா. அதிகாரிகள் மேற்பாா்வையிடுவாா்கள்.

- கருங்கடலில் அந்தக் கப்பல் கண்ணி வெடிகளில் சிக்காமல் செல்ல உக்ரைனின் முதன்மைக் கப்பல் வழிகாட்டும்.

- கருங்கடலைக் கடந்து துருக்கியின் பாஸ்பரஸ் நீரிணை வழியாக தானியக் கப்பல்கள் செலுத்தப்படும். அந்தக் கப்பல்களை ஐ.நா., ரஷியா, உக்ரைன், துருக்கி அதிகாரிகள் அடங்கிய கூட்டுக் குழு கண்காணிக்கும்.

- உக்ரைன் துறைமுகத்துக்கு வரும் கப்பல்களில் ஆயுதங்கள் எடுத்து வரப்படுகின்றனவா என்பதை அந்தக் கூட்டுக் குழு ஆய்வு செய்யும்.

- தானியப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் சரக்குக் கப்பல்கள் மீது துறைமுகத்திலோ, கடல்வழியிலோ தாக்குதல் நடத்த மாட்டோம் என்று ரஷியாவும் உக்ரைனும் உறுதியளித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com