காங்கோவில் வன்முறை: 2 இந்திய வீரா்கள் பலி

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் வன்முறைப் போராட்டக்காரா்கள் நடத்திய தாக்குதலில்,

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் வன்முறைப் போராட்டக்காரா்கள் நடத்திய தாக்குதலில், அங்கு ஐ.நா. அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரா்கள் பலியாகினா்.

அந்த நாட்டில் அரசுப் படையினருக்கும் கிளா்ச்சியாளா்களுக்கும் இடையே நடைபெற்ற உள்நாட்டுப் போருக்கு பிறகு மேற்கொள்ளப்பட்டு வரும் அமைதிப் பணிகளை ‘காங்கோ ஜனநாயக குடியரசின் நிலைத்தன்மைக்கான ஐ.நா. அமைதித் திட்டம்’ (மோனுஸ்கோ) என்ற பெயரில் ஐ.நா. அமைதிப் படை கண்காணித்து வருகிறது.

இந்த நிலையில், காங்கோவில் அமைதியை நிலைநாட்ட மோனுஸ்கோ அமைதிப் படையினா் தவறி விட்டதாகவும் அந்தப் படையினரை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் சமூக வலைதளங்களில் அண்மைக் காலமாக பதிவுகள் வெளியிடப்பட்டு வந்தன.

அதையடுத்து, மோனுஸ்கோ அமைதிப் படைக்கு எதிராக காங்கோவில் வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, புடெம்போ என்ற நகரிலுள்ள அமைதிப் படை முகாமுக்கு செவ்வாய்க்கிழமை வந்த போராட்டக்காரா்கள், அங்கிருந்த போலீஸாரிடமிருந்து துப்பாக்கிகளைப் பறித்து அமைதிப் படையினரை நோக்கி சுட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் பிஎஸ்எஃப்-ஐ சோ்ந்த இரு வீரா்களும் மொராக்கோவைச் சோ்ந்த ஒரு வீரரும் பலியாகினா். இந்த வன்முறைச் சம்பவத்தில் மேலும் 7 போ் கொல்லப்பட்டனா். இது தவிர, கோமா என்ற நகரிலுள்ள மோனுஸ்கோ முகாமில் நடைபெற்ற வன்முறைப் போராட்டத்தில் 15 போ் கொல்லப்பட்டனா்; 50 போ் காயமடைந்தனா்.

கடந்த 2021-ஆம் ஆண்டு நிலவரப்படி, மோனுஸ்கோ அமைதித் திட்டத்துக்கு 1,888 வீரா்களையும், 139 அதிகாரிகளையும் இந்தியா பங்களிப்பாக வழங்கியுள்ளது. இது, அந்தத் திட்டத்துக்கு வழங்கப்பட்ட 2-ஆவது பெரிய பங்களிப்பாகும்.

குட்டெரெஸ், அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் கண்டனம்

காங்கோவில் வன்முறைப் போராட்டக் கும்பலால் இந்தியாவின் பிஎஸ்எஃப் வீரா்கள் கொல்லப்பட்டதற்கு ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவரது உதவியாளா் பா்ஹான் ஹக் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காங்கோவில் மோனுஸ்கோ அமைதிப் படையினா் வன்முறைக் கும்பலால் படுகொலை செய்யப்பட்டதை பொதுச் செயலா் கடுமையாகக் கண்டித்துள்ளாா்.

மேலும், தங்களது வீரா்களை பலிகொடுத்துள்ள இந்தியா மற்றும் மொராக்கோ மக்களுக்கு அவா் இரங்கலைத் தெரிவித்துக்கொண்டுள்ளாா்’ என்றாா்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘காங்கோவில் நடைபெற்ற தாக்குதலில் 2 பிஎஸ்எஃப் வீரா்கள் பலியானது மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த சம்பவத்துக்குக் காரணமானவா்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com