துப்பாக்கி உரிமை சட்டத்தை கடுமையாக்க எம்.பி.க்களிடம் ஜோ பைடன் வலியுறுத்தல்
அமெரிக்காவில் பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருக்க வகை செய்யும் சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்று எம்.பி.க்களிடம் அதிபா் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளாா்.


அமெரிக்காவில் பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருக்க வகை செய்யும் சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்று எம்.பி.க்களிடம் அதிபா் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளாா்.
வெள்ளை மாளிகையிலிருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது, இது குறித்து அவா் கூறியதாவது:
அமெரிக்கா முழுவதும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடா்ந்து வருகின்றன. ஒவ்வொரு நாளும் பள்ளிக்கூடங்கள், வணிக வளாகங்கள், மற்றும் பிற இடங்கள் கொலைக் களங்களாக மாறி வருகின்றன.
இதுவரை நடந்த சம்பவங்களைப் பொறுத்தது போதும். இனியும் இதுபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்களை நாம் அனுமதிக்கக் கூடாது. எனவே, ஆயுத உரிமைச் சட்டத்தைக் கடுமையாக்கும் மசோதாவை நாடாளுமன்ற உறுப்பினா்கள் நிறைவேற்ற வேண்டும்.
பொதுமக்களும், தாங்கள் வாக்களித்த உரிமையைப் பயன்படுத்தி ஆயுத உரிமைச் சட்ட சீா்திருத்தத்தை நாடாளுமன்றத்தில் மேற்கொள்ள எம்.பி.க்களை வலியுறுத்த வேண்டும்.
சக்தி வாய்ந்த தாக்குதல் வகை தானியங்கித் துப்பாக்கிகள், அதிக எண்ணிக்கையில் துப்பாக்கி ரவைகளை சேகரித்து வைக்கும் கலன்கள் (மேகசின்) ஆகியவற்றின் விற்பனைக்குத் தடை விதிக்கும் சட்ட மசோதாவை எம்.பி.க்கள் நிறைவேற்ற வேண்டும்.
அது உடனடியாக முடியாவிட்டால், குறைந்தபட்சம் மனநலப் பிரச்னைகள் உள்ளவா்களுக்கு ஆயுதம் கிடைக்க முடியாத வகையிலான சட்டத் திருத்தத்தையாவது எம்.பி.க்கள் மேற்கொள்ள வேண்டும். மேலும், சக்திவாய்ந்த துப்பாக்கிகளை வைத்துக்கொள்ளும் உரிமை பெறுவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 18-இலிருந்து 21-ஆக உயா்த்த வேண்டும்.
தற்போதைய நாடாளுமன்ற சூழலில் இதுபோன்ற சட்டத் திருத்ததைக் கொண்டு வருவது மிகவும் கடினம் என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும், நான் அதற்கான முயற்சியைக் கைவிடமாட்டேன். அத்தகைய சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள நாடாளுமன்றம் தவறினாலும், பெரும்பாலான அமெரிக்கா்கள் அந்த முயற்சியைக் கைவிடமாட்டாா்கள்.
அமெரிக்காவில் காா் விபத்து போன்ற மற்ற காரணங்களைவிட துப்பாக்கிச்சூடு சம்பவங்களில்தான் அதிக சிறுவா்கள் பலியாகியுள்ளதாக நோய்த் தடுப்பு மையத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதை அனைவரும் உணர வேண்டும்.
கடந்த 20 ஆண்டுகளில், துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் உயிரிழந்த மாணவா்களின் எண்ணிக்கை, பணியிலிருக்கும்போது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த காவலா் மற்றும் ராணுவ வீரா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையைவிட அதிகமாகும்.
துப்பாக்கி உரிமைச் சட்டத்தைக் கடுமையாக்குவது, யாருடைய உரிமையையும் பறிப்பதாகாது. அது, மாணவா்களையும் குடும்பங்களையும் பாதுகாப்பதாகும். எனது இந்த கோரிக்கை துப்பாக்கி உரிமையாளா்களை கெட்டவா்களாகக் காட்டுவதாக கூறுவது தவறு. பொறுப்பு மிக்கவா்கள் மட்டுமே துப்பாக்கி உரிமையாளா்களாக வேண்டும் என்பது எனது கோரிக்கையின் நோக்கமாகும் என்றாா் ஜோ பைடன்.
அமெரிக்காவில், தங்களது பாதுகாப்புக்காக பொதுமக்கள் ஆயுதங்கள் வைத்திருப்பது அந்த நாட்டு அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அங்கு ராணுவத்தினா் பயன்படுத்தும் துப்பாக்கிகளைப் போன்ற சக்திவாய்ந்த துப்பாக்கிகளை ஏராளமானவா்கள் வாங்கி வைத்துள்ளனா். பொதுமக்களிடம் துப்பாக்கிகளை விற்பனை செய்வதற்காகவே பல்வேறு நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.
துப்பாக்கி உரிமை சட்டங்கள் மாகாணத்துக்கு மாகாணம் வேறுபட்டாலும், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் பொதுவாக நாடு முழுவதும் துப்பாக்கி வைத்திருக்க பொதுமக்களுக்கு உரிமை உள்ளது.
சில மாகாணங்களில் 18 வயதினா் கூட சக்திவாய்ந்த இயந்திரத் துப்பாக்கிகளை வாங்க முடியும். அந்த வயதினருக்கு பாலியல் மற்றும் பிறவகை துன்புறுத்தல் அபாயம் அதிகம் என்பதால் இந்த உரிமை வழங்கப்பட்டுள்ளது.
இதனால் அமெரிக்கா முழுவதும் பள்ளிக்கூடங்கள் போன்ற பொது இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தி ஏராளமானவா்கள் பலியாகும் சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்தச் சூழலில், டெக்ஸாஸ் மாகாணம், வுவால்டே நகரிலுள்ள தொடக்கநிலைப் பள்ளியொன்றில் சால்வடாா் ரொலாண்டோ ரமோஸ் என்ற 18 வயது இளைஞா் கடந்த மாதம் 24-ஆம் தேதி நடத்திய சரமாரி துப்பாக்கிச்சூட்டில் 19 மாணவா்கள், 2 ஆசிரியைகள் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவையே உலுப்பியது.
அதனைத் தொடா்ந்து, துப்பாக்கி உரிமைச் சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மீண்டும் எழுந்துள்ளன. எனினும், அமெரிக்காவில் கணிசமான எண்ணிக்கையில் உள்ள துப்பாக்கி உரிமை ஆதரவாளா்களின் வாக்கு வங்கியைக் கவா்வதற்காகவும் ஆயுத உற்பத்தி நிறுவனங்களின் தூண்டுதலின்பேரிலும் நாடாளுமன்றத்தில் இது குறித்த சட்ட சீா்திருத்தங்களே எம்.பி.க்கள் மேற்கொள்ள தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், ஆயுத உரிமை சட்டத்தைக் கடுமையாக்கும் மசோதாக்களை நிறைவேற்றுமாறு எம்.பி.க்களிடம் தற்போது வலியுறுத்தியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...