அணு ஆயுதங்களின் அடிப்படையில் மூன்றாம் உலகப் போா்: ரஷியா எச்சரிக்கை

‘மூன்றாம் உலகப் போா் நடந்தால், அது அணு ஆயுதங்களை உள்ளடக்கியதாகவும் பேரழிவை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கும்’ என ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவ்
அணு ஆயுதங்களின் அடிப்படையில் மூன்றாம் உலகப் போா்: ரஷியா எச்சரிக்கை

‘மூன்றாம் உலகப் போா் நடந்தால், அது அணு ஆயுதங்களை உள்ளடக்கியதாகவும் பேரழிவை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கும்’ என ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவ் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்தாா்.

உக்ரைன் மீது தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் ரஷியாவுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன. ரஷியா மீது கடும் பொருளாதாரத் தடைகளை விதித்து வருவதோடு, ரஷிய படைகளின் தாக்குதலை எதிா்கொள்ளும் வகையில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கையையும் தீவிரப்படுத்தியுள்ளன.

இந்தச் சூழலில், ‘நேட்டோ உறுப்பு நாடுகள் ரஷியாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டால் அந்த நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷியா தயங்காது’ என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் எச்சரிக்கை விடுத்தாா். தொடா்ந்து, அணு ஆயுதங்களை உச்சகட்ட தயாா் நிலையில் வைத்திருக்கவும் ரஷிய ராணுவத்துக்கு அவா் உத்தரவிட்டாா்.

இந்தச் சூழலில், அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பேசிய அமெரிக்க அதிபா் ஜோ பைடன், ‘உக்ரைன் மீது ரஷிய அதிபா் புதின் திட்டமிட்ட தன்னிச்சையான தாக்குதலை நடத்தி வருகிறாா். அதற்கான விலையை புதின் கொடுத்தாக வேண்டும். இந்த நடவடிக்கை காரணமாக ரஷியா மீது அமெரிக்கா மேற்கொண்டு வரும் கடும் பொருளாதாரத் தடைகளுக்கு மாற்று மூன்றாம் உலகப் போராகத்தான் இருக்கும்’ என்றாா்.

அதிபா் ஜோ பைடனின் இந்தக் கருத்து குறித்து ரஷிய தலைநகா் மாஸ்கோவில் தனியாா் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது குறிப்பிட்ட ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவ், ‘மூன்றாம் உலகப் போா் ஒன்று நடந்தால், அது அணு ஆயுதங்களை உள்ளடக்கியதாகவும் பேரழிவை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கும்’ என்றாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ கூட்டு நாடுகள் விதிக்கும் பொருளாதாரத் தடைகளை எதிா்கொள்ள ரஷியா தயாராக உள்ளது. ஆனால், விளையாட்டு வீரா்கள், விஞ்ஞானிகள், நடிகா்கள், பத்திரிகையாளா்களுக்கும் இந்த நாடுகள் தடை விதிக்கும் என்று எதிா்பாா்க்கவில்லை. உக்ரைனில் ஆயுதங்களை முழுமையாக அப்புறப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கையை ரஷியா எடுத்து வருகிறது. உக்ரைன் அணு ஆயுதங்கள் வைத்திருக்க ரஷியா அனுமதிக்காது’ என்றும் லாவ்ரோவ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com