
உக்ரைன் நாட்டின் சுதந்திர நாளைக் கொண்டாடும் பொருட்டு பிரிட்டன் பிரதமர் அலுவலகத்தின் முகப்பு அலங்கரிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் 'டவுனிங் ஸ்ட்ரீட்' அலுவலக முகப்பு முழுவதும் உக்ரைன் கொடியில் இடம்பெற்றுள்ள நிறங்களான மஞ்சள் மற்றும் ஊதா நிற பூக்கள் கொண்டும் உக்ரைனின் தேசிய மலரான சூரிய காந்தி மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரஷியா தனது படைகளைத் திரும்பப் பெறும்வரை உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
முன்னதாக, சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த உக்ரைன் நாடு இன்று 31 ஆவது ஆண்டு சுதந்திர நாளைக் கொண்டாடுகிறது. அதேநேரத்தில் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி ரஷியா, உக்ரைன் மீது போர் தொடுத்த நிலையில், இன்றுடன் 6 மாதங்கள் நிறைவடைகிறது.
இதையும் படிக்க | உக்ரைனின் சுதந்திர நாள் இன்று! தீவிர தாக்குதல் நடத்த ரஷியா திட்டம்?
அமெரிக்காவின் நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர எதிர்ப்பு தெரிவித்து ரஷியா போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
ரஷியா படைகளைத் திரும்பப் பெறாமல் அமைதி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி கூறுகிறார். மேலும் உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவும் உதவியும் அளித்து வருகின்றன.
சுதந்திர நாளில் உக்ரைன் மீது தீவிர தாக்குதலை நடத்த ரஷியா திட்டமிட்டிருப்பதாக உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க புலனாய்வு அமைப்பும் இதுகுறித்து எச்சரித்துள்ளது.
சுதந்திர நாளில் ரஷியா தாக்குதல் நடத்தினால் எங்களுடைய பதிலடி சக்திவாய்ந்ததாக இருக்கும் என்றும் ஸெலென்ஸ்கி பதில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷியாவின் போர் அச்சுறுத்தல் காரணமாக தலைநகர் கீவி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பொதுமக்கள் கூடவும் சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.