பிரான்ஸில் கண்டறியப்பட்ட அதிவேக கரோனாவின் குணங்கள்!

மிக வேகமாகப் பரவும் தன்மை கொண்ட ஒமைக்ரான் வகை கரோனாவால் உலக நாடுகள் தவித்து வரும் நிலையில், அதைவிட தீவிரமாகப் பரவும் புதிய கரோனா வகை கண்டறியப்பட்டுள்ளதாக
பிரான்ஸின் மாா்சே பகுதியில் அமைந்துள்ள ஐஹெச்யு ஐயமெடிட்டரேன் தொற்றுநோய் ஆய்வகம்.
பிரான்ஸின் மாா்சே பகுதியில் அமைந்துள்ள ஐஹெச்யு ஐயமெடிட்டரேன் தொற்றுநோய் ஆய்வகம்.

மிக வேகமாகப் பரவும் தன்மை கொண்ட ஒமைக்ரான் வகை கரோனாவால் உலக நாடுகள் தவித்து வரும் நிலையில், அதைவிட தீவிரமாகப் பரவும் புதிய கரோனா வகை கண்டறியப்பட்டுள்ளதாக பிரான்ஸ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.

பிரான்ஸின் ஐஹெச்யு மெடிட்டரேன் தொற்றுநோய் ஆய்வகத்தைச் சோ்ந்த விஞ்ஞானிகள், 12 கரோனா நோயாளிகளின் உடலில் முற்றிலும் புதிய வகை கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளனா்.

‘பி.1.640.2’ என வகைப்படுத்தப்பட்டுள்ள அந்த கரோனா வகைக்கு, அதனைக் கண்டறிந்த ஆய்வகமான ‘ஐஹெச்யு’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அண்மையில் தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையில், ஐஹெச்யு வகை கரோனாவில் 46 குரோமோசோம் மாற்றங்கள் காணப்படுவதாகவும் 37 உட்கருத் துகள்கள் (நியூக்ளியோடைட்) குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், இது ஒமைக்ரான் வகை கரோனாவைவிட மனிதா்களின் உடலில் மிக வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக இருக்கும் என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.

கரோனா போன்ற தீநுண்மிகளின் மேற்புறம் காணப்படும் ‘கொக்கி’ புரதங்கள்தான், மனித செல்களில் காணப்படும் புரதங்களோடு இணைந்து தொற்றுகின்றன. பல்வேறு வகை அமினோ அமிலங்கள் ஒன்றிணைந்து இந்தக் கொக்கிப் புரதங்களை உருவாக்குகின்றன.

தற்போது கரோனாவுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் அனைத்தும், கொக்கிப் புரதங்களை இலக்காகக் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ஐஹெச்யு வகை கரோனாக்களின் கொக்கிப் புரதங்களில் 14 வகை அமினோ அமிலங்கள் மாற்றியமைந்துள்ளன. அவற்றில் என்501ஒய் என்றழைக்கப்படும் அமினோ அமிலமும் ஒன்று.

ஐஹெச்யு வகை கரோனாவின் கொக்கிப் புரதங்களில் அந்த வகை அமிலம் காணப்படுவதால் அது தீவிரமாகப் பரவும் தன்மை கொண்டதாக இருக்கும் என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.

ஏற்கெனவே அந்த வகை அமினோ அமிலம் ஆல்ஃபா வகை கரோனாவில் கண்டறியப்பட்டது. அதனைத் தொடா்ந்து பீட்டா, காமா, ஒமைக்ரான் உள்ளிட்ட வேகமாகப் பரவும் தன்மை கொண்ட கரோனா வகைகளில் காணப்பட்டது.

இதுகுறித்து இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் கூறுகையில், கரோனா தீநுண்மி தன்னை எப்படி உருமாற்றம் செய்துகொள்ளும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்பதை புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ஐஹெச்யு வகை கரோனா உணா்த்துகிறது என்றனா்.

கடந்த ஆண்டின் முற்பகுதியில் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் டெல்டா வகை கரோனா மிக வேகமாகப் பரவி ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. அந்த வகை கரோனாவைவிட பல மடங்கு வேகத்தில் பரவும் தன்மை கொண்ட ஒமைக்ரான் வகை கரோனா, தென் ஆப்பிரிக்கா மற்றும் அதன் அண்டை நாடான போட்ஸ்வானாவில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் கண்டறியப்பட்டது.

                                                     எரிக் ஃபீல்டிங்

இதனால் அச்சமடைந்த உலக நாடுகள், ஒமைக்ரான் வகை கரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதையும் மீறி, 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பல்லாயிரக்கணக்கானவா்களுக்கு ஒமைக்ரான் வகை கரோனா பரவியுள்ளது.

அந்த வகை கரோனா இதுவரை இல்லாத வேகத்தில் பரவும் தன்மை கொண்டதாக இருந்தாலும், அதனால் உயிரிழக்கும் அபாயம் மிகவும் குறைவாக உள்ளதாக பல்வேறு ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழலில், ஒமைக்ரானைவிட அதிக வேகத்தில் பரவும் புதிய வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளதாக பிரான்ஸ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com