ரயில் வரும்போது தண்டவாளத்தில் தள்ளப்பட்ட பெண்; பதறவைக்கும் காட்சி

மெட்ரோ ரயில் ஓட்டுநர், சாமர்த்தியமாக செயல்பட்டு, அவசரகால பிரேக்கைப் போட்டு ரயிலை நிறுத்தினார்.
(கோப்புப்படம்)
(கோப்புப்படம்)


பெல்ஜியத்தில், ரயிலுக்காக காத்திருந்த பெண்ணை, பின்னாலிருந்து ஒருவர் வேண்டுமென்றே தண்டவாளத்தில் தள்ள, அப்போது, மிக அருகே வந்துகொண்டிருந்த மெட்ரோ ரயில் ஓட்டுநர், சாமர்த்தியமாக செயல்பட்டு, அவசரகால பிரேக்கைப் போட்டு ரயிலை நிறுத்தினார்.

இதனால், கண்ணிமைக்கும் நேரத்தில், அப்பெண் உயிருடன் மீட்கப்பட்டார்.

பெல்ஜியத்தில், பிரஸல்ஸ் நகரின் மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. காண்போரின் நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் முழுக்க அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அதில், பிரஸல்ஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏராளமானோர் ரயிலுக்காகக் காத்திருக்கிறார்கள். அப்போது ரயில்நிலைய நடைமேடையில் நின்றிருக்கும் ஒரு பெண்ணை, பின்னாலிருந்து வரும் ஒரு நபர், தண்டவாளத்தை நோக்கி தள்ளிவிடுகிறார். எதிர்பாராத இந்த தாக்குதலால் நிலைகுலைந்த அப்பெண், எவ்வித எதிர்ப்போ, தற்காப்பு முயற்சிகளோயின்றி தண்டவாளத்தில் பொத்தென்று விழுகிறார்.

அவர் விழுந்த அந்த வேகத்திலேயே அவருக்கு படுகாயங்கள் ஏற்பட்டிருக்கலாம். அது குறித்து எந்த தகவலும் இல்லை. அவ்வளவுதான் கண்இமைக்கும் நேரத்தில், அவளருகே அவர் எதிர்பார்த்துக் காத்து நின்ற மெட்ரோ ரயில் வந்துவிட்டது. என்ன அவர் ஏறுவதற்குத்தான் தயாராகவில்லை. மாறாக ரயில் தயாராக இருந்தது. ஆனால், எல்லாம் முடிந்துவிட்டது என்று ஒரு நொடிப்பொழுதில் கண்களை மூடிக் கொண்டு அச்ச உணர்வை வெளிப்படுத்துவதற்குள், நம்மைப் போல அல்லாமல் ரயில் ஓட்டுநரோ, மிகவும் சாமர்த்தியமாக அவசரகால பிரேக்கைப் போட்டு, அந்த இடத்திலேயே ரயிலை நிறுத்துகிறார். நல்வாய்ப்பாக அந்த ரயிலின் அவசரகால பிரேக்குகள் வெகுச் சிறப்பாக வேலை செய்ததால், அப்பெண்ணுக்கு மிகவும் அருகாமையில் அந்த ரயில் நிறுத்தப்பட்டது.

கண் முன் இவ்வளவையும் பார்த்துக் கொண்டிருக்கும் பயணிகளுக்கு என்ன நடக்கிறது என்று புரிபடுவதற்குள், எல்லாமே நடந்து முடிந்துவிடுகிறது. சிலர் உடனடியாக தண்டவாளத்தில் குதித்து அப்பெண்ணை மீட்கிறார்கள்.

பெண் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். பெண்ணை தண்டவாளத்தில் தள்ளிவிட்டு, ஓடிய நபரை காவல்துறையினர் வெகு எளிதில் கண்டுபிடித்துகைது செய்தார்கள். ஆனால், இந்த கொலை முயற்சிக்கான காரணம் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com