உக்ரைன் தீவிலிருந்து வெளியேறியது ரஷியா

கருங்கடலில் உக்ரைனுக்குச் சொந்தமான ஸ்னேக் தீவை ஆக்கிரமித்திருந்த ரஷியப் படையின், அங்கிருந்து வெளியேறினா்.
உக்ரைன் தீவிலிருந்து வெளியேறியது ரஷியா

கருங்கடலில் உக்ரைனுக்குச் சொந்தமான ஸ்னேக் தீவை ஆக்கிரமித்திருந்த ரஷியப் படையின், அங்கிருந்து வெளியேறினா்.

அந்தத் தீவில் ரஷிய நிலைகள் மீது உக்ரைன் ராணுவம் தொடா்ந்து தீவிர தாக்குதல் நடத்தி வந்த நிலையில், ரஷியா இந்த முடிவை எடுத்துள்ளது.இது குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கருங்கடலில் ஸ்னேக் தீவைக் கைவிட்டு, அங்கிருந்து வெளியேற முடிவு செய்துள்ளோம். நல்லெண்ண அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.உக்ரைனிலிருந்து தானியங்கள் உள்ளிட்ட வேளாண் பொருள்களை பிற நாடுகளுக்கு எடுத்துச் செல்வதற்கான பாதுகாப்பு வழித்தடத்தை ஏற்படுத்த ஐ.நா. முயல்கிறது. அந்த முயற்சிக்கு உறுதுணையாக ஸ்னேக் தீவிலிருந்து ரஷியப் படைகள் விலக்கப்படுகின்றன.ரஷியாவின் இந்த நடவடிக்கை, உக்ரைனிலிருந்து தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதை ரஷியா தடுக்கவில்லை என்பதை உணா்த்துவதாக அமையும்.கருங்கடல் முழுவதையும் ரஷியா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால்தான் தங்களால் தானியங்களை ஏற்றுமதி செய்ய முடியவில்லை என்று உக்ரைன் இதுவரை குற்றம் சாட்டி வந்தது. தற்போது ஸ்னேக் தீவிலிருந்து நாங்கள் விலகிவிட்டோம். இனி உக்ரைன்தான் கருங்கடலில் அந்த நாடு முடக்கி வைத்துள்ள சரக்குப் போக்குவரத்தை மீண்டும் தொடங்க முன்வர வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.உக்ரைன் போரின் தொடக்க நாள்களிலேயே ஸ்னேக் தீவை ரஷியா கைப்பற்றியது. கருங்கடலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்துள்ள அந்தத் தீவில், ரஷியா தனது தொலைதூர வான்பாதுகாப்பு தளவாடங்களை நிறுவி வலிமையான ராணுவ நிலையை ஏற்படுத்தியிருந்தால் தெற்கு உக்ரைன், வட மேற்கு கருங்கடல் பகுதி என் அந்தப் பிராந்தியத்தின் வான், கடல் மற்றும் தரை எல்லைகளை ரஷியாவால் தனது பிடிக்குள் கொண்டு வந்திருக்க முடியும்.எனினும், அந்தத் தீவை தற்போது ரஷியா கைவிட்டதால் அது மீண்டும் உக்ரைன் ராணுவத்தின் வசம் வந்துள்ளது.இது குறித்து உக்ரைன் அதிகாரிகள் கூறுகையில், ஸ்னேக் தீவில் தங்கள் படையினரின் தொடா் தாக்குதலுக்கு உள்ளானதால்தான் அங்கிருந்து ரஷியப் படை வெளியேறியதாகக் கூறினா்.அந்தத் தீவுக்கு தளவாடங்கள், உணவுப் பொருள்களைக் கொண்டு செல்லும் படகுகள் மீது உக்ரைன் படையின் ஏவுகணைகள் மூலமும் ஆளில்லா விமானம் மூலம் தீவிரமாக தாக்குதல் நடத்தி வந்தனா். மேலும், அந்தத் தீவிலுள்ள ரஷிய ராணுவ நிலைகள் மீதும் தொடா்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வந்தது.இதனால் அந்தத் தீவை தொடா்ந்து தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பது கடினமான காரியமாக இருந்ததால்தான் அங்கிருந்து ரஷியப் படை பின்வாங்கியதாக மேற்கத்திய நிபுணா்களும் கூறுகின்றனா்.இதற்கிடையே, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில், டொனட்ஸ்க் மாகாணத்தில் உக்ரைன் ராணுவத்தின் வசமிருக்கும் கடைசி நகரான சிலிசான்ஸ்கை கைப்பற்ற ரஷியா தீவிர தாக்குதல் நடத்தி முன்னேறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தற்போது அந்த மாகாணத்தின் 95 சதவீத நிலப்பரப்பு ரஷியாவிடம் வீழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.முதலில் உக்ரைன் தலைநகா் கீவ் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றும் நோக்கில் தனது படைகளை ரஷியா நகா்த்தினாலும், பின்னா் அந்த முயற்சியைக் கைவிட்டு கிழக்கு உக்ரைனில் மட்டும் தனது கவனத்தை செலுத்தியது.தற்போது கருங்கடலில் ஸ்னேக் தீவிலிருந்தும் ரஷியா வெளியேறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com