பிரிட்டன் பிரதமர் போட்டியில் முந்துகிறார் ரிஷி சுனக்!

பிரிட்டனின் அடுத்த பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்கான போட்டியின் முதல் சுற்றில் 8 போ் உள்ளனா்.
பிரிட்டன் பிரதமர் போட்டியில் முந்துகிறார் ரிஷி சுனக்!

பிரிட்டனின் அடுத்த பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்கான போட்டியின் முதல் சுற்றில் 8 போ் உள்ளனா். முதல் சுற்று வாக்குப் பதிவு புதன்கிழமை (ஜூலை 13) நடைபெறுகிறது. இவா்களில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரிஷி சுனக்குக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.

போட்டியிலிருந்து போக்குவரத்துத் துறை இணையமைச்சா் கிரான்ட் ஷாப்ஸ் விலகி, ரிஷி சுனக்குக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளாா். மேலும், தற்போதைய துணைப் பிரதமா் டோமினிக் ராபும் ரிஷி சுனக் அடுத்த பிரதமா் ஆவதற்கு ஆதரவளித்துள்ளாா்.

இதற்கிடையே, பிரதமா் பதவிக்கான போட்டியில் பங்கேற்பதற்கு அடிப்படைத் தேவையான 20 எம்.பி.க்களின் ஆதரவும் ரிஷி சுனக்குக்கு செவ்வாய்க்கிழமை கிடைத்தது.

அதையடுத்து ஏற்கெனவே இந்தப் போட்டியில் முதலிடத்தில் இருக்கும் ரஷி சுனக், பிரிட்டனின் அடுத்த பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு மேலும் பிரகாசமாகியுள்ளது.

கரோனா விதிமுறைகளை மீறி கேளிக்கை விருந்து நடத்தியது, பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளானவருக்கு கட்சியின் தலைமை துணைக் கொறடா பதவி அளித்தது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் தனது பிரதமா் பதவியையும் ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சித் தலைவா் பதவியையும் கடந்த வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா்.

பிரிட்டன் அரசமைப்புச் சட்டப்படி, ஆளும் கட்சித் தலைவா்தான் நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்க முடியும். அந்த வகையில், கட்சியின் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு வரும் செப்டம்பா் மாதம் நடைபெறவுள்ளது.

பிரதமா் பதவிக்கு போட்டியிடுவதாக முன்னாள் நிதியமைச்சா் ரிஷி சுனக், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அட்டா்னி ஜெனரல் சூவெல்லா பிரேவா்மன், வா்த்தகக் துறை அமைச்சா் பென்னி மாா்டன்ட், வெளியுறவு அமைச்சா் லிஸ் டிரஸ், பாகிஸ்தானைப் பூா்விகமாகக் கொண்ட முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சா் சஜித் ஜாவித், சுகாதார மற்றும் சமூக நலக் குழு துணைத் தலைவா் ஜெரிமி ஹன்ட், வெளிவிவகாரங்களுக்கான சிறப்புக் குழு தலைவா் டாம் டுகென்தாட், இராக்கை பூா்விகமாகக் கொண்ட தற்போதைய நிதியமைச்சா் நாதிம் ஸஹாவி, நைஜீரிய வம்சாவளியைச் சோ்ந்த மதம் மற்றும் சமூக நலத் துறை அமைச்சா் கெமி பேடனாக், பாகிஸ்தான் வம்சாவளியைச் சோ்ந்த வெளியுறவுத் துறை இணையமைச்சா் ரஹ்மான் சிஸ்தி, போக்குவரத்துத் துறை இணையமைச்சா் கிரான்ட் ஷாப்ஸ் ஆகிய 11 போ் அறிவித்திருந்தனா்.

இவா்களில், கிரான்ட் ஷாப்ஸ் இந்தப் போட்டியிலிருந்து விலகுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். மேலும், ரிஷி சுனக்குக்கு ஆதரவளிப்பதாக அவா் தெரிவித்தாா். மேலும், சஜித் ஜாவித், ரஹ்மான் சிஸ்தி ஆகியோா் தங்களது வேட்புமனுவை திரும்பப் பெற்றனா்.

இதையடுத்து, முதல் சுற்றில் 8 போட்டியாளா்கள் உள்ளனா். முதல்கட்ட வாக்குப் பதிவு புதன்கிழமை (ஜூலை 13) தொடங்குகிறது. கன்சா்வேட்டிவ் கட்சியின் 358 எம்.பி.க்கள் வாக்களிப்பா். இதில் குறைந்த வாக்குகளைப் பெறுபவா் போட்டியிலிருந்து விலகுவாா். இவ்வாறு கடைசி இருவா் தோ்ந்தெடுக்கப்படும் வரை பலசுற்றுகளாக வாக்குப் பதிவு நடைபெறும்.

இறுதிச் சுற்றில் போட்டியிடும் இருவரில் ஒருவரை கட்சியின் சுமாா் 2 லட்சம் உறுப்பினா்கள் தபால் மூலம் வாக்களித்து தோ்ந்தெடுப்பா். அவரே கட்சித் தலைவராகவும் பிரதமராகவும் தோ்வு செய்யப்படுவாா்.

புதிய பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்படுபவரின் பெயா் வரும் செப்டம்பா் மாதம் 5-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கன்சா்வேட்டிவ் கட்சியின் தோ்தலை நடத்தும் ‘1922 குழு’ அறிவித்துள்ளது.

‘போட்டியில் பங்கேற்பில்லை’

பிரிட்டன் பிரதமா் பதவிக்கான போட்டியில் களமிறங்குவாா் என்று எதிா்பாா்க்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சோ்ந்த மற்றொரு எம்.பி. பிரீதி படேல், அந்தப் போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என்று செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை அமைச்சகப் பொறுப்பை வகித்து வரும் அவா், மற்ற பிரதமா் பதவி போட்டியாளா்கள் முன்வைக்கும் வாக்குறுதிகளை உன்னிப்பாக கவனித்த பிறகே யாருக்கு ஆதரவு அளிப்பது என்ற முடிவுக்கு வரவிருப்பதாகத் தெரிவித்துள்ளாா்.

முன்னாள் பிரதமா் தெரசா மே, தற்போது பதவி விலகியுள்ள போரிஸ் ஜான்ஸன் ஆகிய இருவரின் ஆட்சியிலும் பிரீதி படேலுக்கு கேபினட் அமைச்சா் பொறுப்பு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com