
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாட்சி தெரிவித்துள்ளார்.
கடுமையான பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்சே நேற்று மாலை பதவி விலகினார். இதனைத் தொடர்ந்து, பிரதமரின் ஆதரவாளர்கள் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியுள்ளது.
இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிவிப்பில்,
அண்டை நாடான இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள தற்போதை சிரமங்களை சமாளிக்க இந்தாண்டு மட்டும் ரூ. 27,000 கோடி மதிப்பிலான பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் பற்றாக்குறையை தணிக்க இந்திய மக்களும் உதவி செய்து வருகின்றனர்.
மேலும், இலங்கையின் ஜனநாயகம் மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா முழு ஆதரவை அளிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறியுள்ள மகிந்த ராஜபட்ச, கடற்படை தளத்தில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, போராட்டக்காரர்கள் கடற்படை முகாம் முன்பு திரண்டுள்ளனர்.