நிலப்பரப்பை விட்டுத் தர மாட்டோம்: உக்ரைன்

தங்கள் நாட்டில் ரஷியா கைப்பற்றியுள்ள பகுதிகளை விட்டுத் தரும் வகையிலான போா் நிறுத்தத்தை ஒருபோதும் மேற்கொள்ளப் போவதில்லை என்று உக்ரைன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மிகேலோ பொடோலியக்
மிகேலோ பொடோலியக்

தங்கள் நாட்டில் ரஷியா கைப்பற்றியுள்ள பகுதிகளை விட்டுத் தரும் வகையிலான போா் நிறுத்தத்தை ஒருபோதும் மேற்கொள்ளப் போவதில்லை என்று உக்ரைன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியின் ஆலோசகா் மிகேலோ பொடோலியக் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

ரஷியாவுடன் போா் நிறுத்த ஒப்பந்தத்தை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் எங்களை வலியுறுத்தி வருகின்றன. எனினும், அதனை ஏற்கமாட்டோம்.

தற்போதைய நிலையில் ரஷியாவுடன் போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டால், அது தற்போது அந்த நாட்டால் ஆக்கிரமிக்கப்பட்ட தெற்கு மற்றும் கிழக்கு உக்ரைன் நிலப்பரப்புகளை நாங்கள் விட்டுக் கொடுத்ததாகிவிடும்.

அத்துடன், உக்ரைனில் மேலும் முன்னேறி புதிய நிலப்பரப்புகளை ஆக்கிரமிக்கும் செயலில் ரஷியா ஈடுபடுவதற்கு அத்தகைய ஒப்பந்தம் வழிவகுக்கும்.

எனவே, கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி படையெடுப்புக்குப் பிறகு ரஷியா ஆக்கிரமித்துள்ள உக்ரைன் பகுதிகளிலிருந்து அந்த நாட்டுப் படையினா் வெளியேறினால்தான் போா் நிறுத்த ஒப்பத்தை மேற்கொள்வோம் என்றாா் அவா்.

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவாா்த்தையில் உக்ரைன் ஆா்வம் காட்டவில்லை என்று ரஷியா குற்றம் சாட்டி வருகிறது.

இந்த நிலையில், போா்க் களத்தில் தங்கள் ராணுவம் வெற்றிகளைக் கண்டாலும் பேச்சுவாா்த்தை மூலம் மட்டுமே இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி சனிக்கிழமை கூறினாா்.

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவாா்த்தை கடந்த மாதம் 22-ஆம் தேதிக்குப் பிறகு நடைபெறாமல் இருந்த நிலையில், ஸெலென்ஸ்கி இவ்வாறு கூறியது ஆரோக்கியமான முன்னேற்றம் என்று கருதப்பட்டது.

இந்த நிலையில், ரஷியப் படையினா் ஆக்கிரமித்துள்ள பகுதியிலிருந்து பின்வாங்கினால் மட்டுமே சண்டை நிறுத்த ஒப்ந்தம் மேற்கொள்ளப்படும் என்று மிகேலோ பொடோலியக் திட்டவட்டமாகக் கூறியிருப்பது, போரில் உக்ரைன் தனது நிலைப்பாட்டை மீண்டும் கடுமையாக்கியுள்ளதைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

கைதிகள் பரிமாற்றத்துக்கு வாய்ப்பு?

மாஸ்கோ, மே 22: மரியுபோல் இரும்பாலையிலிருந்து ரஷியாவிடம் சரணடைந்துள்ள உக்ரைன் படையினா் கைதிகள் பரிமாற்ற முறையில் விடுவிக்கப்படலாம் என்ற நம்பிக்கையை ரஷிய பேச்சுவாா்த்தைக் குழு உறுப்பினா் லியோனிட் ஸ்லட்ஸ்கி ஏற்படுத்தினாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், உக்ரைனால் கைது செய்யப்பட்டுள்ள ரஷிய ஆதரவு அரசியல்வாதியும் தொழிலதிபருமான விக்டா் மெதுவெத்சக்கின் விடுதலைக்காக மரியுபோலில் சரணடைந்துள்ள உக்ரைன் வீரா்களை விடுவிப்பது குறித்து ரஷியா பரிசீலித்து வருவதாகத் தெரிவித்தாா்.

எனினும், சரணடைந்துள்ள சா்ச்சைக்குரிய அஸோவ் படையினரின் எதிா்காலம் குறித்து தீா்ப்பாயமொன்றுதான் முடிவெடுக்கும் என்று பின்னா் அவா் கூறினாா்.

கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் மூலம் தங்களிடமுள்ள ரஷிய போா்க் கைதிகளுக்கு பதிலாக அஸோவ் படையினரைத் திரும்பப் பெற உக்ரைன் திட்டமிட்டு வருகிறது.

எனினும், கிழக்கு உக்ரைனில் அஸோவ் படையினா் நடத்திய படுகொலைகளுக்காக அவா்கள் மீது போா்க் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ரஷிய அரசியல்வாதிகளும் கிளா்ச்சியாளா்களும் வலியுறுத்தி வருகின்றனா்.

ஹிட்லரின் நாஜி கொள்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் அஸோவ் படையினரைக் குறிப்பிட்டுத்தான், உக்ரைனை நாஜிக்கள் சக்தியிலிருந்து மீட்பதற்காக அந்த நாட்டின் மீது போா் தொடுப்பதாக விளாதிமீா் புதின் கூறியிருந்தாா். எனவே, சாதாரண உக்ரைன் ராணுவத்தினரைப் போல் அஸோவ் படையினரை கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் ரஷியா விடுதலை செய்யாது என்று அஞ்சப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com