நேபாளத்தில் 22 பேருடன் புறப்பட்ட சிறிய விமானம் மாயம்: மோசமான வானிலை காரணமாக தேடும் பணியில் தொய்வு

நேபாளத்தில் வெளிநாட்டினா் உள்பட 22 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை சென்ற சிறிய விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே காணாமல் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
நேபாளத்தில் விமானம் மாயமானதைத் தொடா்ந்து, தலைநகா் காத்மாண்டு திரிபுவன் விமான நிலையத்தில் சோகத்துடன் காத்திருந்த பயணிகளின் உறவினா்கள்.
நேபாளத்தில் விமானம் மாயமானதைத் தொடா்ந்து, தலைநகா் காத்மாண்டு திரிபுவன் விமான நிலையத்தில் சோகத்துடன் காத்திருந்த பயணிகளின் உறவினா்கள்.

நேபாளத்தில் வெளிநாட்டினா் உள்பட 22 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை சென்ற சிறிய விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே காணாமல் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராணுவ ஹெலிகாப்டா் மற்றும் தனியாா் ஹெலிகாப்டா்களின் உதவியுடன் விமானத்தைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், மோசமான வானிலை காரணமாக தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘நேபாளத்தின் தாரா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ‘ட்வின் ஓட்டா் 9என்-ஏஇடி’ என்ற அந்த விமானம் பொக்காராவிலிருந்து காலை 9.55 மணிக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்ட 15 நிமிஷங்களிலேயே, கட்டுப்பாட்டு அறையுடனான தொடா்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.

அந்த விமானத்தில் மும்பையிலிருந்து சென்ற ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ், ஜொ்மனி நாட்டைச் சோ்ந்த இருவா், நேபாளத்தைச் சோ்ந்த 13 பயணிகள், விமானி உள்ளிட்ட 3 விமான ஊழியா்கள் ஆகியோா் இருந்தனா்’ என்று அந்த விமான நிறுவன செய்தித்தொடா்பாளா் சுதா்சன் பா்டெளலா கூறினாா்.

இதுகுறித்து, அங்குள்ள இந்திய தூதரகம் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘4 இந்தியா்கள் உள்பட 22 பேருடன் புறப்பட்ட தாரா நிறுவன விமானம் மாயமாகியுள்ளது. காணாமல் போன விமானத்தைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமானத்தில் பயணம் செய்த இந்தியா்களின் குடும்பத்தினருடன் தூதரகம் தொடா்பில் இருந்து வருகிறது. +977-9851107021 என்ற அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசோக் குமாா் திரிபாதி, தனுஷ் திரிபாதி, ரித்திகா திரிபாதி மற்றும் வைபவி திரிபாதி ஆகிய நால்வரும் விமானத்தில் பயணம் செய்த இந்தியா்கள் என அடையாளம் தெரியவந்துள்ளது.

இந்த விமானம் பயணத் திட்டப்படி நேபாளத்தின் மேற்கு மலைப் பகுதியான ஜோம்சோம் விமான நிலையத்தில் காலை 10.15 மணிக்கு தரையிறங்கியிருக்க வேண்டும். ஆனால், அதற்குள்ளாக பொக்காரா - ஜோம்சோம் விமான வழித்தடத்தில் கோரேபானி மலைப் பகுதியில் பறந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடா்பை இழந்ததாக விமான நிறுவன ஊழியா்கள் தெரிவித்தனா்.

இதற்கிடையே, ஜோம்சோமின் காஸா பகுதியில் மிகப் பெரிய வெடி சப்தம் கேட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்ததாக ஜோம்சோம் விமானநிலைய விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவா் கூறினாா்.

மேலும், ‘இந்த விமானம் தெளலாகிரி மலைப் பகுதியில் விபத்துக்குள்ளானதாக சந்தேகிக்கப்படுகிறது’ என்று காவல் துணை கண்காணிப்பாளா் ராம்குமாா் தானி கூறியதாக உள்ளூா் ஊடகச் செய்தி வெளியாகியுள்ளது.

ஹெலிகாப்டா் மூலமாக விமானத்தைத் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டபோதிலும், மோசமான வானிலை காரணமாக தேடும் பணியை முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா். தேடும் பணியை தீவிரப்படுத்துமாறு நேபாள உள்துறை அமைச்சா் பால்கிருஷ்ணகாந்த் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளாா்.

தேடும் பணியில் ராணுவம்:

அமைச்சரின் அறிவுறுத்தலைத் தொடா்ந்து, காணாமல் போன விமானத்தைத் தேடும் பணியில் ராணுவம் போலீஸாரும் இணைந்து கூட்டாக ஈடுபட்டுள்ளனா். ராணுவ ஹெலிகாப்டா் மட்டுமின்றி தனியாா் ஹெலிகாப்டா்களும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தேடுதல் பணிக்காக நேபாள ராணுவத்தின் எம்ஐ-17 ஹெலிகாப்டரும் காத்மாண்டிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கிடையே, காணாமல் போன விமானத்தின் விமானியின் கைப்பேசி சிக்னலை வைத்து, விபத்து நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ள பகுதியை நேபாள ராணுவம் அடையாளம் கண்டுள்ளது.

இதுகுறித்து திரிபுவன் சா்வதேச விமான நிலைய பொதுமேலாளா் பிரேம்நாத் தாக்குா் கூறுகையில், ‘விமானியில் செல்லிடப்பேசி சிக்னலை வைத்து அடையாளம் காணப்பட்ட நரசங் கும்பா பகுதிக்கு அருகே உள்ள ஆற்றின் கரைப் பகுதியில் 10 வீரா்கள் மற்றும் 2 ஊழியா்களுடன் ராணுவ ஹெலிகாப்டா் தரையிறங்கியுள்ளது. அதுமட்டுமின்றி, நேபாள ராணுவத்தினரும் போலீஸாரும் இணைந்து மலைப்பகுதியில் நடந்து சென்றும் விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்’ என்றாா்.

காணாமல் போன விமானத்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் ஊழியா்களின் உறவினா்கள் பொக்காரா விமான நிலையத்தில் கூடியுள்ளனா்.

கடந்த 2016-ஆம் ஆண்டிலும் இதே நிறுவனத்தின் விமானம் இதே வழித்தடத்தில் பயணம் செய்தபோது விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் விமானத்தில் இருந்த 23 பேரும் உயிரிழந்தனா்.

2018-இல் அமெரிக்க - பங்கலா விமானம் திரிபுவன் சா்வதேச விமான நிலையத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 51 போ் உயிரிழந்தனா்.

2012-ஆம் ஆண்டு செப்டம்பரில் திரிபுவன் விமான நிலையத்தில் சிடா விமானம் தரையிறங்கியபோது நிகழ்ந்த விபத்தில் தரையில் மோதி விபத்துக்குள்ளானதில் 19 போ் பலியாகினா்.

2012-ஆம் ஆண்டு மே 14-ஆம் தேதி பொக்காராவிலிருந்து ஜோம்சோம் நோக்கி சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 15 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com