நம்பிக்கை தருமா எகிப்து காலநிலை மாற்ற மாநாடு?

காலநிலை மாற்றத்தைத் தடுப்பது தொடர்பான ஐக்கிய நாடுகள் அவையின் 27ஆவது ஆண்டு மாநாடு நாளை எகிப்து நாட்டில் தொடங்குகிறது.
நம்பிக்கை தருமா எகிப்து காலநிலை மாற்ற மாநாடு?

காலநிலை மாற்றத்தைத் தடுப்பது தொடர்பான ஐக்கிய நாடுகள் அவையின் 27ஆவது ஆண்டு மாநாடு நாளை எகிப்து நாட்டில் தொடங்குகிறது.

உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ள இந்த மாநாட்டில் என்ன முடிவுகள் மேற்கொள்ளப்பட உள்ளன? வளர்ந்த நாடுகள் எவ்வளவு நிதியாதாரங்களை வழங்க உள்ளன? என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

காலநிலை மாற்ற பாதிப்புகள் தொடர்ந்து தீவிரமாக அதிகரித்து வருகின்றன. காலநிலை மாற்றத்தால் உலகநாடுகள் பலவும் பருவநிலை பிறழ்வு, அதீத வெப்ப அலைகளின் தாக்கம், தீவிர மழைப்பொழிவு, அதன் காரணமாக ஏற்படும் வெள்ள பாதிப்பு, விவசாய அழிவு உள்ளிட்டவற்றை சந்தித்து வருகின்றன. காலநிலை பாதிப்பைக் கட்டுப்படுத்த இதுவரை எந்த நம்பிக்கைக்குரிய நடவடிக்கையும் உலக நாடுகளால் எடுக்கப்படவில்லை.

குறிப்பாக தொழிற்சாலைகளை ஏற்படுத்தி புவி வெப்பநிலை உயர்வுக்கு வித்திட்ட வளர்ந்த நாடுகள் இந்த விவகாரத்தில் மெத்தனப் போக்கையே கடைபிடித்து வருகின்றன. வளர்ந்த நாடுகளின் இந்த அலட்சியப் போக்கால் வளரும் மற்றும் ஏழை நாடுகள் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.

புவி வெப்பமயமாதலினால் ஏற்படும் காலநிலை மாற்றத்தைத் தடுக்க உலக நாடுகள் இதுவரை உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நாளை தொடங்க உள்ள காலநிலை மாற்றம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. 

காலநிலை மாற்ற பாதிப்பைத் தடுக்க உலக நாடுகளை ஒருங்கிணைத்து ஐக்கிய நாடுகள் அவை ஆண்டுதோறும் சர்வதேச மாநாட்டை நடத்தி வருகிறது. அதன்படி 27ஆவது ஆண்டு மாநாடு நாளை எகிப்து நாட்டின் சார்ம் அல் சேக் நகரில் நடைபெற உள்ளது. தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் உலக நாட்டு தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ள உள்ள இந்த மாநாடு தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் நடைபெற உள்ளன. இந்த மாநாட்டில் காலநிலை மாற்றம் தொடர்பான கருத்தரங்கங்கள், விவாதங்கள் ஆகியவை இடம்பெறுகின்றன. 

ஏற்கெனவே காலநிலை மாற்ற பாதிப்புகளைக் கட்டுப்படுத்த வளர்ந்த நாடுகள் ஒப்புக்கொண்ட நிதியாதாரங்களை இதுவரை வழங்காத நிலையில் நாளை தொடங்கும் மாநாட்டில் இதுகுறித்து தீவிரமாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஆற்றல் மூலங்களுக்கு மாறுவது தொடங்கி புதிய தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்வது வரை இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன. 

காலநிலை மாற்ற சிக்கலால் நாள்தோறும் வளரும் நாடுகளும், ஏழை நாடுகளும் பேரிடர் பிரச்னைகளை சந்தித்துவரும் நிலையில் இந்த மாநாடு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. 

கடந்த மாநாட்டைப் போல் எடுக்கப்பட்ட முடிவுகளை அலட்சியப் போக்குடன் அணுகாமல் கண்டிப்பான முறையில் அமல்படுத்தினால்தான் இந்த பேரிடர் சிக்கலில் இருந்து எதிர்கால தலைமுறையை காப்பாற்ற முடியும் என்பதே காலநிலை மாற்றத்தைத் தடுக்கக் கோரும் சூழலியலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

இந்த மாநாட்டிற்கு கோகோகோலா நிறுவனம் நன்கொடையாளராக இணைந்துள்ளது ஏற்கெனவே விமர்சனத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com