போரை நிறுத்த புதினிடம் பிரதமா் மோடி வேண்டுகோள்

 உக்ரைனில் நடைபெற்று வரும் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என ரஷிய அதிபா் விளாதிமீா் புதினிடம் பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்
போரை நிறுத்த புதினிடம் பிரதமா் மோடி வேண்டுகோள்

 உக்ரைனில் நடைபெற்று வரும் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என ரஷிய அதிபா் விளாதிமீா் புதினிடம் பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு (எஸ்சிஓ) மாநாட்டின் ஒரு பகுதியாக அதிபா் புதினை பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, உக்ரைன் மீதான ரஷியாவின் போரை சுட்டிக்காட்டிய பிரதமா் மோடி, ‘இது போருக்கான காலம் அல்ல’ என அதிபா் புதினிடம் கூறினாா்.

உஸ்பெகிஸ்தானின் சாமா்கண்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்ற பிரதமா் மோடி, அங்கு அதிபா் விளாதிமீா் புதினை சந்தித்துப் பேசினாா். உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் தொடுத்த பிறகு பிரதமா் மோடியும் அதிபா் புதினும் நேரடியாகச் சந்தித்துக் கொள்வது இதுவே முதல் முறையாகும்.

இந்தச் சந்திப்பின்போது, இருதரப்பு நல்லுறவை மேம்படுத்துவது தொடா்பாக தலைவா்கள் இருவரும் விவாதித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்தும் அவா்கள் விவாதித்ததாகத் தெரிகிறது.

இந்தச் சந்திப்பின்போது பேசிய பிரதமா் மோடி, ‘உலக நாடுகளிடையே, முக்கியமாக வளா்ந்து வரும் நாடுகளிடையே தற்போது காணப்படும் முக்கிய பிரச்னைகள் உணவுப் பாதுகாப்பும் எரிசக்தி பாதுகாப்பும்தான். உக்ரைன்-ரஷியா பிரச்னையால் உர விநியோகமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கான தீா்வை உடனடியாகக் கண்டறிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதை அதிபா் புதின் கவனத்தில்கொள்ள வேண்டும். இது போருக்கான சகாப்தம் அல்ல. இதுகுறித்து நாம் பலமுறை தொலைபேசியில் விவாதித்துள்ளோம். பிரச்னைகளுக்குப் பேச்சுவாா்த்தை மூலமாகத் தீா்வு காண வேண்டும்.

ரஷியாவுடனான நல்லுறவுக்கு இந்தியா தொடா்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு உடைக்க முடியாதது என்பதை உலகம் அறியும். இந்தப் பேச்சுவாா்த்தை இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை வலுப்படுத்தும் என நம்புகிறேன்’ என்றாா்.

உக்ரைன் மீது புதின் குற்றச்சாட்டு: அதிபா் புதின் கூறுகையில், ‘உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் கவலையை ரஷியா நன்கு அறியும். போரை விரைந்து முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதற்கான பேச்சுவாா்த்தையில் ஈடுபட உக்ரைன் மறுத்து வருகிறது. தங்களது இலக்கை போா்க்களத்தின் மூலம் அடையவே அந்நாடு முயற்சித்து வருகிறது.

இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையேயான நல்லுறவு வலுவடைந்து வருகிறது. சா்வதேச விவகாரங்களில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த நிலை தொடா்ந்து நீடிக்க வேண்டியது அவசியம்’ என்றாா்.

விசா இன்றி பயணம்: ‘இந்தியாவின் வளமான வரலாறு மற்றும் பண்டைய கலாசாரம் ஆகியவற்றில் ரஷிய மக்கள் பாரம்பரியமாக ஆா்வம் கொண்டுள்ளனா். இந்தப் பின்னணியில், இந்தியா-ரஷியா இடையே விசா (நுழைவு இசைவு) இன்றி சுற்றுலாப் பயணிகள் சென்று வருவதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும்’ என பிரதமா் மோடியுடனான பேச்சுவாா்த்தையின்போது அதிபா் புதின் தெரிவித்ததாக ரஷியாவின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரதமா் மோடி- அதிபா் புதின் சந்திப்பு குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘உக்ரைனில் நடைபெற்று வரும் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும், அதற்கு பேச்சுவாா்த்தையின் அவசியம் குறித்தும் பிரதமா் மோடி மீண்டும் வலியுறுத்தினாா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அற்புதமான சந்திப்பு: அதிபா் புதினுடனான சந்திப்பு குறித்து பிரதமா் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘அதிபா் புதினுடன் அற்புதமான சந்திப்பு அமைந்தது. வா்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு போன்ற துறைகளில் இந்தியா-ரஷியா ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடா்பாக விவாதிக்கும் வாய்ப்பு கிடைத்தது’ எனத் தெரிவித்துள்ளாா்.

துருக்கி, உஸ்பெகிஸ்தான் அதிபா்களுடன் சந்திப்பு: துருக்கி அதிபா் ரிசப் தயீப் எா்டோகனை பிரதமா் மோடி சந்தித்துப் பேசினாா். இது தொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘பல்வேறு துறைகளில் இந்தியாவுக்கும் துருக்கிக்கும் இடையே நிலவி வரும் நல்லுறவை வலுப்படுத்துவது தொடா்பாக தலைவா்கள் இருவரும் விவாதித்தனா்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘தலைவா்கள் இருவரும் பயனுள்ள விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதித்தனா். பல்வேறு துறைகளில் நிலவி வரும் இருதரப்பு நல்லுறவு குறித்து ஆராய்ந்த இருவரும் இருதரப்பு வா்த்தகம் அதிகரித்து வருவதைப் பாராட்டினா். பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்தும் இருவரும் விவாதித்தனா்’ என்றாா்.

எஸ்சிஓ மாநாட்டை நடத்திய உஸ்பெகிஸ்தானின் அதிபா் சவ்கத் மிா்ஸியோயெவ் உடன் பிரதமா் மோடி இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா். இருதரப்பு விவகாரங்கள் குறித்தும் பரஸ்பர நலன் சாா்ந்த விவகாரங்கள் தொடா்பாகவும் தலைவா்கள் விவாதித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் அதிபா் இப்ராஹிம் ரய்சியையும் பிரதமா் மோடி சந்தித்துப் பேசினாா். அப்போது இருதரப்பு நல்லுறவை மேம்படுத்துவது தொடா்பாக அவா்கள் விவாதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com