பாகிஸ்தானில் தரக்குறைவான வலி நிவாரணி மருந்துக்கு தடை!

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ள வலி நிவாரணி மருந்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட சோடியத்தின் அளவு மிகக்குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம், சந்தைகளில் விற்கப்படும் டோலோர் டிஎஸ் என்ற வலி நிவாரணி மருந்துக்கு தடை விதித்துள்ளது.     

பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்த ஒரு தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பட்டுள்ள இந்த வலி நிவாரணி மருந்தின் மூன்று தொகுப்புகளில், நிர்ணயிக்கப்பட்ட சோடியத்தின் அளவை விட சோடியத்தின் அளவு மிகக்குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக, இந்த மருந்தை எடுத்துக்கொள்ளும் நோயாளிகளுக்கு உடலில் வலி, பலவீனம், தொண்டை வீக்கம் மற்றும் கண் தொற்று போன்ற உபாதைகளை ஏற்படக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதனைத் தொடர்ந்து, மருந்தகங்களில் விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த வலி நிவாரணி மருந்தின் தொகுப்பு எண்ணை சரிபார்த்து ஆய்வு செய்த பின், அவை மேலே குறிப்பிடப்பட்டுள்ள தொகுப்பின் கீழ்(தொகுப்பு எண் # 1236, 1237 மற்றும் 1238) தயாரிக்கப்பட்டவையாக இருப்பின், அவற்றை விற்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.   

முன்னதாக, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசால், 5 இருமல் மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இருமல் மருந்துகளில் அளவுக்கதிகமான ஆல்கஹால் கலந்திருப்பது உலக சுகாதார அமைப்பின் சோதனையில் தெரிய வந்ததையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com