கராச்சி: பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத்திற்கு மாற மறுத்த திருமணமான இந்துப் பெண் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் இருந்து கடத்தப்பட்ட சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த திருமணமான இந்துப் பெண், தன்னை இஸ்லாமிய மதத்திற்கு மாறுமாறு கடத்தல்காரர்களால் மிரட்டப்பட்டதாகவும், மதம் மாற மறுத்ததால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து தப்பித்து வீடு திரும்பியதாகவும், இப்ராஹிம் மங்ரியோ, புன்ஹோ மங்ரியோ மற்றும் அவர்களது கூட்டாளிகளால் தான் கடத்தப்பட்டதாக அந்த விடியோவில் கூறியுள்ளார்.
மேலும், உமர்கோட் மாவட்டத்தில் உள்ள சமரோ நகரில் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக போலீசார் இன்னும் வழக்குப் பதிவு செய்யவில்லை என்று அந்த பெண் கூறும் விடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மிர்புர்காஸில் உள்ள காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டிய நபர்கள் மீது இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை என்றும், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு வெளியே அமர்ந்துள்ளனர் என்று உள்ளூர் இந்து சமூகத் தலைவர் ஒருவர் கூறினார்.
தார், உமர்கோட், மிர்புர்காஸ், கோட்கி மற்றும் கைர்பூர் பகுதிகளில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் சிந்துவின் உள்பகுதியில் இளம் இந்துப் பெண்களைக் கடத்தி கட்டாய மதமாற்றம் செய்வது பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது.
இளம் பெண்கள் மட்டுமல்ல, வயதான இந்து பெண்களும் கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்றங்களுக்கு இரையாகியுள்ளனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், இந்துப் பெண்கள் கடத்தப்பட்டு, இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டு, எட்டு நாள்களுக்குள் முஸ்லிம் ஆண்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான இந்து சமூகத்தினர் கூலித்தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.