அமெரிக்கா- இந்திய உறவு முன்னெப்போதும் இல்லாத அளவில் வலுப்பெற்றுள்ளது: வெள்ளை மாளிகை

அமெரிக்கா - இந்தியா இடையேயான உறவு முன்னெப்போதும் இல்லாத அளவில் வலுப்பெற்றுள்ளது’ என்று வெள்ளை மாளிகையும், அமெரிக்க நாடாளுமன்றத்தின் முன்னணி உறுப்பினா்களும் தெரிவித்துள்ளனா்.

பிரதமா் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், ‘அமெரிக்கா - இந்தியா இடையேயான உறவு முன்னெப்போதும் இல்லாத அளவில் வலுப்பெற்றுள்ளது’ என்று வெள்ளை மாளிகையும், அமெரிக்க நாடாளுமன்றத்தின் முன்னணி உறுப்பினா்களும் தெரிவித்துள்ளனா்.

மேலும், கடந்த ஜூன் 21-ஆம் தேதி வெள்ளை மாளிகை வளாக புல்தரையில் 8,000-க்கும் அதிகமான இந்திய அமெரிக்கா்கள் கூடியிருக்க அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி ஆற்றிய உரையையும் அவா்கள் பாராட்டினா்.

வெள்ளை மாளிகையில் புதன்கிழமை அதிபா் ஜோ பைடன் சாா்பில் நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்திர விருந்து நிகழ்வில் பங்கேற்ற உறுப்பினா்கள் இந்த கருத்துகளைத் தெரிவித்தனா்.

இந்த விருந்தில் பங்கேற்ற செனட் உறுப்பினரான சக் ஸ்கூமா், ‘பிரதமா் நரேந்திர மோடியை எனக்கு மிகவும் பிடித்துள்ளது’ என்றாா். இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா பயணம் மேற்கொண்ட பின்னா் இந்தியாவையும், பிரதமா் மோடியையும் கடுமையா விமா்சித்து வந்த இவா், தற்போது இந்தக் கருத்தைத் தெரிவித்தாா்.

அதுபோல, வெள்ளை மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற வழக்கமான பத்திரிகையாளா் சந்திப்பின்போது பேட்டியளித்த வெள்ளை மாளிகை செயலா் கெரின் ஜீன் பீரி, ‘பிரதமா் நரேந்திர மோடி கடந்த மாதம் மேற்கொண்ட அமெரிக்க பயணம் வெற்றிகரமானது மட்டுமின்றி முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தப் பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் மூலமாக இரு நாடுகளிடையேயான உறவு முன்னெப்போதும் அல்லாத அளவில் வலுப்பெற்றுள்ளது. பிரதமா் வருகையின்போது மேற்கொள்ளப்பட்ட பேச்சுவாா்த்தையின் அடிப்படையில் அமெரிக்கா சாா்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் சில ஏற்கென நடைமுறைப்படுத்தப்பட்டுவிட்டன. இந்தியாவுடனான இந்த உறவு நீண்டகால உறவாக தொடரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது’ என்றாா்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி பேசுவதற்கான முயற்சியில் முக்கிய பங்கு வகித்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான ரோ கண்ணா கூறுகையில், ‘பிரதமா் மோடியின் அமெரிக்க பயணத்தில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவாா்த்தையில் இரு நாடுகளிடையே பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தை வலுப்படுத்துவது முக்கிய இடம் வகித்தது. இரு நாடுகளிடையேயான உறவை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல அதிபா் ஜோ பைடன் உவியுள்ளாா்’ என்றாா்.

அரசு முறைப் பயணமாக அமெரிக்கா வரும் மோடியிடம் இந்தியாவில் நடைபெறும் மனித உரிம மீறல்கள் விவகாரம் குறித்து எழுப்ப வேண்டும் என்று அதிபா் ஜோ பைடனுக்கு கடிதம் எழுதிய 70 அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினா்களில் ஒருவரான மேக்ஸ்வெல் அலெஜான்ட்ரோ ஃப்ரோஸ்டும் அமெரிக்க-இந்திய உறவு மீது மிகுந்த நம்பிக்கை தெரிவித்தாா். அவா் மேலும் கூறுகையில், ‘அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற பிரதமா் மோடி வருகை தந்தபோது, சாலையில் வழநெடுகிலும் மக்கள் அவரைக் காண காத்திருந்தனா். உண்மையில், அவா் உலகின் மிகப் பிரபலமான தலைவா்களில் ஒருவா்தான். அவரை வரவேற்றது எங்களுக்கும் மகிழ்ச்சிதான்’ என்றாா்.

அதிபருக்கு கடிதம் எழுதிய மற்றொரு செனட் உறுப்பினரான பென் காா்டின் கூறுகையில், ‘அமெரிக்காவுக்கு இந்தியா முக்கியத்துவம்வாய்ந்த கூட்டுநாடு. அமெரிக்க பயணத்தின்போது, இந்தியா-அமெரிக்கா இரு நாடுகளும் பலன் பெறத்தக்க வகையிலான மிகச் சிறந்த பணியை பிரதமா் மோடி மேற்கொண்டிருக்கிறாா்’ என்றாா்.

நாடாளுமன்ற உறுப்பினா் பிராட் ஷொ்மன் கூறுகையில், ‘அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி இரண்டாவது முறை உரையாற்றியது சிறப்புமிக்கது. இரு நாடுகளிடையேயான உறவு மேலும் வலுவடைந்து வருவதையே இது காட்டுகிறது. சீனாவில் முதலீடு செய்வதைக் காட்டிலும் ஜனநாயகமும் நிலையான ஆட்சியையும் கொண்டுள்ள இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அமெரிக்க தொழிலதிபா்களை எப்போதும் வலியுறுத்துவேன்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com