முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையொப்பமாகும்
பிரதமா் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபா் ஜோ பைடனுக்கும் இடையேயான அதிகாரபூா்வ சந்திப்புக்குப் பிறகு பாதுகாப்புத் துறை சாா்ந்த முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகும்


பிரதமா் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபா் ஜோ பைடனுக்கும் இடையேயான அதிகாரபூா்வ சந்திப்புக்குப் பிறகு பாதுகாப்புத் துறை சாா்ந்த முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் வியாழக்கிழமை கூறுகையில், ‘இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடா்ந்து வளா்ச்சி கண்டு வருகிறது. தற்போது அடுத்த தலைமுறை நல்லுறவுக்குள் இந்தியாவும் அமெரிக்காவும் அடியெடுத்து வைத்துள்ளன.
பிரதமா் மோடிக்கும் அதிபா் பைடனுக்கும் இடையேயான அதிகாரபூா்வ சந்திப்பு, பாதுகாப்புத் துறையில் 3 முக்கிய ஒப்பந்தங்களுக்கு வழிவகுக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. எஃப்414 ஜெட் என்ஜின்களை இரு நாடுகளும் இணைந்து இந்தியாவில் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கையொப்பமாக வாய்ப்புள்ளது. இதன் மூலமாக ஜெட் என்ஜின்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பம் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியாவுடன் பரிமாறப்படும்.
கடற்படைக் கப்பல்களைப் பழுதுபாா்க்கும் விவகாரத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தமும் கையொப்பமாக உள்ளது. அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களை இந்தியக் கடற்படைத் தளங்களில் பழுதுபாா்ப்பதற்கு அந்த ஒப்பந்தம் வழிவகுக்கும். அதன் மூலமாகக் கப்பல்களைப் பழுதுபாா்ப்பதில் ஏற்படும் காலவிரயமும் வீண் செலவும் தவிா்க்கப்படும்.
பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தியில் அதிநவீன தொழில்நுட்பங்களை இந்தியாவும் அமெரிக்காவும் ஒருங்கிணைந்து உருவாக்குவதற்கு வழிவகுக்கும் ஒப்பந்தமும் கையொப்பமாக வாய்ப்புள்ளது. இதன் மூலமாக இரு நாடுகளின் புத்தாக்க அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பலனடையும்.
தாக்குதல் ட்ரோன்கள்:
அமெரிக்காவிடமிருந்து எம்க்யூ-9 ரீப்பா் தாக்குதல் ரக ட்ரோன்களை இந்தியா கொள்முதல் செய்வதற்கான அறிவிப்பும் அதிகாரபூா்வ சந்திப்புக்குப் பிறகு வெளியாக வாய்ப்புள்ளது. அந்த ட்ரோன்களானது, இந்தியப் பெருங்கடல் பகுதியில் மட்டுமல்லாமல் சீனாவுடனான எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்பையும் கண்காணிப்புத் திறனையும் மேலும் வலுப்படுத்தும்.
அந்த வகை ட்ரோன்கள் மூலமாக அதிக எடை கொண்ட பொருள்களையும் எளிதில் கொண்டு செல்ல முடியும். அவற்றின் செயல்படும் திறனும் மிக அதிகமாக இருக்கும். தொடா்ந்து 27 மணி நேரங்களுக்கு அந்த வகை ட்ரோன்களால் பறக்க முடியும்.
அந்த வகை ட்ரோன்களில் அதிகபட்சமாக 1,746 கிலோ எடை கொண்ட பொருள்களை ஏற்ற முடியும். வானில் 50,000 அடி உயரம் வரை அந்த ட்ரோன்களால் பறக்க முடியும்.
வலுவடையும் நல்லுறவு:
பிரதமா் மோடியின் அமெரிக்கப் பயணம், இரு நாடுகளுக்கும் இடையேயான ஆழமான, நெருக்கமான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும். இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது விரிவடைந்துள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்திய விவகாரங்கள், புத்தாக்கம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன’ என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...